இலங்கையின் மிகச் சிறந்த நூலகமாக யாழ் நூலகம் தெரிவு-

jaffna libraryஇலங்கையின் மிகச் சிறந்த நூலகமாக யாழ்ப்பாண நூலகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள நூலகங்களுக்கு இடையில் போட்டி நடாத்தப்பட்டது. இதன்படி அகில இலங்கை ரீதியில் மிகச் சிறந்த நூலகமாக யாழ்ப்பாண நூலகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநகரசபைகளுக்கு இடையில் நடாத்தப்பட்ட நூலகப் போட்டியில் யாழ்ப்பாண நூலகம் முதலாம் இடத்தைப்பெற்றுக் கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கையுடனான உறவை தொடர்வது அவசியம்: மணிசங்கர் ஐயர்-

indiaஇலங்கையில் உள்ள தமிழர் பகுதிகளில் இந்தியா மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டுவரும் சூழ்நிலையில், அந்நாட்டுடனான உறவு தொடர்வது அவசியம் என தமிழகத்தின் முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவருமான மணிசங்கர் ஐயர் வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சியினர் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பது குறித்து இருவேறு கருத்துக்களை கூறிவரும் நிலையில், மணிசங்கர் ஐயர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சியினரும் பிரதமர் உட்பட யாரும் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க கூடாது என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மத்திய வெளியுறுவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் மாநாட்டில் பங்கேற்பது அவசியம் என வலியுறுத்தினார். அதேபோல் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பனும் வலியுறுத்தியிருந்தார். ஆனால் காங்கிரஸ் கட்சியின் தமிழக முன்னாள் தலைவர் தங்காபாலு மற்றும் மத்திய அமைச்சர் ஜி.கே வாசன் உள்ளிட்டோர் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 பிரித்தானிய பல்கலைக்கு பிக்குகள் சங்கம் எதிர்ப்பு

மீரிகம பிரதேசத்தில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்;ள பிரித்தானிய லான்கஷெயார் பல்கலைக்கழகத்தின் கிளைக்கு சோசலிச பிக்கு முன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனை முன்னிட்டு கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்திற்கு கோரிக்கை மனுவொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, புதிய பல்கலைக்க ழகத்திற்கான அடிக்கல்லை இலங்கை வரும் பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் நாட்டி வைப்பார் என்ற செய்தியை பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம்;; மறுத்துள்ளது.

வாக்காளர் இடாப்பில் பெயர்களை சேர்க்க நாளை வரை கால அவகாசம்-

2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் இதுவரை தமது பெயர்களை சேர்த்துக்கொள்ளாதவர்கள் அது தொடர்பான உரிமைக் கோரிக்கையினை முன்வைப்பதற்கு தேர்தல்கள் செயலகம் வழங்கிய காலஅவகாசம் நாளையுடன் நிறைவு பெறவுள்ளது இந்த வருடத்திற்கான வாக்காளர் இடாப்பை தயாரிக்கும் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி 2013 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பு அத்தாட்சிப்படுத்தப்படவுள்ளது. 2014 ஆம் ஆண்டில் ஏதேனும் ஒரு தேர்தல் நடாத்தப்படுவதாயின் அதற்காக 2013 ஆம் ஆண்டிற்கான தேர்தல் இடாப்பு பயன்படுத்தப்படவுள்ளது. தேர்தல் ஒன்றின்போது வாக்காளர் இடாப்பில் பெயர் சேர்க்கபடவில்லை என்று முறைப்பாடு செய்தாலும் வாக்காளர் இடாப்பு அத்தாட்சிப்படுத்தப்பட்ட பின்னர் புதிதாக எந்தவொரு பெயரையும் உட்சேர்க்க முடியாது என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். 2013 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பில் பெயரைச் சேர்த்துக்கொள்வதற்காக தற்போது வழங்கப்பட்டுள்ள இறுதிச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணையாளர் கோட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பான கோரிக்கைகளை உடனடியாக தத்தமது மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க முடியும் எனவும் தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது.

இந்தியாவின் பங்கேற்பை தடுக்க கோரும் மனு தள்ளுபடி-

law helpஇலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பேராசிரியர் சரஸ்வதி கோவிந்தராஜ் என்பவரால் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை இன்று பரிசீலனை செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதனை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

கப்பல் கூட்டுத்தாபன தலைவராக வைஸ் அத்மிரால் ஜயநாத் கொலம்பகே நியமனம்-

இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்தின் தலைவராக வைஸ் அத்மிரால் ஜயநாத் கொலம்பகே நியமிக்கப்பட்டுள்ளார். வைஸ் அத்மிரால் ஜயநாத் கொலம்பகே தற்போது இலங்கை கடற்படை தளபதியாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.