பொதுநலவாய அமைப்புக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்-பிரித்தானியா-

கொழும்பில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டை பகிஸ்கரித்தால், அது பொதுநலவாய அமைப்புக்கு ஏற்படும் பாரிய தாக்கம் என பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹேக் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வைத்து இக்கருத்தை வெளியிட்டுள்ளார். இலங்கையில் மனித உரிமை நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்துவதற்கு இந்த பிரசன்னம் அவசியமாகின்றது. பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என பிரித்தானிய எதிர்க்கட்சி தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த பதிலை வழங்கியுள்ளார். இதனிடையே, இந்திய அரச தரப்பில் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வது தொடர்பில் நேற்று விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்ட போதும், எந்தவித தீர்மானங்களும் எட்டப்படவில்லை.

பிரதம நீதியரசர் பதவிக்கு எதிர்ப்பு-

பிரதம நீதியரசரை நியமிப்பது தொடர்பில் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கோ சவால் விடுவதற்கோ யாருக்கும் சட்டரீதியாக உரிமை இல்லை என சட்டமா அதிபர் பாலித்த பெர்னான்டோ உயர் நீதிமன்றதில் தெரிவித்துள்ளார். பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டதற்கு எதிராக மாற்று கொள்கை கேந்திர நிலையம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு ஐவர் கொண்ட நீதியரசர் குழாமினால் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அரசியலமைப்புக்கு அமைய பிரதம நீதியரசர் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுவதாக சட்டமா அதிபர் அறிவித்துள்ளார். இதன்படி, ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைக்கு எதிராக வழக்குத் தாக்கல்செய்ய முடியாது என்றும், அவ்வாறான வழக்குகளில் இருந்து விடுபடுவதற்கான விசேட வரப்பிரசாதத்தையும், விதிவிலக்கையும் அரசியலமைப்பிலேயே ஜனாதிபதி வழங்கியிருப்பதாகவும் சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

 அதிகாரமிக்க தலைவர்களின் பட்டியலில் புட்டின் முதல் இடம்-

உலகின் அதிகாரமிக்க தலைவர்களின் பட்டியலில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவை புறந்தள்ளி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் முதல் இடத்தை தன்வசப்படுத்தியுள்ளார். இந்த வருடத்துக்கான அதிகாரமிக்க தலைவர்களுக்கான பட்டியலை பொப் சஞ்சிகை வெளியிட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர் முதல் தடவையாக பரக் ஒபாமா இந்தப் பட்டியலில் பின்னடைவு கண்டுள்ளார். சிரிய விவகாரங்களை கையாள்வதில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் வகித்த பங்கே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவுக்கு எதிரான கருத்துக்களை தீவிரமாக தெரிவித்துவருவதில் ரஷ்ய ஜனாதிபதி கைதேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்குகளுக்கு விசேட பொலீஸ்பிரிவு-

காவியுடையணித்த பிக்குகளால் பெண்கள்மீது பிரயோகிக்கப்படும் வன்முறைகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள விசேட காவல்துறை பிரிவொன்றை அமைக்குமாறு புத்தசாசன அமைச்சின் செயலாளர் பொலிஸ் மா அதிபரிடம் கோரியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பொலிஸ் மா அதிபரும் இணக்கப்பாட்டை வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்று பொதுபல சேனா அமைப்பு மற்றும் புத்தசாசன மற்றும் ஆன்மீக விவகார அமைச்சின் செயலாளர்களுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது.

 காத்தான்குடியில் ஊடகவியலாளர் கைது-

மட்டக்களப்பு காத்தான்குடியிலுள்ள வார உரைகல் எனப்படும் பத்திரிகையின் பிரதம ஆசிரியரான எம்.ஐ.எம். றஹ்மத்துல்லா (புவி) என்பவரை அவரின் வீட்டில் கஞ்சா வைத்திருந்ததாக கூறி காத்தான்குடி பொலிசார் சந்தேகத்தின்பேரில் இன்றுகாலை கைது செய்துள்ளனர். இன்றுகாலை 7 மணியளவில் குறித்த பத்திரிகையின் ஆசிரியரின் வீட்டுக்கு சென்ற பொலிஸ்குழு ஒன்று அவரின் வீட்டுக்குள் பொலிஸ் நாய்மூலம் தேடுதல் நடத்தியபோது கஞ்சா கட்டு ஒன்றை கைப்பற்றியுள்ளனர். இது அவரின் வீட்டு வளாகத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது. இதையடுத்து பத்திரிகையின் ஆசிரியரை பொலிசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். என்னுடைய வீட்டில் கஞ்சா இருக்கவில்லை இது என்ன அநியாயம் என குறித்த ஆசிரியர், அவரை கைதுசெய்த போது பொலிசாரிடம் கூறியதாக தெரியவருகின்றது. இந்த சம்பவத்தையடுத்து ஆசிரியரின் மனைவி மற்றும் மகன் ஆகிய இருவரும் சட்டத்தரணி எம்.றிஸ்வி என்பவரின் ஊடாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு சென்று இது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட செயல் எனவும் இவருக்கு தொடாந்து அச்சுறுத்தல் இருந்து வந்ததாகவும் கஞ்சா எதுவும் வீட்டில் வைத்திருக்கவில்லையெனவும் தெரிவித்துள்ளனர்.