வலி. வடக்கில் கூட்டமைப்பு பிரதிநிதிகள் மற்றும் ஊடகத்தினருக்கு அச்சுறுத்தல்-

யாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள கட்டுவன் பகுதியில் இராணுவத்தினரால் வீடுகள் உடைக்கப்படுவதாக ஊர் மக்களால் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றுமுற்பகல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சரவணபவன், வட மாகாணசபை உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், பா.கஜதீபவன், வலி.தெற்கு பிரதேசசபைத் தலைவர் பிரகாஸ் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் சிலரும், ஊடகவியலாளர்களும் அங்கு சென்று பார்வையிட்டுள்ளனர். இதன்போது அந்தப் பகுதிக்குப் பொறுப்பான பிரிகேடியர் சில இராணுவத்தினருடன் அங்கு வந்தநிலையில் வீடுடைக்கும் செயற்பாடு முற்றிலும் தவறானதென அவருக்கு சுட்டிக்காட்டப்பட்டது. இதன்போது நீண்டநேரம் அவருடன் தர்க்கமும் ஏற்பட்டது. இதனையடுத்து அந்த பிரிகேடியர் தான் கட்டளைகளை நிறைவேற்றுவதாகவும், இதுபற்றி கதைப்பதென்றால் மேலிடத்தில் கதைக்கும்படியும் கூறினார். இதேவேளை அப்பகுதி நிலைமைகளை ஊடகத்தினர் படமெடுத்த நிலையில் இங்கு படமெடுக்கக் கூடாது இங்கு வந்து படமெடுத்தது தவறு என்று அந்த பிரிகேடியர் எச்சரித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவருடன் வந்த படையினர் புகைப்படக் கருவிகளையும், கையடக்கத் தொலைபேசிகளையும் பறித்து படங்களை அழித்துவிட்டுச் சென்றுள்ளனர்.