பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதில்லை-கூட்டமைப்பு-
இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. நேற்றுமாலை யாழ். நகரில் இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். பொதுநலவாய மாநாட்டை மற்றும் அதில் கலந்துகொள்ளும் நாடுகளை புறக்கணிக்கவில்லை. இலங்கையில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டையே எமது கட்சி புறக்கணிக்கவுள்ளது. இலங்கையின் இனப் படுகொலைக்கு எதிராக சர்வதேச அளவில் குரல் எழுப்பப்பட்டுவரும் நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் இந்த மாநாட்டை புறக்கணிக்க தீர்மானித்துள்ளது. எனினும் மாநாட்டில் கலந்துகொள்ள இலங்கை வரும் சர்வதேச தலைவர்களுடன் மாநாட்டிற்கு வெளியாக எமது கட்சி சந்தித்து கலந்துரையாடும். மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள தலைவர்களுக்கு, கூட்டமைப்பு இலங்கையின் தற்போதைய நிலைமைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கடிதமொன்றை அனுப்பிவைக்க தீர்மானித்துள்ளது என மாவை சேனாதிராஜா மேலும் கூறியுள்ளார்.
பொதுநலவாய மாநாடு; வருகைக்காக 13 நாடுகள் உறுதியளிப்பு-
கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பது குறித்து 13 நாடுகளின் தலைவர்களே இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகள் அமைப்பில் 53 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இவற்றில் 32 நாடுகள் சிறிய நாடுகளாகும். அதன்படி பொதுநலவாய மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கக் கூடாது என இந்தியாவில் எதிர்ப்பலைகள் எழுந்துள்ள நிலையில் பிரதமர் மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார் என இந்திய தகவல்கள் கூறுகின்றன. மேலும் உலகில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ள நாடுகளில் பிரதான நாடுகளில் ஒன்றாக இருக்கும் இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ளப்போவதில்லை என கனடா அறிவித்துள்ளது. எனினும் பிரித்தானியா தலைமையிலான அரச தலைவர்கள் கொழும்பு மாநாட்டில் பங்கேற்கின்ற போதிலும் பொநதுநலவாய மாநாட்டில் இலங்கை அரசுமீது விமர்சனங்களையும் அழுத்தங்களையும் கொடுப்பதற்குமே கொழும்பு வருவதாக தெரிவித்துள்ளனர்.
அவுஸ்திரேலிய அகதி முகாமில் துஸ்பிரயோகம்-
அவுஸ்திரேலியாவில் உள்ள அகதி முகாம்களில் பாரிய பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தகவல் அறியும் சுதந்திரத்தின் கீழ் கிடைக்கப்பெற்ற தகவல்களை மேற்கோள்காட்டி, த கார்டியன் பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. பலவந்த பாலியல் வன்புணர்வுகள், மற்றும் பாலியல் இம்சைகள் குறித்த முறைபாடுகள் பல பதிவாகியுள்ளன. 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல், 2011ம் ஆண்டு மேமாதம் வரையில் இவ்வாறான 34 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எனினும் 2011ம் ஆண்டு மே மாதத்தின் பின்னர், இது சம்பந்தமாக அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அதிகாரிகள் எந்த பதிவுகளையும் மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டம் நடத்திய 200ற்கும் மேற்பட்டோர் கைது-
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, நேற்றையதினம் தமிழகம் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னையில் உள்ள பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகரகம் மற்றும் மத்திய அரசாங்க அலுவலகங்களை அவர்கள் முற்றுகையிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பொதுநலவாய நாடுகளில் இருந்து இலங்கையை நீக்குமாறு அவர்கள் இதன்போது வலியுறுத்தினர். அத்துடன் இலங்கையை தொடர்ந்தும் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அங்கத்துவ நாடாக கொண்டுள்ளமைக்கு எதிராக, பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகரகத்துக்கு முன்னதாக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
மாநாட்டில் பங்கேற்கக் கூடாது-மலேசிய எதிர்க்கட்சி வலியுறுத்தல்-
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் மலேசியா கலந்து கொள்ளக்கூடாது என அந்நாட்டு எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கை மனித உரிமை நிலைமைகளை கருத்திற்கொண்டு மலேசிய அரசாங்கம் இலங்கையில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என அந்நாட்டு எதிர்க்கட்சியான மலேசியாவின் ஜனநாயக செயற்பாட்டுக் கட்சி இந்த கோரிக்கையை விடுத்தள்ளது. இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின்போது பாரியளவில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக அந்தக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. இந்த மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம் காத்திரமான விசாரணைகளை நடத்தத் தவறியுள்ளதாகவும் அது குறிப்பிட்டுள்ளது. உரிய விசாரணை நடத்தப்படாமைக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் மலேசியா அரசாங்கம் அமர்வுகளை பகிஷ்கரிக்க வேண்டும் என எதிர்க்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.