Header image alt text

பொது வேட்பாளராக சோபித்த தேரர்-

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மாதுலவெல சோபித்த தேரரை தாம் ஏற்றுக் கொள்வதாக ஜே.வி.பி (மக்கள் விடுதுலை முன்னணி) தெரிவித்துள்ளது. ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த இதனைக் கூறியுள்ளார். எவ்வாறாயினும் இது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவகுழுத் தலைவர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புச் செயலர் இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு-

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்துக்கும் இடையில் புதுடில்லியில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாகவும் அதில் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.

இலங்கைக் கடற்படைக்கு இந்தியப் பயிற்சி-

இலங்கை கடற்படையினருக்கு பயிற்சி வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது. த ஹிந்து பத்திரிகையில் இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்திய கடற்படை தளபதி எட்மிரல் டீ.கே.ஜோசி, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் மேற்கொண்ட சந்திப்பின்போது இது குறித்து இணக்கம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்து சமுத்திரத்தின் இலங்கை மற்றும் இந்திய கடல் எல்லைகளின் பாதுகாப்பு தொடர்பில் இந்த சந்திப்பின் போது முக்கியவத்துவம் வழங்கி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக த ஹிந்து தெரிவித்துள்ளது. இதற்கிடையில் இந்த தகவலை நியு டெல்கியில் உள்ள இந்த கடற்படை தலைமையகம் உறுதி செய்துள்ளது.

பொருளாதார தடையிலிருந்து இலங்கைக்கு விதிவிலக்கு-

ஈரானுக்கு விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடையில் இருந்து, இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு விதிவிலக்கை அமெரிக்கா நீடித்துள்ளது. அமெரிக்காவின் ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் அணுவிருத்தி செயற்பாடுகளின் காரணமாக, அமெரிக்கா அந்நாட்டுக்கு பொருளாதார தடையை விதித்திருந்தது. இந்நிலையில் ஈரானில் இருந்து மசகு எண்ணெயை இறக்குமதி செய்யாத நாடுகளுக்கு, அமெரிக்கா விதிவிலக்களிக்கிறது. இதன்படி, இலங்கை, சிங்கபூர், மலேசியா சீனா, இந்தியா, தென்கொரியா, துருக்கி மற்றும் தாய்வான் ஆகிய நாடுகளுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்த விதிவிலக்கின்படி, ஈரானில் இருந்து எண்ணெய் கொள்வனவு செய்யும் நாடுகளில் உள்ள வங்கிகள், அமெரிக்கா நிதி கட்டமைப்பின் துண்டிப்புகளுக்கு எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு உட்படாது என்று தெரிவிக்கப்படுகின்றது.

புலிகளின் செயற்பாட்டாளரை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தல்-

தமிழ்நாட்டில் தலைமறைவாக வாழ்கிற புலிகள் இயக்க செயற்பாட்டாளர் ஒருவரை கைது செய்யும் நடவடிக்கைகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா மேற்கொள்ள வேண்டும் என ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசுவாமி வலியுறுத்தியுள்ளார். கத்தோலிக்க பாதிரியாரான கெஸ்பர்ராஜ் அவர்கள் புலிகள் இயக்கத்துக்கு ஆயுதங்களை விநியோகித்ததாக கூறி, அமெரிக்காவின் எப்.பீ.ஐ. புலனாய்வு தரப்பினர் நிவ்யோர்க் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் அவர் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருப்பதுடன், அவருக்கு எதிராக சர்வதேச பிடிவிறாந்தும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் தமிழகத்தில் பதுங்கியிருப்பதாகவும், அண்மையில் இந்தியாவின் என்.டீ.டி.வி தொலைகாட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்றிருந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசிடம் கோரப்பட்டுள்ள நிலையில், தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுப்பிரமணியசுவாமி வலியுறுத்தியுள்ளார்.

பண்டாராநாயக்க சர்வதேச ஞபாகார்த்த மாநாட்டு மண்டபத்தில் தீ-

கொழும்பு பண்டாராநாயக்க ஞபாகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திலுள்ள கட்டடமொன்றில் பரவிய தீ முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த தீ விபத்து இன்று முற்பகல் 11.15 அளவில் இடம்பெற்றது. தீயைக் கட்டுப்படுத்துவதற்காக 10 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டதாக தீயணைப்பு சேவைப் பிரிவினர் குறிப்பிடுகின்றனர். புனரமைப்பு நடவடிக்கைகளின் பொருட்டு மாநாட்டு மண்டபம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், நிகழ்ச்சிகளுக்காக பயன்படுத்தப்பட்ட மண்டபத்திலேயே தீ பரவியுள்ளது. தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. அண்மையில் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு நடைபெற்றபோது, ஊடக மத்திய நிலையமாக இயங்கிய கட்டடமே தீயினால் சேதமடைந்துள்ளது. இதேவேளை, இந்த தீ விபத்திற்கான காரணத்தை கண்டறியும் பொருட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன கூறியுள்ளார்.

