முல்லைத்தீவில் குண்டு வெடிப்பு-
முல்லைத்தீவில் குண்டொன்று வெடித்துள்ளது. முல்லைத்தீவு பி.டப்ளியு.டீ வீதியிலுள்ள முல்லைத்தீவுப் பொலிஸ் நிலையத்திற்கு பின்னால் உள்ள காணியிலேயே இந்த வெடிப்பு இன்றுமுற்பகல் 11.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மேற்படி காணியில் பொலிஸார் இன்று சிரமதானப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது குப்பைக்கு தீ மூட்டும்போதே குப்பைக்குள் இருந்து குண்டு வெடித்துள்ளது. பழைய மோட்டார் குண்டே வெடித்;துள்ளது. இதனால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லையென தெரிவித்த முல்லைத்தீவு பொலிஸார் அருகிலிருந்த ராயப்பு தேவாலயத்திற்கு சிறு சேதம் ஏற்பட்டதாக கூறியுள்ளனர்.
யாழ் நோக்கி பயணித்த பஸ் தீக்கிரை-
யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அதிசொகுசு தனியார் பஸ் ஒன்று நேற்று நள்ளிரவு தீக்கிரையாகியுள்ளது. வெள்ளவத்தையிலிருந்து சென்ற இந்த பஸ் புத்தளம் மாதம்பே கலஹிடியாவ 67ஆம் வளைவில் வைத்து தீக்கிரையாகியுள்ளது. தீ அனர்த்தம் ஏற்படும்போது பஸ்ஸில் 25 பயணிகள் வரையில் இருந்துள்ள போதிலும் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூன்று மணித்தியாலயங்கள் இந்த பஸ் தீப்பற்றி எரிந்துள்ளது. தொழிநுட்ப கோளாறே இந்த விபத்துக்கு காரணமென பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால் கொழும்பு – சிலாபம் வீதியின் போக்குவரத்து 3 மணத்தியாலங்கள் பாதிக்கப்பட்டிருந்தபோதும் பின்னர் வழமைக்கு திரும்பியுள்ளது.
மட்டக்களப்பில் காணாமற்போன சிறுவன் யாழில் மீட்பு–
மட்டக்களப்பில் காணாமற்போனதாகக் கூறப்பட்ட சிறுவன் யாழ். பஸ் நிலையத்தில் வைத்து மீட்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பெரிய கல்லாறைச் சேர்ந்த இராமநாதன் சானுஜன் என்ற சிறுவன் கடந்த 20ஆம் திகதி காணமற்போயிருந்தார். இந்நிலையில், இச்சிறுவன் காணாமல் போனமை தொடர்பாக பத்திரிகையில் புகைப்படத்துடன் வந்திருந்த செய்தியினை சாவகச்சேரி பிரதேச வலுவூட்டல் ஆலோசகர் கத்தரித்து வைத்திருந்துள்ளார். மேற்படி ஆலோசகர் நேற்று யாழ்.பஸ் நிலையத்திற்கு வந்தபோது, தான் வைத்திருந்த படத்திற்குரிய சிறுவன் தனியாக நிற்பதை அவதானித்து, அவனை மீட்டு யாழ் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். யாழ் பொலிஸார் சிறுவன் குறித்து மட்டக்களப்பு பொலிஸாருக்கு அறிவித்ததுடன், சிறுவர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய பின் மட்டக்களப்பு பொலிஸாரிடம் சிறுவனை ஒப்படைப்பதாக அறிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் போர்க் கப்பல்கள் கொழும்பு வருகை-
பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான இரு கப்பல்கள் நான்கு நாள் நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளன. இவ்விரு கப்பல்களும் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளன. பயிற்சிகளுக்காகவே இந்த இரண்டு போர்க் கப்பல்கள் இன்றுகாலை இலங்கை வந்துள்ளன. இந்த கப்பல்களில் இரு நாடுகளினதும் கடற்படையினர் கூட்டுப் பயிற்சியை மேற்கொள்ளவுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய கூறியுள்ளார். பாகிஸ்தான் மற்றும் இலங்கை கடற்படையினருக்கு இடையிலான நற்புறவை வலுப்படுத்துவது இதன் நோக்கமென்று கூறப்படுகின்றது.
