வடமாகாணத்தில் புதிய தொழில் வாய்ப்புகளை வழங்கும் போது காணாமல் போன குடும்பங்களின் அங்கத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுதல் வேண்டும். மனித உரிமை ஆர்வலர் சண் மாஸ்டர்; வலியுறுத்தல்

SAM_9712 SAM_9715 SAM_9718 copyகடந்தவாரம் (30.10.2013) வவுனியாவில் வவுனியா மாவட்ட காணாமல் போனோர் சங்க அங்குரார்ப்பண நிகழ்வு வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு தலைவர் கி.தேவராசா தலைமையில் மாவட்ட பிரஜைகள் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் காணாமல் போனோரின் பெற்றோர்கள் உறவினர்கள் சமுகமளிப்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, ஒரு நாட்டில் வர்த்தகர் சங்கம், ஆசிரியர் சங்கம், கலை இலக்கிய சங்கம், மாதர் அபிவிருத்தி சங்கம், கிராம அபிவிருத்தி சங்கம் என்று பல சங்கங்கள் இருப்பது ஆரோக்கியமானது. ஆனால் காணாமல் போனோர் சங்கம் உருவாகும் அளவுக்கு நாட்டின் மனித உரிமை நிலைமைகள் இருப்பது வேதனையளிக்கிறது. இத்தகைய சங்கங்கள் நாட்டில் உருவாக விடக்கூடாது என்பதே அரசின் கடும்போக்கான நிலைப்பாடாகும். ஆனால் காணாமல் போனோர் தொடர்பில் அரசின் பொறுப்புக்கூறா தன்மையும், நாளுக்கு நாள் காணாமல் போனோர் பட்டியல் நீண்டு கொண்டு செல்லும் நிலைமையுமே காணாமல் போனோர் சங்கங்கள் உருவாகுவதற்கு அடிப்படையாக அமைகின்றது. சிறீலங்கா அரசானது காணாமல் போனோர் தொடர்பில் பொறுப்புணர்ச்சியுடன் பதிலளித்து, காணாமல் போனோரை கண்டுபிடித்து உறவினர்களுடன் இணைத்து, பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணமளிக்கும் போதே இத்தகைய சங்கங்கள் அற்றுப்போகும். 
உழைத்து தமது குடும்பத்தின் பொறுப்புகளை கவனிக்க வேண்டிய வயதில் பல இளைஞர் யுவதிகளும், குடும்ப தலைவர்களும் காணாமல் போகச்செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் உழைப்பை நம்பி தங்கி வாழும் நிலையிலிருந்த பல குடும்பங்கள் இன்றும் கூட மீள முடியாத வறுமை நிலையிலுள்ளன. இக்குடும்ப அங்கத்தவர்கள் கண்ணீரோடு படுத்து கண்ணீரோடு எழும் நிலைமை வழமையாகி விட்டது. 
இதுவரை காலமும் இந்த குடும்பங்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டுக்கு அரசோ, அன்றி அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களோ எத்தகைய முழுமையான நிகழ்ச்சி திட்டங்களையும் முன் வைக்கவில்லை. எனவே கூட்டமைப்பால் அமைக்கப்பட்டுள்ள வடமாகாணசபை அரசு இந்த குடும்பங்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை பல குடும்பங்களுக்கு துளிர் விட ஆரம்பித்திருக்கின்றது. வடமாகாணசபையின் அமைச்சுகளூடாக வாழ்வாதார உதவி திட்டங்களையும், புதிய தொழில் வாய்ப்புகளையும் வழங்கும் போது காணாமல் போன குடும்பங்களின் அங்கத்தவர்களுக்கு முன்னுரிமை அளித்தால் இந்த குடும்பங்கள் பொருளாதார ரீதியில் முன்னேற்றத்தை அடைய முடியும்.
அதேவேளை இறுதி யுத்தத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்டு இன்றும் அதன் பாதிப்புகளிலிருந்து மீண்டெழுந்து வர முடியாத குடும்பங்களின் அங்கத்தவர்களுக்கும், முன்னாள் போராளிகளுக்கும், தமிழ் அரசியல் கைதிகளின் குடும்ப அங்கத்தவர்களுக்குமென்று விசேட செயற்றிட்டத்தை ஏற்படுத்தி தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு வடமாகாணசபையூடாக நடவடிக்கை மேற்கொள்ளப்படுதல் வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.