புதிய வெளிநாட்டுத் தூதுவர்கள் நியமனக் கடிதங்கள் கையளிப்பு-

இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் மற்றும் தாய்லாந்து நாடுகளின் புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் தமது நியமனப் பத்திரங்களை கையளித்துள்ளனர். நியமனப் பத்திரங்களை கையளிக்கும் உத்தியோகப்பூர்வ நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கான தாய்லாந்தின் புதிய தூதுவரான நொபொன் அச்சரியாவனிச் மற்றும் ஆப்கானிஸ்தானின் புதிய தூதவரான அசிஸூடின் அஹமத்சதா ஆகியோரின் நியமனப் பத்திரங்களை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் பாதுகாப்பு வலயத்திற்கு செல்ல முதலமைச்சருக்கு அனுமதி மறுப்பு-

யாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்கு நேற்றுமாலை சென்ற வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் இராணுவத்தினரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். வலிகாமம் வடக்கிலுள்ள பொதுமக்களின் காணிகள் படைத்தரப்பால் அபகரிக்கப்பட்டு அங்குள்ள வீடுகள், கோயில்கள் மற்றும் பாடசாலைகள் உடைக்கப்படுகின்றன. இந்த நிலவரங்களை பார்வையிடுவதற்கு அப்பகுதிக்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் நேற்று சென்றிருந்தார். எனினும் அவரை உள்ளே செல்ல அனுமதிக்காமல் படைத்தரப்பு அவரை திருப்பி அனுப்பியுள்ளனர். முதலமைச்சரை மாவிட்டபுரம் பகுதியில் வழிமறித்த படையினர், உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் செல்வது என்றால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற வேண்டும் எனவும், பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி உள்ளே செல்ல அனுமதிக்கப்பட மாட்டாதெனவும் கூறியுள்ளனர்.

நிலையான அரசியல் தீர்வொன்று ஏற்படுத்தப்பட வேண்டும்-இரா.சம்பந்தன் எம்.பி-

இலங்கையில் நிலையான அரசியல் தீர்வு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை பல நாடுகள் தடை செய்திருந்தன. எனினும் தற்போது அந்த நாடுகள், இலங்கையில் நிலையான அரசியல் தீர்வு ஒன்றையும், தேசிய ஒற்றுமையையும் ஏற்படுத்தும் அவசியம் குறித்து வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் விரைவாக தமிழ் மக்கள் சுயமரியாதையுடனும், உரிமைகளுடனும் வாழக்கூடிய வகையிலான அரசியல் தீர்வு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னாள் இராணுவ அதிகாரிகள் இருவர் ஆளுநர்களாக இருப்பதால், சாதாரண அரச சேவையாளர்களும், பொது மக்களும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதேநேரம் தற்போது தமிழ் மக்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகள் எப்போது தீரும் என்பதே தற்போதைய கேள்வியாக இருப்பதாகவும் சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் யுத்த இழப்பு கணக்கெடுப்பை நம்ப முடியாது-அவுஸ்திரேலிய காங்கிரஸ்-

இலங்கை யுத்தத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் இழப்புக்கள் குறித்து இலங்கை அரசு மேற்கொண்டுள்ள கணக்கெடுப்பு தொடர்பில் அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் சந்தேகம் வெளியிட்டுள்ளது. இலங்கை அரசு மற்றும் அரச அதிகாரிகள் நேர்மையான முறையில் இந்த கணக்கெடுப்பை மேற்கொள்ள மாட்டர் என அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸின் தேசிய செய்தித் தொடர்பாளர் சாம் பாரி தெரிவித்துள்ளார். சுயாதீன அமைப்பொன்றின் மூலமாக இந்த கணக்கெடுப்பு நடவடிக்கை கண்காணிக்கப்படுகின்ற வரையில் இதனை நம்ப முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடெங்கிலும் 30 ஆண்டுகால யுத்தத்தினால் மரணித்தவர்கள், காணாமல் போனவர்கள், காயமடைந்தவர்கள், ஊனமுற்றவர்களின் விபரங்களையும், சொத்துக்களுக்கு ஏற்பட்ட அழிவுகள் பற்றிய விபரங்களையும் அறிவதற்கு இதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆறு மாத காலப்பகுதியில் 14,000 உத்தியோகத்தர்களின் உதவியோடு 14,000 கிராமங்களில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் இளம் குடும்பஸ்தர் சந்தேகத்தின்பேரில் கைது-

மன்னாரில் இளம் குடும்பஸ்தர் ஒருவரை முன்னாள் புலி உறுப்பினராக இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டிருப்பதாக அவரது மனைவி மன்னார் பிரஜைகள் குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த முறைப்பாடு நேற்று முன்தினம் செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் இம்மானுவேல் செபமாலை அவர்கள் தெரிவித்துள்ளார். மன்னார் முருங்கன் வாழ்க்கைப்பெற்றான் கண்டல் கிராமத்தைச் சேர்ந்த இரு குழந்தைகளின் தந்தையான திருச்செல்வம் கிரிஸ்துராசா (வயது-31) விசாரணைக்காக கடந்த 24ஆம் திகதி முருங்கன் பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் 25ஆம் திகதி முருங்கன் பொலிஸ் நிலையத்திற்கு சென்றபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் அவர் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், இக்கைதினை உறுதிப்படுத்தும் சிட்டை ஒன்றும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவரின் மனைவி தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் இம்மானுவேல் செபமாலை அவர்கள் மேலும் கூறியுள்ளார்.

வீசா இன்றி தங்கியிருப்பவர்களை கைது செய்ய நடவடிக்கை-

வீசா இன்றி இலங்கையில் தங்கியிருப்பவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார். இதன்படி குடிவரவு குடியகல்வு திணைக்கள புலனாய்வுப் பிரிவினர் இந்த தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர் அதில் வீசா இன்றி இன்னும் தங்கியிருக்கும் ஆயிரம் பேர் வரையில் கைது செய்யப்படுவர் என்றும் தெரிவித்துள்ளார்.. வீசா காலம் முடிவடைந்தும் பல ஆண்டுகள் இவ்வாறு நாட்டில் தங்கியிருக்கின்றனர். இவ்வாறு நாட்டுக்குள் பிரவேசித்த சிலர் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் சிலர் திருமணம் செய்து கொண்டுள்ளனர். மேலும் சிலரைக் காணவில்லை. இந்தியா, ரஸ்யா, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு வீசா காலம் முடிவடைந்து நாட்டில் தங்கியுள்ளனர். இவர்களை கைது செய்து நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா அமைப்பின் தெற்காசிய தூதராக சச்சின் நியமனம்-