போர் விமானங்களை இலங்கைக்கு விற்க பாகிஸ்தான் முடிவு-
சீன அரசின் ஒத்துழைப்போடு தயாரிக்கப்பட்ட அதி நவீனரக ஜே.எப்-17 என்ற போர் விமானங்களை அடுத்த வருடத்திலிருந்து இலங்கை போன்ற நாடுகளுக்கு விற்பனை செய்ய பாகிஸ்தான் அரசு முடிவெடுத்துள்ளதாக கேஷன்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவுடன் இணைந்து 42 ஜே.எப்-17 ரக விமானங்கள் பாகிஸ்தானால் உருவாக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் விமானப்படைக்கு அடுத்தவருடம் இந்த ரக விமானங்களை 5 லிருந்து 7 வரை விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இலங்கை, குவைட்;, கட்டார் மற்றும் இதர நட்பு நாடுகளுடன் இதற்கான பேச்சுகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அந்த செய்தி மேலும் கூறியுள்ளது. பாகிஸ்தான் பாதுகாப்பமைச்சு இந்த போர் விமானங்களை அடுத்த வருடத்திற்குள் விற்பனை செய்து விடலாம் என்று நம்பப்படுகின்றது.
இலங்கை மாநாட்டில் குர்சித் பங்கேற்பது உறுதி-
இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பங்கேற்பது உறுதியாகியுள்ளது. தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சல்மான் குர்ஷித் இதனை தெரிவித்துள்ளார். மாநாட்டில், பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இலங்கைத் தமிழர் பிரச்சினை இந்தியாவுக்கு மிக முக்கியமான ஒன்று என்று தெரிவித்துள்ள குர்ஷித், மாநாட்டில் கலந்து கொள்ளாமல் போனால் தமிழக மீனவர் பிரச்சினையை எப்படி எழுப்புவது என்றும் வினவியுள்ளார். பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பெயரளவில்கூட பங்கேற்க கூடாது என தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியுள்ள நிலையில் குர்ஷித்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொழும்பு – கட்டுநாயக்கா அதிவேக நெடுஞ்சாலை திறந்துவைப்பு-
கொழும்பு – கட்டுநாயக்கா அதிவேக நெடுஞ்சாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்றுமுற்பகல் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த அதிவேக நெடுஞ்சாலையை இன்று காலை 9.47 க்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பேலியகொட நுழைவாயிலில் வைத்து வாகனப் போக்குவரத்திற்காக அங்குரார்ப்பணம் செய்து வைத்துள்ளார்.
ஷிரானி திலகவர்தன பதில் பிரதம நீதியரசராக சத்தியப்பிரமாணம்-
உயர் நீதிமன்ற நீதியரசர் ஷிரானி திலகவர்தன பதில் பிரதம நீதியரசராக ஜனாதிபதி முன்னிலையில் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். இதேவேளை, நீர்ப்பாசனம் மற்றும் விவசாய சிந்தனைகள் எனப்படும் ‘நில் தியவர கெத் யாயட’ என்ற நூலின் பிரதி நேற்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. நீர்பாசனம் மற்றும் விவசாய அமைச்சராக தற்போதைய சபாநாயகர் சமல் ராஜபக்ஸ பதிவிவகித்த காலக்கட்டத்தில் அவர் ஆற்றிய சேவைகள் பாராட்டும் வகையிலேயே இந்த நூலினை நிமல் வீரதுங்க எழுதியுள்ளார். இதன்போது தேசிய நீர்பாசன துறையை பாதுகாக்கும் குழு உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.