மானிப்பாய், போறான்தோட்டம் பகுதியில் மக்கள் சந்திப்பு-

Captureயாழ்.மானிப்பாய் போறான்தோட்டம் வைரவர்கோவில் முன்றலில் நேற்றுமாலை பொதுமக்கள் சந்திப்பு நிகழ்வொன்று இடம்பெற்றது. மருதடி விநாயகர் சனசமூகநிலைய தலைவர் ஆ.வொஷிங்டன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பெருந்தொகையான பெண்களும், ஆண்களுமாக கலந்து கொண்டிருந்தார்கள். இந்நிகழ்வில் வலி தென்மேற்கு பிரதேசசபை உறுப்பினர் கௌரிகாந்தன், வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டு தற்போதைய நிலைமைகள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தல்களை வழங்கினர். இதன்போது மக்கள் தங்களுடைய தேவைகள் மற்றும் பிரச்சினைகள் சம்பந்தமாக எடுத்துக் கூறினார்கள். தங்களது அதிகாரத்துக்கு உட்பட்ட அளவிற்குள் செய்யக்கூடிய விடயங்களை அவர்களுக்குச் செய்வதாக வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தர்ர்த்தன் உறுதியளித்தார். அத்துடன் பிரதேச சபையின் விடயங்கள் சம்பந்தமாக பிரதேசசபை உறுப்பினர் கௌரிகாந்தன் அவர்கள் எடுத்துக் கூறினார். அத்துடன் இன்றைய அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் மாகாணசபையின் அதிகாரங்கள் சம்பந்தமாகவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளின் ஒற்றுமையை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியம் குறித்தும் தர்மலிங்கம் சித்தார்த்தன் மக்களுக்கு விளக்கிக் கூறினார்.

பாதுகாப்பு செயலரின் பேச்சு நகைப்பிற்குரியது-சுரேஷ் எம்.பி.-

பொலிஸ் அதிகாரத்தை பாதுகாப்புச் செயலாளர் தனது கையில் வைத்துக்கொண்டு வட மாகாணத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் கடமை முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் பொறுப்பாகும் எனக் கூறுவது நகைப்பிற்குரிய விடயமாகும். எனவே இவ் அதிகாரங்களை எழுத்து மூலம் முதலமைச்சருக்கு வழங்கி அவரது கடமையை செய்ய வழிவிட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மாவீரர்களின் துயிலும் இல்லங்களை தரைமட்டமாக்கியது சர்வதேச சட்டங்களை மீறிய செயலாகும் சர்வதேச சட்டங்களுக்கு அமைய கல்லறைகளை இடிக்க முடியாது. இறுதியுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களுக்காகவும் போராளிகளுக்காவும் நினைவுச்சின்னம் கட்டப்பட வேண்டியது அவசியமானதாகும் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி குறிப்பிட்டுள்ளார்.

வடக்கிலிருந்து படையினரை அகற்றுமாறு கோர முடியாது-பாதுகாப்புச் செயலர்-

வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுமாறு யாரும் கோரமுடியாது. வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மக்கள் வாக்களித்தார்கள் என்பதற்காக இராணுவத்தை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு அங்கீகாரம் வழங்கினார்கள் என்று கருதமுடியாது. நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதானத்தையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உதவ வேண்டும். வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை நாம் படிப்படியாக விடுவித்து வருகின்றோம். யுத்தம் முடிவடைந்ததற்குப் பின்னர் குறுகிய காலத்திற்குள் இத்தகைய பணியினை நாம் மேற்கொண்டுள்ளோம். இது குறித்து அறியாது தமிழகத்திற்கு சென்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பேசுகின்றார் ஒரே இரவில் முழு இடத்தையும் நாம் விடுவித்து விட முடியாது என்று பாதுகாப்புச் செயலர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தேசிய தமிழ் பத்திரிகைகளின் ஆசிரியர்களை நேற்று பாதுகாப்பு அமைச்சில் சந்தித்தபோதே அவர் இவற்றை கூறியுள்ளார்.

பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க கூடாதென சட்டசபையில் தீர்மானம்-

இலங்கையின் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்று கோரி, தமிழக சட்டசபையில் தீhமானம் நிறைவேற்றப்பட்டுள்ளது தமிழக முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த இந்த தீர்மானம் இன்றுமுற்பகல் நிறைவேற்றப்பட்டுள்ளது இலங்கையில் சிங்களவர்களுக்கு இணையாக தமிழர்கள் நடத்தப்படவேண்டும் உட்பட்ட விடயங்கள் இந்த தீhமானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சர்வதேச விசாரணைகளை ஏற்கமுடியாது – அமைச்சர் ஜி எல் பீரிஸ்-

எந்த ஒரு சர்வதேச விசாரணையையும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார் இலங்கை தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஏற்கனவே உள்ளக விசாரணைகள் நடத்தப்படுவதாகவும், எனவே சர்வதேச விசாரணைக்காக யாரும் நியாயம் கூறமுடியாது என்று அமைச்சர் பீரிஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வடக்குக்கு பயணம் செய்வேன் – கெமரோன்-

பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் தாம் பங்கேற்கும்போது இலங்கையின் வட பகுதிக்கும் செல்லப்போவதாக பிரித்தானிய பிரதமர் தெரிவித்துள்ளார் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரோனை நேற்று மியன்மாரின் எதிர்க்கட்சி தலைவி அங் சாங் சுகி லண்டனில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார் இதன்போது கருத்துரைத்த கெமரோன், பிரித்தானிய எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் தாம் இலங்கைக்கு செல்வது தொடர்பிலான தீhமானத்தை நியாயப்படுத்தியுள்ளார் இந்நிலையில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கு செல்லும்போது தாம் இலங்கை அரசுடன் தீவிரமான பேச்சுக்களிலும் ஈடுபடப்போவதாக கெமரோன் குறிப்பிட்டுள்ளார் இலங்கையின் மனித உரிமைமீறல்கள் தொடர்பில் திருப்தியில்லை போருக்கு பின் அங்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் திருப்தியில்லை இப்பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை அரசுடன் தெளிவான பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளேன். பொதுநலவாய நாடுகளின் கூட்டத்துக்கு செல்லாது போனால் இவ்விடயங்கள் குறித்து யாருடனும் பேசமுடியாது என கெமரொன் கூறியுள்ளார். இதன்போது தமது கருத்தை வெளியிட்ட அங் சாசுகி பிரதமர் கெமரோன், இலங்கை செல்லும்போது அரசுடன் மாத்திரமன்றி பிரச்சினையில் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் சந்தித்து பேசவேண்டும் என்று கேட்டுகொண்டார் இதனை ஏற்றுக்கொண்ட பிரதமர் கெமரோன், இதன்பொருட்டே தாம் போர் இடம்பெற்ற வடக்குக்கும் செல்லவுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

கூட்டமைப்பின் உயர் சபை கூட்டப்பட வேண்டும்-சிவசக்தி ஆனந்தன் எம்.பி-

வடமாகாண சபையின் அமர்வு ஆரம்பகும் முன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர் சபை அவசரமாகக் கூட்டப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழரசுக் கட்சியின் தலைமை எடுக்கும் தன்னிச்சையான முடிவுகளால் கூட்டமைப்பின் ஒற்றுமை சிதைக்கப்படுவதுடன், மக்கள் மத்தியிலும் குழப்ப நிலை உருவாகியிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். வடமாகாண சபையில் கூட்டமைப்பு பெற்றுக்கொண்ட வெற்றியை எவ்வாறு தமிழரசுக் கட்சியின் வெற்றியாக மாற்றுவது என்பதும், எதிர்காலத்தில் தமிழரசுக் கட்சியை முன்னேற்றுவதற்கு இதனை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதையே தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் சிந்தித்துச் செயற்படுகின்றார்கள். Read more