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற சச்சின் டெண்டுல்கர், ஐ.நா அமைப்பின் தெற்காசிய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர், சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் ஐக்கிய நாடுகளின் சபையின் தெற்காசிய பிரிவின் தூதராக, இரண்டு ஆண்டுகளுக்கு நியமனம் பெற்றுள்ளார். இது குறித்து சச்சின் டெண்டுல்கர் கூறுகையில், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் எனது இரண்டாவது இன்னிங்சை சிறப்பாக தொடங்க உதவிய யூனிசெப் அமைப்புக்கு நன்றி. இந்த தூதர் பணி எனக்கு மிகவும் முக்கியமானது, என்னால் முடிந்தளவுக்கு சிறப்பாக செயல்பட உள்ளேன். உலகின் பெரும்பாலான சிறுவர்கள் போதிய சுகாதார வசதிகள் இல்லாமல் உள்ளனர். இதனால் ஏற்படும் நோய் பாதிப்பு காரணமாக, தினமும் 1600 சிறுவர்கள் மரணம் அடைகின்றனர் என்ற செய்தி என்னை மிகவும் பாதித்தது. எனவே இவர்களுடன் இணைந்து சுகாதாரத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்புகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.

அரசின் கணக்கெடுப்பு குறித்து கூட்டமைப்பு அவதானிப்பு-

இலங்கையில் 1982முதல் 2009வரை உள்நாட்டுப் போர் மற்றும் மோதல்களில் இறந்தவர்கள், மற்றும் இழந்த உடமைகள் குறித்த நாடாளாவிய கணக்கெடுப்பு ஒன்றை நடத்த இலங்கை அரசு முடிவு செய்திருப்பது பற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது கருத்தேதும் தெரிவிக்க முடியாது என கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்த கணக்கெடுப்பு எவ்வாறு நடக்கும், இதன் செயல்பாடுகள் எப்படி இருக்கும், ஏற்பட்ட இழப்புகளை உண்மையாக கணக்கெடுக்கும் வகையில் இருக்குமா அல்லது மூடி மறைக்கும் முயற்சியாக இருக்குமா என்பதையெல்லாம் பார்த்துத்தான் ஒரு கருத்தைத் தெரிவிக்க இயலும் என்றும் அவர் கூறியுள்ளார். போரின்போது வன்னியில் சிக்கியிருந்த சிவிலியன்களின் எண்ணிக்கையை அரசு முதலில் மிகவும் குறைத்தே காட்டிவந்தது, Read more

வட மாகாண அமைச்சர், உறுப்பினர்கள் வீடுகள்மீது தாக்குதல், முதலமைச்சரின் உருவப் பதாகை சேதம்-

131128103504_sivajilingam_house_624x351_bbc_nocredit

வட மாகாண முதலமைச்சர் சி.வி.வீக்கினேஸ்வரனின் உருவப் பதாகை கிழித்து நாசம் செய்யப்பட்டதுடன் அதற்கு தீயும் மூட்டப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபை தேர்தலின்போது சி.வி.விக்கினேஸ்வரனின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக சிவகுருநாதர் வீதியில் உள்ள உதயன் விருந்தினர் விடுதி பயன்படுத்தப்பட்டு வந்தது. அதற்காக அங்கு அமைக்கப்பட்டிருந்த முதலமைச்சரின் உருவப்பதாகை நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் கிழித்து நாசம் செய்யப்பட்டதுடன் அதற்கு தீயும் மூட்டப்பட்டுள்ளது. இதேவேளை வடமாகாண விவசாயத்துறை அமைச்சர் ஐங்கரநேசனின் இல்லத்தின்மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன்போது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளன. அத்துடன் வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் அலுவலகம் முன்பாக மலர்வலையம் வைக்கப்பட்டுள்ளதுடன், ஆர்னல்டின் வீடென எண்ணி, வட மாகாணசபை உறுப்பினர் ஆர்னல்டின் சகோதரியின் வீட்டின்மீதும் கல்வீச்சு தாக்குல் நடத்தப்பட்டுள்ளது.

காணாமற் போனமை தொடர்பில் 5ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு-

வடக்கு, கிழக்கில் காணாமற்போன 5ஆயிரம் பேர் தொடர்பாக இதுவரை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, காணாமற்போனோர் தொடர்பான விபரங்களைக் கண்டறிய நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த ஆணைக்குழுவின் தலைவரான மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம இது குறித்து ஊடகங்களிடம் தகவல் வெளியிடுகையில், ‘தற்போது முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகிறோம். முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்ளும் நடைமுறை முடிவுக்கு வந்த பின்னர், நிபுணர்கள் வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு, முறைப்பாடுகள் குறித்து தனித்தனியாக விசாரணை நடத்தப்படும். நாம் சுதந்திரமாகவே விசாரணையை நடத்துவோம். காணாமற் போதலுக்குப் பொறுப்பானவர்கள் நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொள்ள நேரிடும். அவர்களுக்கு எதிராக, சட்டமா அதிபர் திணைக்களம் குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் முன்வைக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

பாடசாலை உணவு நிகழ்ச்சி திட்டத்திற்கு ஜப்பான் உதவி-

உலக உணவு திட்டத்தின்கீழ் வட மாகாண பாடசாலை உணவு நிகழ்ச்சி திட்டத்திற்கு ஜப்பான் உதவி வழங்கவுள்ளது. வட மாகாணத்தில் செயற்படுத்தப்படும் இந்த உணவு நிகழ்ச்சி திட்டத்துக்கு உலக உணவு திட்டத்தின் ஊடாக இலங்கை அரசாங்கத்துக்கு 282 மில்லியன் ரூபா பெறுமதியான உணவு நன்கொடை உதவியை வழங்க ஜப்பானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த உணவு உதவி வழங்கப்படுவதை பொருளாதார அபிவிருத்தி அமைச்சு கண்காணிக்கவுள்ளது. வடக்கில் மீள்குடியேறிய சிறுவர்களிடையே மந்த போஷாக்கு காணப்படுவதாக விசனம் தெரிவிக்கப்பட்டது. இவர்களுக்கான போஷாக்கு திட்டத்துக்கு 2012ஆம் ஆண்டு ஜப்பான் 180 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கியிருந்தது.

