புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கான சர்வதேச மாநாடு-

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கான சர்வதேச மாநாடு அடுத்த வருடம் ஜூலை மாதம் மொறீசியஸில் நடைபெறவுள்ளது. சென்னை ஆசியவியல் நிறுவனம், மொறீசியஸ் நாட்டின் மகாத்மா காந்தி நிறுவனம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகள் இணைந்து இந்த மாநாட்டை நடத்துகின்றன. இது குறித்து சென்னை ஆசியவியல் நிறுவனத்தின் இயக்குநர் ஜி.ஜான் சாமுவேல் கூறுகையில், ஏறத்தாழ 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். இப்போதும் கல்வி, வேலை, ஆய்வு, வணிகம் போன்ற பல்வேறு அடிப்படைக் காரணங்களுக்காக அமெரிக்கா, வளைகுடா நாடுகள், தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர். இவ்வாறு சென்ற தமிழர்களின் வாழ்வியல் நிலை, பண்பாட்டுக் கூறுகள் போன்றவை புலம்பெயர்ந்து சென்ற நாடுகளில் அந்த மக்கள் மத்தியில் எவ்வாறு உள்ளன என்பதை விரிவாக விவாதிக்கும் நோக்கிலும், அவற்றைப் பதிவுசெய்து ஆராய்ச்சிகளில் ஈடுபடும் நோக்கிலும் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. 2014-ஆம் ஆண்டு ஜூலை 16, 17, 18 ஆகிய திகதிகளில் மாநாடு நடைபெறும். மாநாட்டில் சுமார் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பல்வேறு அறிஞர்கள் கலந்து ஆய்வுரைகள் வழங்க உள்ளனர். உலக வங்கியின் மூத்த ஆலோசகரும், யுனெஸ்கோ நிறுவனத்தின் இயக்குநருமான ஆறுமுகம் பரசுராமன் மாநாட்டு அமைப்புக் குழுவின் தலைவராக உள்ளார். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஈரான், ஈராக், அவுஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள் இதில் பங்கேற்க உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

மாநாட்டை புறக்கணிக்குமாறு ஏனைய நாடுகளிடம் கோரவில்லை-கென்யா-

கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய நாடுகள் மாநாட்டை புறக்கணிக்குமாறு தாம் ஏனைய ஆபிரிக்க நாடுகளிடம் கோரவில்லை என கென்யா அறிவித்துள்ளது. தமது நாடு கொழும்பு மாநாட்டை புறக்கணிக்குமாறு ஏனைய ஆபிரிக்க நாடுகளை வலியுறுத்தியதாக வெளியான செய்திதாள் தகவலை கென்யா மறுத்துள்ளது.  இதேவேளை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை மாநாட்டில் பங்கேற்ககூடாது என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.வி தங்கபாலுவும் கோரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே தமிழக காங்கிரஸ் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கோரிக்கையுடன் தங்கபாலுவும் இணைந்துள்ளார்.
 
கூட்டமைப்பின் வட மாகாண சபை பணிகள் வெள்ளியன்று ஆரம்பம்-

வடமாகான சபைக்கு தெரிவான தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை தமது பணிகளை உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய கட்டடத்தில் உறுப்பினர்கள் தமது பணிகளை ஆரம்பிக்க உள்ளனர். யாழ் கைத்தடியில் நேற்றையதினம் இடம்பெற்ற கலாசார நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய வட மாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் இதனை தெரித்துள்ளார்.

