மூளாய், சுழிபுரம் முன்பள்ளி சிறார்களுக்கான விளையாட்டுப் போட்டி-

யாழ். மூளாய், சுழிபுரம் மனிதவள அபிவிருத்தி சனசமூக நிலைய முன்பள்ளி சிறார்களுக்கான விளையாட்டுப் போட்டி நேற்று மாலை இடம்பெற்றது. சுழிபுரம் மனிதவள அபிவிருத்தி சனசமூக நிலைய முன்றலில் நடைபெற்ற இந்த விளையாட்டுப் போட்டி நிகழ்விற்கு பிரதம விருந்தினர்களாக வட மாகாணசபை உறுப்பினர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், வலி மேற்கு பிரதேசசபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரநேசன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வலி மேற்கு பிரதேச உறுப்பினர்கள் நடனேந்திரன், சசி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். இந்நிகழ்வில் பெருந்திரளான மக்களும் கலந்து கொண்டிருந்ததுடன், விளையாட்டுப் போட்டியில் பங்கு பற்றியிருந்த சிறார்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இலங்கை அலுவலகங்களின் பாதுகாப்பு அதிகரிப்பு-

தமிழகத்தில் உள்ள இலங்கை அலுவலகங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.சென்னையில் உள்ள மஹாபோதி, இலங்கை தூதரகம் உள்ளிட்ட அலுவலகங்களின் பாதுகாப்புக்களே இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளன. நேற்று தமிகத்தில் அஞ்சல் நிலையங்கள் இரண்டில் இடம்பெற்ற சிறிய வெடிவிபத்தினை தொடர்ந்தே இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக த ஹிந்து செய்திதாள் குறிப்பிட்டுள்ளது.

பிரித்தானியா அறிவிப்பு-

அரசியல் தஞ்சம் கோரி வீணான முயற ;சியில் ஈடுப்பட வேண்டாம் என்று பிரித்தானியா அறிவித்தல் விடுத்துள்ளது. புதிய சட்டத்தின் படி, அகதி அந்தஸ்து கோரி வருபவர்கள் திரும்பவும் தமது சொந்த நாட்டுக்கே அனுப்பப்படுவார்கள் என பிரித்தானிய உள்துறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனிப்பட்ட இலாபம் கருதியே இவ்வாறு அகதி அந்தஸ்து கோரி வருவதாக பிரித்தானிய உள்துறை அமைச்சர் மார்க் ஹாபர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில் 347 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ அமெரிக்கா முன்வருகை-

வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 5000 குடும்பங்களுக்கு உதவுவதற்கு அமெரிக்கா முன்வந்துள்ளது. வட மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனை, யாழிலுள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தபோது, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்செல் ஜே சீசென் இதற்கான உறுதிமொழியை வழங்கியுள்ளார். அமெரிக்கத் தூதுவர் மிச்செல் ஜே சிசென், யாழ் ஒஸ்மானியா கல்லூரிக்கு விஜயம் செய்ததுடன், அதன் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடியுள்ளார். அத்துடன் அமெரிக்க தூதுவர் இன்றுபிற்பகல் வடமராட்சிக்கு விஜயம் செய்துள்ளார்.

 சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளன உறுப்பினர்கள் கைது .

சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளன ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் உட்பட சம்மேளனத்தின் இரண்டு உறுப்பினர்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுதந்திர ஊடக இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சி பட்டறையில் கலந்துகொண்டபோதே இந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றுலா விசாவில் வந்து செயலமர்வை நடத்தினர் எனக்கூறியே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சுதந்திர ஊடகவியலாளர் இயக்க உறுப்பினரொருவர் தெரிவித்துள்ளார். குறித்த செயமலர்வு ஜானகி ஹோட்டேலில் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் 10 பேர் வந்து இந்த இரண்டு வெளிநாட்டு பிரஜைகளையும் கைதுசெய்துள்ளனர். இவர்கள் இருவரும் அதிதிகளாகவே செயலமர்வில் கலந்துகொண்டதாக சுதந்திர ஊடகவியலாளர் இயக்கம் மேலும் தெரிவித்துள்ளது.