மங்களராமய விகாராதிபதிக்கு பிணை-

மட்டக்களப்பு, பட்டிப்பளை பிரதேச செயலகத்தினுள் நேற்று புகுந்து வன்முறையில் ஈடுபட்டார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் 50 ஆயிரம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு தேரர் இன்றுக்காலை சென்றிருந்த வேளையிலேயே பொலிஸார் அவரை களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதன்போதே நீதவான் எஸ்.எம்.ரஹ்பீக் மேற்கண்டவாறு தீர்ப்பளித்துள்ளார். பட்டிப்பளை பிரதேச செயலகத்தினுள் அரச சொத்துக்களான பெக்ஸ் மற்றும் தொலைபேசியை சேதப்படுத்தினார் ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளே அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் பொலிஸாரினால் முன்வைக்கப்பட்டது. தேரருக்கு பிணை வழங்கிய நீதவான் வழக்கை எதிர்வரும் 19ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார். இதேவேளை மேற்படி பௌத்த தேரரின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகங்களிலும் பகிஸ்கரிப்பும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது. பட்டிப்பளை பிரதேச செயலகம் உள்ளிட்ட 14 பிரதேச செயலகங்களிலும் பகல் 12.05க்கு பணிப்பகிஸ்கரிப்பும் ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் பட்டிப்பளை பிரதேச செயலகத்தினுள் நேற்று புகுந்து வன்முறையில் ஈடுபட்டமைக்கும், பிரதேச செயலரை தகாத வார்த்தைகளினால் ஏசியமை, தவறான தகவல்களை வெளியிட்டமை உள்ளிட்ட செயற்பாடுகளை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதேநேரம், நேற்றைய தினம் பகல் முதல் பட்டிப்பளை பிரதேச செயலகம் இயங்கவில்லை.

கிழக்கு பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்-

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதியை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு சிலர் முயற்சி செய்வதாகவும், அதனை தடுத்து நிறுத்தி பல்கலைகழகத்தில் கடமையாற்றும் தகமையற்ற கல்விசார் ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்குமாறு கோரியும் மாணவர்களினால் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. மட்டக்களப்பு அரசடியில் உள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இன்று நண்பகல் 12.00மணி தொடக்கம் ஒரு மணிவரை நடைபெற்றது. கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சகல சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் எங்கள் எதிர்காலம் பீடாதிபதிகளின் கைகளில், பீடைகளை ஒழிப்போம் பீடத்தினைக் காப்போம், தொல்லை கொடுப்பவனே தொலைந்துபோ, போன்ற பதாகைகளையும் ஏந்தியிருந்தனர். Read more

நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு-

யாழ். நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் ரெக்சிகன் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவரின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று முற்பகல் யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலையில் காயங்களுடன் பிரதேச சபைத் தலைவர், அவரது மனைவியினால் புங்குடுதீவு வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். மரணம் தொடர்பிலான பிரேத பரிசோதனை யாழ். வைத்தியசாலையில் இன்று இடம்பெற்றதுடன், தலையில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளமை இதன்போது கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதேசசபை உறுப்பினர்களின் வீடுகள்மீது தாக்குதல்-

தமிழ் தேசியக் கூட்டமைப்பின்; சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் சிறீஸ்கந்தராஜா சிறீரஞ்சன் மற்றும் கூட்டமைப்பின் வலி. மேற்கு பிரதேச சபைத் தலைவர் நாகரஞ்சினி ஐங்கரன் ஆகியோரின் வீடுகளின்மீது இன்று அதிகாலை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. மீசாலையில் அமைந்துள்ள சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் சிறீஸ்கந்தராஜா சிறீரஞ்சன் வீட்டின்மீது இன்று அதிகாலை 2மணியளவில் துப்பாக்கி, வாள், கத்திகளுடன் மோட்டார் சைக்கிள்களில் சென்ற குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளதுடன், வீட்டிலிருந்த சகல பொருட்களையும் அடித்து நாசமாக்கியுள்ளனர். அத்துடன் வீட்டிலிருந்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்த முயற்சித்த நிலையில் வீட்டிலிருந்துவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இத் தாக்குதல் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை வலி. மேற்கு பிரதேசசபைத் தலைவர் நாகரஞ்சினி ஐங்கரனின வீட்டின்மீது இன்று அதிகாலை 1.15 மணியளவில் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் சந்தேகத்தின் பேரில் இரு மாணவர்கள் கைது-

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியில் புலிகளுக்கு ஆதரவாக பதாதைகளை கட்டிய சந்தேகத்தின் பேரில் இரு மாணவர்களை படையினர் கைதுசெய்து களுவாஞ்சிகுடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். நேற்று இரவு 9.30 மணியளவில் களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் வைத்து இந்த இரு மாணவர்களும் படையினரால் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இன்றுகாலை தம்மிடம் ஒப்படைக்கப்பட்டதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் பட்டிருப்பு தேசிய பாடசாலையில் உயர்தரம் பயிலும் மோகன் டினேஸ்காந்த், சாதாரண தரம் பயிலும் கு.விதுசன் எனவும் களுவாஞ்க்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீதியில் கட்டியிருந்த பதாதைகளை தாம் வாசித்துக் கொண்டிருக்கும்போதே படையினரால் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸாரிடம் வழங்கிய முறைப்பாட்டில் மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த மாணவர்களை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொகா கோலா உற்பத்தி செய்யத் நீதிமன்றம் தடை-

