வவுனியா – காரைநகர் நேரடி பஸ் சேவை-

வவுனியாவிலிருந்து காரைநகருக்கான நேரடி பஸ்சேவை நாளைமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. 30 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் முதல் தடவையாக இந்த பஸ் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா பஸ் டிப்போவின் உதவி செயலாற்று முகாமையாளர் சிவசுந்தரம் கனகேந்திரன் தெரிவித்துள்ளார். மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த பஸ் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீனவர்கள் குறித்து இரு நாட்டு கடற்படை பேச்சு-

இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பில், இரண்டு நாடுகளதும் கடற்படையினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்தியாவின் சுஹன்யா என்ற கப்பலில் வைத்து, சர்வதேச கடற்பரப்பில் இடம்பெற்ற சர்வதேச எல்லை பாதுகாப்பு சம்பந்தமான கலந்துரையாடலில் இவு;விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கை மீனவர்களும், இந்திய மீனவர்களும் தங்களின் எல்லைகளை மீறி மீன்பிடியில் ஈடுபடுகின்றமையை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் தீவிரமாக மேற்கொள்ள இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க அதிவேக வீதியில் முதல் விபத்து-

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் முதலாவது வாகன விபத்து இடம்பெற்றுள்ளது. 19ஆவது மைல்கல் அருகில் கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக பொலீஸார் தெரிவித்துள்ளனர். வாகனம் முற்றாக சேதமடைந்த நிலையில், அதில் பயணித்த இருவர் சிறுகாயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக கார் வழுக்கிச் சென்று மதில் சுவர்களில் மோதி விபத்துக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.

அதிவேக வீதியில் ஆட்டோவில் பயணித்தவர் கைது-

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில ஆட்டோவில் பயணித்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அதிவேக வீதியில் கடமையில் இருந்த அதிகாரிகளால் குறித்த ஆட்டோ சாரதி கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதிவேக வீதியில் ஆட்டோக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.