மீண்டும் இனங்களிடையே முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும். இனவாதத்திற்கு சாதகமாக அமைந்துவிடும். அமைச்சர் வாசுதேவ நாணயக்கார –

அரசாங்கத்தின் தலையீட்டுடன் தொகை தொகையாக வட மாகாணத்தில் சிங்கள மக்களை குடியேற்றுவதை எதிர்க்கின்றேன். ஆனால், சிங்கள மக்களாகட்டும், தமிழ் மக்களாகட்டும் அனைவரும் சுயவிருப்பதோடு எங்கும் வாழலாம். அதனை தடைசெய்ய முடியாது 
சிங்கள மக்கள் தமது வர்த்தகம் மற்றும் தொழில்கள் நிமித்தமும், சுயவிருப்பத்துடனும் வடக்கில் குடியேறுவதை தடுப்பதும் எதிர்ப்புத் தெரிவிப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
வடக்கு முதலமைச்சரின் அந்த நிலைப்பாட்டை எதிர்க்கின்றேன். வடக்கில் சிங்கள மக்களுக்கு எதிராக அவ்வாறான ஒரு நிலை உருவானால் தெற்கிலும் தமிழ் மக்கள் வந்து குடியேற முடியாது. அதற்கு இடமளிக்கமாட்டோம் என சிங்கள மக்கள் மத்தியில் எதிர்ப்புக்கள் கிளம்பும்.
இது மீண்டும் இனங்களிடையே முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும். இனவாதத்திற்கு சாதகமாக அமைந்துவிடும்.
எனவே, சிங்கள மக்கள் தமது சுயவிருப்பின் பேரில் வடக்கில் மட்டுமல்ல எங்கும் வாழமுடியும். அதேபோன்று தமிழ் மக்களும் தமது சுயவிருப்பின் பேரில் எங்கும் வாழ முடியும். இதற்குத் தடைபோட எவருக்கும் அதிகாரம் இல்லை.
வடக்கில் மக்கள் வாழும் இடங்களில் இராணுவ நடமாட் டத்தைத் தடைசெய்ய வேண்டும்.
இராணுவத்தினர் அவர்களுக்குரிய இடங்களில் இருக்க வேண்டும். அத்தோடு, சிவில் நிர்வாகத்தில் இராணுவத் தினரின் தலையீட்டை இல்லாது செய்ய வேண்டும். தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு உளவுப் பிரிவினர் நடமாடலாம். ஆனால், இராணுவச் சீருடையுடன் மக்கள் மத்தியில் நடமாடுவதென்பது, மக்கள் மத்தியில் அச்சத்தையும், தாம் இராணுவ மயமாக்கலுக்குள் சிக்கியிருக்கின்றோம் என்ற உணர்வை ஏற்படுத்தும்.
வடக்கிற்கு அரசாங்கம் ஜனநாயகத்தை வழங்கியுள்ளது. அதனை சுவாசிக்க மக்களுக்கு இடமளிக்கப்பட வேண்டும்.
எந்தவொரு மாகாண சபை முதலமைச்சருக்கும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. எனவே, வடக்கு முதலமைச்சருக்கும் அதே நிலைதான்.பொலிஸ் அதிகாரத்தை வழங்குவதா? இல்லையா என்பதை ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும்.
இராணுவத்தைச் சார்ந்த ஒருவர் வட மாகாண ஆளுநராகப் பதவி வகிப்பதை நானே முதலில் எதிர்த்தேன். சிவிலியன் ஒருவரே ஆளுநராக நியமிக்கப்பட வேண்டுமென அரசாங்கத்தை இன்றும் வலியுறுத்துகிறேன் என சமூக ஒருமைப்பாடு மற்றும் தேசிய மொழிகள் தொடர்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.