கடல் எல்லையை மீற வேண்டாம் – ராஜித சேனாரத்ன-
இந்திய கடல் எல்லைக்குள் பிரவேசிப்பதை தவிர்க்குமாறு கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன இலங்கை மீனவர் சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏற்கனவே இலங்கை மீனவர்கள் 87பேர் இந்திய சிறைகளில் இருப்பதாகவும், இவர்களில் 75 மீனவர்கள் தமிழகத்திலும் ஏனைய 12 மீனவர்கள் ஆந்திராவிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மீனவர்களின் 16 படகுகளையும் இந்திய பாதுகாப்பு தரப்பினர் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மன்னார் எரிவாயுக் கிணறுகள் தொடர்பில் மதிப்பீடு-
மன்னாரில் கண்டெடுக்கப்பட்ட எரிவாயு கிணறுகள் தொடர்பாக மதிப்பீடு மற்றும் வர்த்தக ரீதியான கலந்துரையாடல்களை இலங்கை அரசுடன் மேற்கொண்டு வருவதாகவும் தற்போதைய அகழ்வு பணிகளின் கால எல்லையை 2014 ஏப்ரல் வரை இலங்கை அரசு நீடித்துள்ளதாகவும் கெய்ன் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. கெய்ன் இந்தியாவின் இரண்டாவது காலாண்டுக்கான நிதி அறிக்கையை வெளியிட்டுள்ள நிறுவனம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. மன்னாரில் எரிபொருள் அகழ்வாராய்;ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடும் கெய்ன் நிறுவனம் இதுவரை நான்கு எரிபொருள் கிணறுகளில் அகழ்வுகள் மேற்கொண்டதுடன் அதில் இரு கிணறுகளில் ஹைதரோகார்பன் எரிவாயுவை கண்டுள்ளது.
வடக்கில் மீள் குடியமர்த்தக்கோரி முஸ்லிம் அமைப்பு ஆர்ப்பாட்டம்-
வடக்கிலிருந்து புலிகளால் சிங்கள, முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்தும், மீண்டும் வடக்கில் சிங்கள, முஸ்லிம் மக்களை மீள்குடியமர்த்தக் கோரியும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு நேற்று கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது. இதன்போது சிங்கள, முஸ்லிம் மக்களை வடக்கில் மீள்குடியமர்த்த கோரியும், பிரிவினையை தோற்றுவிக்க வேண்டாமெனவும் குறிப்பிடப்பட்ட பதாதைகளுடன் கோசமெழுப்பியவாறு இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது,
ஷேக் ஹசீனா இலங்கைக்கு விஜயம்-
இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பங்களாதேஸின் சார்பில்; அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா பங்கேற்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது பங்களாதேஸ்; செய்திதாள் ஒன்று இத்தகவலை வெளியிட்டுள்ளது எனினும் அவர் இலங்கை மாநாட்டில் ஒருநாள் மாத்திரமே பங்கேற்பார் என்று அந்த செய்திதாள் தெரிவித்துள்ளது.
மாநாட்டில் கலந்துகொள்ள 37 நாடுகள் உறுதியளிப்பு-
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதாக இதுவரை 37 நாடுகள் உறுதியளித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அமைச்சர் இதனை கூறியுள்ளார் ஏனைய நாடுகளும் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ளும் என நம்புவதாக பேச்சாளர் கூறியுள்ளார்.