இலங்கையில் கொகா கோலா உற்பத்தி செய்வதற்கும், களஞ்சியப்படுத்தி வைப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் மூன்று மாதகால தடையை அநுராதபுரம் மாவட்டம் கெபத்திகொல்லாவ நீதிமன்றம் விதித்துள்ளது. கொகா கோலா நிறுவனத்தின் மூலமாக உற்பத்தி திகதி, காலாவதி திகதி, பொதி இலக்கம் போன்றன குறிப்பிடப்படாமல் கொகா கோலா போத்தல்கள் விற்பனைக்காக விநியோகிக்கப்பட்டிருந்தமைக்காக இந்த தடை உத்தரவு குறித்த நீதிமன்றத்தின் மூலம் விதிக்கப்பட்டுள்ளது. 1980ஆம் ஆண்டின் உணவு சட்டத்தின் 26ஆம் இலக்க, 18ஆம் சரத்தின் (2)ஆம் பிரிவுக்கு அமைவாக, மேற்குறிப்பிட்ட அனைத்து விபரங்களும் உணவு மற்றும் பான உற்பத்தி வகைகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். மேலும் நிறுவனத்துக்கு 15000 ரூபா நட்டஈட்டை செலுத்துமாறும் நீதிமன்றம் பணித்துள்ளது. இந்த தீர்ப்பு குறித்து மேம்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்வதற்கு கம்பனி தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.

அவுஸ்திரேலியாவில் புலிகள்மீதான தடை நீடிப்பு-

புலிகள் அமைப்பு மீதான தடையை அவுஸ்திரேலியா மேலும் 3 வருடங்களுக்கு நீடித்துள்ளது. இந்த அறிவிப்பை அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப் அறிவித்துள்ளார். பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நிதி திரட்டுவதை தடுக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைச் சட்டத்தின் கீழ் இந்த தடை நீடிக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். புலிகள் அமைப்பு மாத்திரமன்றி அல் சஹாப் மற்றும் ஐ.ஆர்.ஏ போன்ற பயங்கரவாத அமைப்புக்கள் மீதான தடையையும் அவுஸ்திரேலியா நீடித்துள்ளது. இதன்படி புலிகள் அமைப்பிற்கு ஆதரவான செயற்பாடுகளுக்கு அவுஸ்திரேலியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட 32 நாடுகள் புலிகள் அமைப்பை தடைசெய்துள்ளன.

தொலைபேசியில் மிரட்டி கப்பம் பெற்ற இரு பெண்கள் கைது-

தொலைபேசியில் மிரட்டி கப்பமாக பணம் பறித்து வந்த இரு பெண்களை கொழும்பு, மிரிஹான விசேட குறிறத்தடுப்புப் பிரிவு பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். ஹோமாகம மற்றும் பத்தரமுல்ல ஆகிய பிரதேசங்களில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் வைத்தியர் ஒருவரிடமும் பேராசிரியர் ஒருவரின் மனைவியிடமும் தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்து பணத்தினை தமது வங்கிக் கணக்குகளினூடாக பெற்றுக் கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மிரிஹான விஷேட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோகண குறிப்பிட்டுள்ளார்.

வடக்கிலிருந்து 90ஆயிரம் வாக்காளர்கள் இணைப்பு-தேர்தல் ஆணையாளர்-

வடமாகாணத்திலிருந்து 90,000 வாக்காளர்கள் 2013ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் இடாப்பில் சேர்க்கப்படவுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் நேற்று அறிவித்துள்ளது. 2012ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் இவ்வருடம் டிசம்பரில் பூர்த்தியாகிவிடுமென தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 2012இல் புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் 10 சதவீதமானேர் வடமாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். 2013ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலும் டிசம்பர் 23இல் தயாராகிவிடும், இவ்வருட வாக்காளர் பட்டியலில் 1.2 மில்லியன் வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டதுடன், 71,7512 வாக்காளர்கள் அகற்றப்பட்டுள்ளனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். .

கரவெட்டி பிரதேச சபை தவிசாளரின் வீட்டின் மீது தாக்குதல்-

யாழ். கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் சு.வியாகேசுவின் வீடு இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டமை தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்றையதினம் அதிகாலை 2மணியளவில் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி உடுப்பிட்டியில் அமைந்துள்ள தனது வீடே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளதாக தவிசாளர் தெரிவித்துள்ளார். வானொன்றில் வந்த இனந்தெரியாத நபர்கள் மேற்படி பிரதேச சபை உறுப்பினரின் வீட்டுக்கு தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இந்தத் தாக்குதலின் காரணமாக வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள், கதவுகள் மற்றும் வீட்டில் தரித்து நின்றிருந்த வாகனம் உள்ளிட்டவை சேதமாக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துஐற பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பயணிகள் காசோலை நிறுத்தம்-

பயணிகள் காசோலை வழங்கும் நடவடிக்கை உடனுக்கு அமுல்வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளது என இலங்கை வங்கிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மத்திய வங்கியில் நடைபெற்ற கூட்டத்தில் பயணிகள் காசோலைகளை வழங்குவதை நிறுத்திவிட சகல வங்கிகளும் உடன்பட்டதாக இலங்கை வங்கிகள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார். இன்று பயணிகள் காசோலைகளை பயன்படுத்துவதற்கான விருப்பம் வெகுவாக குறைந்துள்ளது. அநேகமான பயணிகள் கடனட்டைகள், செலவு அட்டைகள் அல்லது பணத்தை எடுத்து செல்லவே விரும்புகின்றனர். இந்த தீர்மானம் பற்றி பொதுமக்களுக்கு அறிவிக்கும் பொறுப்பை மத்திய வங்கி ஏற்றுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியா வருமாறு வடக்கு முதல்வருக்கு அழைப்பு-