பொதுநலவாய மாநாட்டில் மலேசிய பிரதமர் பங்கேற்பு-

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்களின் மாநாட்டில் மலேசியா பங்கேற்கும் என உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மலேசியா சார்பில் மாநாட்டில் பிரதமர் நஜிப் டன் ரசாக் கலந்து கொள்வார் என மலேசிய வெளிவிவகார செயலக தென்னாசிய பிரிவு உதவி செயலாளர் மசிதா அஹமட் தெரிவித்துள்ளார். 23 பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு நவம்பர் 15ம் திகதி தொடக்கம் 17ம் திகதி வரை கொழும்பில் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் இலங்கையின் மனித உரிமைகள் மீறல் நிலையை கருத்திற்கொண்டு மலேசியா மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என பல அமைப்புக்களாலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனினும் மாநாட்டை புறக்கணிக்காது அதில் கலந்து கொள்ள மலேசிய பிரதமர் தீர்மானித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கல்வி முறைமை மாற்றியமைக்கப்பட வேண்டும்

நாட்டை மாற்றுவதற்கு நாட்டின் கல்வி முறைமையை மாற்றியமைக்க வேண்டியது அவசியம் என அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கொழும்பு புறநகர் தெஹிவளையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு  உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டில் தற்போது உள்ள கல்வி முறைமையானது மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்க அதிபர் உறுதி-

வடமாகாணத்தில் ஒருவருட ஒப்பந்த அடிப்படையில் அரச நிறுவனங்களில் நியமிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டபோதும் வவுனியாவுக்கு அந்த நியமனங்கள் வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது இது தொடர்பில் வவுனியா அரசாங்க அதிபர் கருத்துத் தெரிவிக்கையில், குறித்த பட்டதாரிகளுக்கு விரைவில் நிரந்தர நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அரச நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு அதில் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்படும் என்றும் அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாடுகள் மீது பிரதம நீதியரசர் சாடல்-

இலங்கைக்கு மனித உரிமைகள் தொடர்பில் கற்றுத் தந்தது வெளிநாடுகள் அல்லவென பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் தீர்ப்பதன் பொருட்டு, கண்டியில் புதிதாக அமைக்கப்பட்ட மாவட்ட நீதிமன்றத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இன்று எமது நாட்டின் அடிப்படை உரிமைகள் குறித்து பல்வேறு நாடுகள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. எனினும், எமது நாட்டுக்கு மனித உரிமைகள் தொடர்பில் கற்றுத் தந்தது வெளிநாட்டுகள் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை குறித்து இந்தியா தொடர்ந்தும் கரிசனை-

ஐக்கிய இலங்கை குறித்து இந்தியா தொடர்ந்தும் கரிசனை கொண்டுள்ளதாக இந்திய தெரிவித்துள்ளது. இலங்கைக்கான இந்திய தூதுவர் வை.கே சிங்ஹா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் அரசியல் ஸ்திரத் தன்மைக்கு இந்தியா தொடர்ந்து உதவியளிக்கும். இதன் ஊடாகவே ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்ப முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மன்னார் இளைஞன் சவூதியில் வாகன விபத்தில் பலி-

மன்னார் பெற்றாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 20ஆம் திகதி சவூதி அரேபியா டமாம் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 28வயதான குலசிங்கம் சுரேஸ்குமார் என தெரியவந்துள்ளது. சுரேஸ்குமார் கடந்த 2006ஆம் ஆண்டு தொழில்தேடி சவூதி அரேபியா சென்றுள்ளார். அங்கு கடையொன்றிலும் சாரதியாகவும் கடமையாற்றி வந்துள்ளார். வெளிநாடு சென்று சுமார் 7 வருடங்களான நிலையில் இவர் மீண்டும் எதிர்வரும் நவம்பர் மாதம் 28ஆம் திகதி நாடு திரும்பவிருந்தார். இந்நிலையில் கடந்த 20ஆம் திகதி பகல் டமாம் நகரில் வாகன விபத்தில் சுரேஸ் குமார் உயிரிழந்துள்ளார். அவரின் சடலத்தை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

யாழில் குடும்பஸ்தர் குத்திக் கொலை-

யாழ். ஆறுகால்மடம் பழம் வீதியிலுள்ள வீடொன்றில் குடும்பஸ்தர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் 3 பேரை யாழ் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ஒரு குழந்தையின் தந்தையான தங்கராசா சரத்பாபு (வயது  29) என்பவரே நேற்று கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் மதுபோதையில் மனைவியை கொடுமைப்படுத்தி வருவதாகவும், மனைவியின் தரப்பினர்களினால் இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் தமது ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.