Header image alt text

யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களின் கூட்டம்-

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களின் கூட்டம் இன்றுமாலை யாழ். நகரில் நடைபெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், எம்.ஏ.சுமந்திரன், எஸ்.சரவணபவன் ஆகியோரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.கே.சிவாஜிங்கம் மற்றும் ஹென்ரி மகேந்திரன், ராகவன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். இக்கூட்டத்தின்போது தற்போதைய அரசியல் நிலைமைகள் பற்றி; விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், பொதுநலவாய நாடுகளின் மகாநாடு சம்பந்தமான விடயங்கள் தொடர்பிலும் மிகவும் ஆழமாக ஆராயப்பட்டது. அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவின் கூட்டத்தினை கொழும்பில் நடத்துவதென்றும் இக்கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டது.

தனது சம்பளத்தை யுத்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பங்கிட்டுக் கொடுக்கவுள்ளதாக குறிப்பிட்டார் திரு.சித்தார்த்தன் .

Sithar ploteவட மாகாணசபையின் கன்னி அமர்வு வடமாகாண சபையின் புதிய கட்டடத்தில் இன்றுகாலை ஆரம்பமானது. இதன்போது தவிசாளர், உபதவிசாளர் தெரிவுகள் இடம்பெற்றன. இதில் தவிசாளராக திரு. கந்தையா சிவஞானமும் உபதவிசாளராக திரு. அன்ரனி ஜெகநாதனும் தெரிவுசெய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன், எதிர்க்கட்சி தலைவர் உட்பட மாகாண சபை உறுப்பினர்கள் தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். இங்கு உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினரும் புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், மாகாண சபையின் செயற்பாடுகள் தொடர்பில் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதுடன், இந்த மாகாண சபைக்கூடான தனது சம்பளத்தை யுத்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பங்கிட்டுக் கொடுக்கவுள்ளதாகவும் அதுபோல் மற்றைய அங்கத்தவர்களும் மனம்வைத்து உதவினால் சுமார் 60 குடும்பங்கள் தங்கள் வாழ்க்கையை கொண்டுசெல்லக் கூடியதாய் இருக்குமென்றும் குறிப்பிட்டார்.

வட மாகாண சபையின் கன்னி அமர்வு-

யாழ். கைதடியில் அமைக்கப்பட்டுள்ள வட மாகாணசபையின் புதிய கட்டிடம் மற்றும் பெயர்ப்பலகையை வட மாகாண முதலமைச்சர் சிவி. விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோர் இன்றுகாலை 8மணியளவில் வைபவரீதியாக திறந்து வைத்துள்ளனர். இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை அமைச்சர்களும், உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர். இதனையடுத்து வடக்கு மாகாணசபையின் கன்னி அமர்வு வடமாகாண சபையின் புதிய கட்டடத்தில் இன்றுகாலை 9.30 மணிக்கு மௌன அஞ்சலியுடன் ஆரம்பமானது. இதன்போது தவிசாளர், உபதவிசாளர் தெரிவுகள் இடம்பெற்றன. அதில் தவிசாளாராக கந்தையா சிவஞானமும் உபதவிசாளராக அன்ரனி ஜெகநாதனும் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன், எதிர்க்கட்சி தலைவர் உட்பட மாகாண சபை உறுப்பினர்கள் தமது கருத்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து தவிசாளர் தலைமையில் முதலாவது அமர்வு 12மணிக்கு நிறைவடைய இரண்டாவது அமர்வு எதிர்வரும் நவம்பர் 11ஆம் திகதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைத் தனிமைப்படுத்த முடியாது-பாரதீய ஜனதா கட்சி-

எந்த விசயத்திலும் யாராலும் இந்தியாவை தனிமைப்படுத்த முடியாது என தமிழக பாரதீய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடத்தப்பட கூடாது. மீறி நடத்தப்பட்டால் இலங்கையின் தலைமை ஏற்று 2 ஆண்டுகள் செயல்பட வேண்டிவரும். எனவே இந்தியா இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது என்று பா.ஜனதா வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழக சட்டசபையில் அனைத்து கட்சிகளின் ஆதரவோடு இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றியதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம். தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் தீர்மானம் நிறைவேற உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றோம். இந்நிலையில் தலைநகர் டெல்லியிலிருந்து இலங்கை தூதுவர் பிரசாத் காரியவாசம் வெளியிட்டுள்ள கருத்து கண்டனத்துக்குரியது. எல்லா முனையிலும் தோற்றுப்போன மத்திய அரசாங்கத்தால் எதுவும் செய்ய முடியாது என்ற தைரியத்தில்தான் அவர் பேசியிருக்கிறார். எந்த விசயத்திலும் யாராலும் இந்தியாவை தனிமைப்படுத்த முடியாது. பொருளாதாரம், மனித வளம், அறிவியல் வளர்ச்சி என அனைத்து துறைகளிலும் நம்மை சுற்றியே மற்ற நாடுகள் உள்ளன. சீனா, பாகிஸ்தானை நினைத்து மத்திய அரசு பயப்படுகிறது. இதனால் இலங்கை சீனாவின் தளமாக மாறி வருவதை மத்திய அரசு உணர வேண்டும். வெளிநாட்டு கொள்கையில் துணிச்சலும், சாதுர்யமும் வர வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

வெளிநாட்டுகளில் தொழில் புரிவோர் நலன்கருதி புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்-

வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் ஏதேனும் பாதுகாப்பற்ற நிலைமையை எதிர்நோக்கியிருப்பின், அது குறித்து உடனடியாக அறிவிக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மக்களிடம் கேட்டுள்ளது. 24 மணித்தியாலமும் இயங்குகின்ற தமது அவசர தொலைபேசி இலக்கங்களுக்கு அத்தகைய நிலைமைகளை அறிவிக்க முடியும் என பணியகத்தின் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொது முகாமையாளருமான மங்கல ரந்தெனிய குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் 0112 879900 அல்லது 0112 879902 என்ற இலக்கங்களுடன் தொடர்புகொண்டு அத்தகைய நிலைமைகளை தெரிவிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்க முதலமைச்சருக்கு அதிகாரம் இல்லை-பாதுகாப்பு செயலர்-

பொலீசாருக்கு உத்தரவுகளை பிறப்பிக்க, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு அதிகாரம் இல்லை என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற தமிழ் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இதனைத் கூறியுள்ளார். ஏனைய மாகாணங்களின் முதலமைச்சர்கள் போல, வடமாகாண முதலமைச்சருக்கும் காவற்துறையுடன் இணைந்து செயற்பட முடியும் என பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் வடக்கிற்கு விஜயம்-

ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் வடக்கிற்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டேவிட் டாலீயே வடக்கிற்கு வருகை தரவுள்ளார். மேலும் இவர் மன்னார் வவுனியா முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்தவாரம் வரவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களை டாலீ நேரில் பார்வையிடவுள்ளதுடன் இவ்வாறான உதவித் திட்டங்களில் நன்மை பெற்றுக் கொண்டவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடவும் உள்ளார்.