இலங்கையின் நிலைமைகள் பற்றி பேசுவதற்காக பிரித்தானியாவிற்கு வருமாறு வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன. பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோனிற்கும் வட மாகாண முதலமைச்சரிற்கும் இடையிலான சந்தித்திப்பின்போது இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது. இந்த அழைப்பிற்கு முன்னரே இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், முதலமைச்சரை புதுடில்லி வருமாறு அழைத்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மதவாச்சி குளக்கரையிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு-

மதவாச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் காணாமல் போன பெண் ஒருவர் குளக்கரையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் தங்கையால் இந்த சம்பவம் குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மதவாச்சி, பூனாவ பிரதேசத்தைச் சேர்ந்த 33வயதான சகுந்தலா பத்மினி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 24ஆம் திகதி தொடக்கம் குறித்த பெண் காணாமற்போன நிலையில் நேற்றுமாலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக அநுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

உப்பளம் அமைக்கும் முயற்சியை நிறுத்துமாறு கோரிக்கை-

மன்னார், விடத்தல்தீவு கிழக்கு கிராம சேவையாளர் பிரிவுக்குற்பட்ட நாயாற்று பகுதியில் வெளியூர் வாசிகள் அனுமதியின்றி உப்பளம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக விடத்தல்தீவு கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் பொ.சிவேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விடத்தல்தீவு கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்கம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளது. குறித்த கடிதத்தில், விடத்தல்தீவு கிழக்கு கிராம சேவையாளர் பிரிவுக்குற்பட்ட ´நாயாற்று´ பகுதியில் உள்ள 50 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட உப்புத்தரவையில் சில வெளியூர்வாசிகள் கிராம அலுவலகரின் அனுமதியின்றி உப்பளம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். Read more

மாவீரர் நினைவு தினத்தை அனுசரிக்க இலங்கை அரசு தடை  

imagesமாவீரர் தினத்தை அனுசரிக்கக்கூடாது என்று இலங்கை அரசாங்கம் அறிவித்திருக்கிறது. அவ்வாறு அனுசரிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என்று அது கூறியிருக்கிறது. விடுதலைப்புலிகளைக் கொண்டாடுவதோ அல்லது அவர்களை ஊக்குவிப்பதோ தண்டமைனக்குரிய குற்றமாகும் என தேசிய பாதுகாப்புத் தகவல் நிலையம் தெரிவித்திருக்கின்றது. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இ;த்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது. அவ்வாறு மேற்கொள்பவர்கள் நீதிமன்றத்தின் மூலம் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் நவம்பர் மாதம் 26 ஆம் திகதி விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளாகும். நாளை மறுதினம் நவம்பர் மாதம் 27 உயிர் நீத்த விடுதலைப்புலிகளை அவர்களது ஆதரவாளர்கள் நினைவு கூர்கின்ற மாவீரர் நாளாகும்.

இந்தத் தினங்கள் இரண்டையும் விடுதலைப்புலிகள் வெகு விமரிசையாகக் அனுசரித்துவந்துள்ளனர். பொதுமக்களும் இந்தத் தினங்களில் தமது உயிர் நீத்த (விடுதலைப்புலி உறுப்பினர்கள்) இறந்த பிள்ளைகள் மற்றும் உறவினர்களை நினைவு கூர்ந்து வந்துள்ளனர். விடுதலைப்புலிகள் யுத்தத்தின் மூலம் முற்றாக அழிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்த விடுதலைப்புலிகளை நினைவு கூரக் கூடாது என அரசாங்கமும், இராணுவத்தினரும் அறிவித்து வந்துள்ளனர். எனினும், உயிரிழந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களை நினைவு கூர்வது ஒரு ஜனநாயக நாட்டில் மக்களுக்குள்ள உரிமையாகும். இதனைத் தடுத்து நிறுத்துவது மனித உரிமை மீறலாகும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன் மற்றும் அரியநேந்திரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையிலேயே மாவிரர் தினத்தை அனுசரிக்கக் கூடாது என வலியுறுத்தும் அறிக்கையை தேசிய பாதுகாப்புக்கன ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இந்த அறிவித்தலை யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க மற்றும் பொலிஸ் பேச்சாளர் ஆகியோரும் வெளியிட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாவீரர் தினத்தையொட்டி, யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் உட்பட்ட பகுதிகளில் படையினர் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஐ.நா விசேட பிரதிநிதி இலங்கைக்கு விஜயம்-

ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதியொருவர் எதிர்வரும் வாரத்தில் இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. உள்ளக இடப்பெயர்வுக்கு உள்ளானவர்களின் மனிதவுரிமைகள் தொடர்பான ஐ.நாவின் விசேட பிரதிநிதி ச்சலோக்கா பெயானியே இங்கு வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலர் கருணாதிலக்க அமுனுகம குறிப்பிட்டுள்ளார். டிசம்பர் 2ஆம் திகதி முதல் 6ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருக்கும் அவர் யுத்தத்தினால் வடக்கில் இடம்பெயர்ந்தவர்களை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மற்றும் ஐ.நா பிரதிநிதி வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றம் அமைச்சர்களையும் அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இடம்பெயர்ந்தோர் முகாம்களில் கண்காணிப்புகளை மேற்கொள்ளவுள்ள அவர், முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் விஜயம் செய்வார் என்று மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

