வெளிவிவகார அமைச்சர்கள் பேர்த் நகரில் சந்திப்பு- 

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்திற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அவுஸ்ரேலியாவின் பேர்த் நகரில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக இந்திய வெளிவிவகார அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய கடல்சார் சங்க கூட்டம் அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற நிலையில், அதில் பங்குகொண்ட நிலையிலேயே மேற்படி அமைச்சர்களுக்கு இடையிலான சந்திப்பும் இடம்பெற்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

உயர்மட்ட வர்த்தக பிரதிநிதிகள்-

பொதுநலவாய வர்த்தகத்துறை அமர்வு கொழும்பில் இடம்பெறும் போது அதில் குறித்த நாடுகளின் முதன்மை வர்த்தக பிரதானிகள் பங்கேற்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, இத்தகவலை வெளியிட்டுள்ளார். பொதுவாக இலங்கையில் இருந்து முதலீட்டு சபையின் பிரதிநிதிகள் வெளிநாடு செல்லும்போது, அவர்கள் வேறு நாடுகளின் இரண்டாம் மூன்றாம் நிலை வர்த்தக பிரதானிகளையே சந்திப்பதுண்டு. எனினும் இலங்கையில் நடைபெற போகும் வர்த்தக அமர்வில், பொதுநலவாய நாடுகளைத் தவிர, சீனா மற்றும் அரபு நாடுகளின் உயர் வர்த்தக பிரதிநிதிகள் பங்கு கொள்ளவுள்ளனர். எனவே இது இலங்கைக்கு பாரிய முதலீட்டு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 பொதுநலவாய மாநாடு – ஜூலி பிஷோப் கருத்து-

சவால்களை எதிர்கொள்வதற்காக இலங்கைக்கு ஆதரவளித்து, பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வது மிகவும் முக்கியமானது. நிச்சயமாக அதற்காக நாடுகளை நாம் ஊக்குவிக்கின்றோம். அந்த தகவல்களை பல விதங்களில் நாம் கனடாவுக்கு வழங்கியுள்ளோம். அது குறித்து அவர்கள் தீர்மானித்திருக்கலாம். பிரதமர் டொனி அபர்ட் உடன் நான் இலங்கைக்கு செல்கின்றேன். இலங்கை அரசுடன் இணைந்து செயற்பட்டு அவர்களை நாம் ஊக்குவிப்போம். அவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை வெற்றிகரமாக தீர்ப்பதற்கு பிராந்திய நாடுகள் மற்றும் சர்சதேச நாடுகள் என்ற வகையிலும் பொதுநலவாய நாடுகள் என்ற வகையிலும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இலங்கையின் நீண்டகால நல்லிணக்கத்திற்கு இது மிகவும் முக்கித்துவம் வாய்ந்தது என்று நான் நம்புகிறேன்.

 கடும் செய்தியை கொண்டுசெல்கிறோம்: பிரிட்டன்-

பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ள கொழும்பு செல்லும் பிரிட்டன் பிரதிநிதிகள் இலங்கை அரசுக்கு ஒரு கடுமையான செய்தியை கொண்டு செல்லப்போவதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசானது மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் அரசியல் தீர்வு ஆகிய விடயங்களில் திட்டவட்டமான முன்னேற்றத்தைக் காண வேண்டுமென்ற செய்தியை இலங்கை அரசுக்கு எடுத்துச் செல்லப்போவதாக வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான இராஜாங்கச் செயலர் ஹியூகோ ஸ்வயர் நாடாளுமன்றில் கூறியுள்ளார். பொதுநலவாய மாநாட்டிற்கு வரும் ஊடகங்கள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு தகவல் சேகரிக்க கட்டுப்பாடுகள் இருக்கலாகாது என்பதைத் தெளிவாகக் கூறியிருக்கின்றோம். இலங்கை அரசாங்கம், பொதுநலவாயம், ஐ.நா. மனித உரிமை பேரவை என்பவற்றினுடனான எமது தொடர்புகள் மூலம் இந்த விடயங்களை நாம் ஏற்கெனவே வலியுறுத்தி வந்துள்ளோம் வேறு நாடுகளுடனும் நாம் தொடர்புகளை வைத்திருக்கின்றோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.