காலியில் கடல் பாதுகாப்பு மாநாடு ஆரம்பம்-

இந்திய கடற்படை தளபதி அட்மிரல் டி.கே.ஜோசி நேற்று இலங்கை வந்துள்ளார். 2013ஆம் ஆண்டுக்கான கடல் பாதுகாப்பு தொடர்பான காலி கலந்துரையாடல் இன்று இடம்பெறுகின்ற நிலையில், அதில் கலந்துகொள்வதற்காகவே அவர் இலங்கைக்கு வந்துள்ளார். இந்திய கடற்படைத் தளபதி, சர்வதேச கடற்படை பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்கின்ற அதேவேளை இலங்கை கடற்படைத் தரப்பினருடன் இருதரப்பு பேச்சவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார். இந்திய கடற்படையின் 21ஆவது தளபதியாக 2012ஆம் ஆண்டு நியமனம் பெற்ற அட்மிரல் தேவேந்திரகுமார் ஜோசி, நீர்மூழ்கிக் கப்பல் அழிப்பு யுத்த நடவடிக்கையில் தேர்ச்சி பெற்றவராவார். அவர் காலி கலந்துரையாடலின்போது, ஆசிய, பசுபிக் வலயத்தில் கடற்படை முன்னுரிமை தொடர்பான இந்தியாவின் அனுபவங்கள் குறித்த விரிவுரையொன்றையும் நிகழ்த்தவுள்ளார். காலி கலந்துரையாடலில் 35 நாடுகளின் உள்ளக, வெளிநாட்டு கடற்படை மற்றும் கடற்றொழில் தொடர்பான நிபுணர்கள் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மாநாட்டை புறக்கணிப்பதால் மனித உரிமையில் முன்னேற்றம் ஏற்படாது-கென்பரா டைம்ஸ்-

பொதுநலவாய நாடுகளின் கொழும்பு மாநாட்டை இந்திய பிரதமர் மன்மோகன்சி;ங் புறக்கணித்தமை காரணமாக இலங்கையின் மனித உரிமைகள் விடயத்தில் எவ்வித முன்னேற்றம் ஏற்படப்போவதில்லை என கென்பரா டைம்ஸ் தெரிவித்துள்ளது கென்பரா டைம்ஸில் தமது கட்டுரையை எழுதியுள்ள அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகமான க்ரோவ்போட்டின் விரிவுரையாளர் ரமேஸ் தாகூர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார் இலங்கை மாநாட்டை புறக்கணித்தமையால் பெற்ற நன்மைகள் குறைவானதே. எனினும் அதற்காக கொடுக்கவேண்டிய விலை அதிகமானது என்றும் தாகூர் கூறியுள்ளார். இலங்கையின் மனித உரிமைகள் விடயமாக மன்மோகன்சிங் இந்த முடிவை எடுக்கவில்லை மாறாக தமிழகத்தின் வாக்குகளை மையமாகக்கொண்டே இம்முடிவை அவர் மேற்கொண்டார் இதனால் இந்தியாவுக்கு பாதிப்புகளே அதிகமாக ஏற்படும். இந்நிலையில் கடந்த 20 வருடக்கால ஆட்சியில் மன்மோகன்சிங் அண்டை நாடுகளில் அதிகாரப்பரவாலக்கம், அல்லது மனித உரிமைகள் மேம்பாடு அல்லது அண்டை நாடுகளுடனான உறவு என்ற விடயங்களில் தோல்வி கண்டுள்ளார் என விரிவுரையாளர் ரமேஸ் தாகூர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வலி.வடக்கில் வீடுகள் மீண்டும் இடித்தழிப்பு-

யாழ்ப்பாணம் வலி வடக்கு பாதுகாப்பு வலயத்தில் நின்று போயிருந்த வீடுகள் இடித்தழிப்பு நடவடிக்கைகள் மீண்டும் நேற்று ஆரம்பமானதாக கூறப்படுகின்றது. கடந்த சில நாட்களாக கமரூனின் விஜயம் மற்றும் இடம்பெயர்ந்த மக்களது போராட்டங்களை அடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடித்தழிப்பு நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் எஸ. சுகிர்தன் தெரிவித்துள்ளார். முன்னதாக இடித்தழிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் அதற்கு எதிராக இடம்பெயர்ந்த மக்கள் போராட்டங்களிற்கு தயாராகியிருந்தனர். எனினும் அதனை குழப்பும் வகையில் ஜனாதிபதி இடித்தழிப்பிற்கு தடை விதித்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும் அதையும் மீறி வலி வடக்கு மக்கள் செய்த உண்ணாவிரதப் போராட்டம் அரசின் பாராமுகத்தால் பயனற்றுப் போனது. இந்நிலையில் நின்று போயிருந்த இடித்தழிப்பு நடவடிக்கைகள் தற்போது மீண்டும் ஆரம்பமாகியுள்ளதாகவும் தற்போது பொதுமக்களது வீடுகளுடன் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாடசாலைகள் மற்றும் இந்து ஆலயங்கள் தேவாலயங்கள் என பலவும் முற்றாக இடித்தழிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பிரதி பொலீஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர இடமாற்றம்-

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் பெற்றுள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக பூஜித ஜயசுந்தர செயற்பட்டிருந்தார். இந்நிலையிலேயே அவர் யாழ்ப்பாணத்திற்கு; இடமாற்றம் பெற்றுள்ளார். இடமாற்றம் பெற்றுச்செல்லும் இவருக்கான விசேட அணிவகுப்பு மரியாதை மட்டக்களப்பு மாகாத்மா காந்தி பூங்கா சதுக்கத்தில் நேற்றையதினம் இடம்பெற்றது. இந்த அணிவகுப்பில் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேவன் சில்வா, உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தாயின் சமாதியை பார்க்கச் சென்றதால் ஜெயபாலன் கைதானார்-வாசுகி-

தனது தாயின் சமாதியைப் பார்க்கப்போனதால்தான் கவிஞர் ஜெயபாலன் இலங்கையில் கைது செய்யப்பட்டதாக தான் நம்புவதாக அவரது மனைவி வாசுகி பிபிசிக்கு கூறியுள்ளார். இது தொடர்பில் ஜெயபாலனின் மனைவி மேலும் தெரிவித்துள்ளதாவது, அவரது கைதுக்காக இலங்கை அரசாங்கம் வேறு காரணங்களைக் கூறினாலும், தனது வீட்டில் உள்ள தனது தாயின் சமாதியைப் பார்க்கப் போனதற்காகவே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். எங்களுடைய காணிக்குள் நாங்கள் போவது என்ன குறை?. எனது கணவர் இலங்கையில் இனவிரோதத்துக்கு குந்தகமாக எதுவும் அங்கு பேசவில்லை என தெரிவித்துள்ளார். இலங்கைக் கவிஞரும், நடிகருமான வா.ஐ.ச ஜெயபாலன் மாங்குளம் பகுதியில் வைத்து நேற்று முன்தினம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஊடக சுதந்திரம் என்ற போர்வையில் புலிகளின் புகழ்பாடுதல் சட்டவிரோத செயல்-

ஊடக சுதந்திரம் என்ற போர்வையில் புலிகளின் புகழ்பாடுதல், பெருமைபோற்றுதல் சட்டவிரோதமானதென தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அவ்வாறு எவரும் நடந்துகொண்டால் சட்ட நடவடிக்கைக்கு முகங்கொடுக்க வேண்டிவரும் என அந்த நிலையம் எச்சரித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் 27ம் திகதி மாவீரர் தினமாகும். இதனை அனுஸ்டிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். புலிகள் அழிக்கப்பட்டுள்ள நிலையில் மாவீரர் தினம் அனுஸ்டிப்பது சட்டவிரோதமான செயல் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இனவாதம் பேசி வெற்றி பெற்றதை மறந்துவிட்டு அரசாங்கத்துடன் இணைந்து அரசியல் செய்வதே சிறந்தது வடமாகாண முதலமைச்சர் திரு.விக்னேஸ்வரனுக்கு அமைச்சர்-டக்ளஸ் தேவானந்தா அறிவுரை.

imagesCAEM4UUCதேசிய இனப்பிரச்சினைக்கு மாகாணசபை முறைமையே மிகவும் சிறந்த தீர்வுத் திட்டம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் மிகச் சிறந்த அரசியல் பொறி முறையாக மாகாணசபை முறைமையை கருதுகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனவாத அரசியலை நடத்தியிருந்ததாகவும், அரசாங்கத்துடன் இணைந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டியது மிகவும் அவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார். வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு அபிவிருத்தித் திட்டங்கள் அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தப்படவில்லை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனவாத கொள்கைகள் கோட்பாடுகளை பின்பற்றியே மாகாணசபைத் தேர்தலில் வெற்றி யீட்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் தோல்வி குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் விரைவில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னரான சுதந்திரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிழையாக பயன்படுத்திக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.சிங்கள அரசியல் கட்சிக்கு எதிராக தமிழ் அரசியல் கட்சி அடைந்த வெற்றியாக தேர்தல் வெற்றி சித்தரிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாணசபை ஆட்சியில் முட்டுக்கட்டைகள்:முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

131123174146_cv_vigneswaran_304x171_bbc_nocreditஇலங்கையின் வடக்கே, இரண்டு மாதங்களுக்கு முன்னர் உருவான வடமாகாண சபையில் தாங்கள் செயற்பட முடியாத வகையில் பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்படுவதாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார்.
வடமாகாண சபையின் அலுவலகத்தில் பணியாற்றுகின்ற அதிகாரிகளினாலேயே தங்களுக்கு முட்டுக்கட்டைகள் போடப்படுவதாகவும் அவர் கூறியிருக்கின்றார்.
வவுனியா பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் கிராமிய வங்கிக் கிளையைத் திறந்து வைப்பதற்காக வருகை தந்திருந்தபோதே அவர் இதனைத் தெரிவித்திருக்கின்றார்.

மகிந்த சிந்தனை என்ற அரசியல் நோக்கங்களுக்காக செயற்படமுடியாது: முதலமைச்சர்

நிர்வாகச் செயற்பாடுகளில் இராணுவத் தலையீடு இருப்பதாகக் குறிப்பிட்டு, முன்னாள் இராணுவ அதிகாரியாகிய ஆளுனர் சந்திரசிறிக்குப் பதிலாக சிவில் ஆளுனர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று வடமாகாண சபையினால் ஏற்கனவே கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கின்றது. இது தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவிடம் தாங்கள் பேச்சுக்கள் நடத்தியிருப்பதாகவும், அவர் ஜனாதிபதியிடம் பேசி ஒரு தீர்வு காண்பதாக உறுதியளித்திருப்பதாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழுக் கூட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வடமாகாண சபையினரும் புறக்கணித்திருந்த நிலையில் அந்தக் குழுவின் இணைத் தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் முதலமைச்சரையும் ஜனாதிபதி நியமித்திருக்கின்றார். அதற்கான கடிதம் ஒன்று  ஜனாதிபதி செயலகத்திலிருந்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கட்கு வந்து கிடைத்திருக்கின்றது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இருப்பினும் ஒருங்கிணப்பு குழுக் கூட்டம் முதலமைச்சரின் தலைமையில் நடைபெற வேண்டிய நிலையில், மகிந்த சிந்தனை என்ற அரசியல் நோக்கங்களுக்காக இந்த இணைத் தலைமையை ஏற்றுச் செயற்பட முடியாது என்றும் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.