வலி. வடக்கு வீடழிப்பு தொடர்பில் அறிவிக்கவில்லை-யாழ் அரச அதிபர்-

யாழ். வலி. வடக்கில் வீடுகள் இடித்தழிக்கப்படுவதாக தனக்கு எந்தவித அறிவித்தலும் கிடைக்கப்பெறவில்லை என யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்றுபகல் அரச அதிபரை ஊடகவியலாளர்கள் சந்தித்து வலி.வடக்கு பிரச்சினை தொடர்பாக எதுவும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றதா? என கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வலி.வடக்கில் பொதுமக்களின் வீடுகள் இடித்தழிக்கப்படுவதாக இதுவரை எனக்கு எந்தவித உத்தியோகபூர்வ அறிவித்தலும் கிடைக்கவில்லை. வீடுகள் இடித்தழிக்கப்படுவதாக ஊடகங்கள் மூலமே அறிந்து கொண்டேன். அது தொடர்பாக பிரதேச செயலர்கூட இதுவரை எனக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. இப்பிரச்சினை தொடர்பாக உயர் மட்டங்களில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அறிந்து கொண்டேன் எனவும் அரச அதிபர் கூறியுள்ளார். நாவற்குழி பிரதேசத்தில் வீடமைப்பு அதிகார சபையினரால் காணிகள் வழங்கப்படுவது தொடர்பாக தங்களுக்கு அறிவிக்கப்பட்டதா? என ஊடகத்தினர் கேட்டபோது, நாவற்குழி பிரதேசத்தில் காணிகள் பங்கிட்டு வழங்கப்படுவது தொடர்பாக வீடமைப்பு அதிகார சபையினரால் இதுவரை எனக்கு அறிவிக்கப்படவில்லை. இக் காணிகள் ஏற்கனவே வீடமைப்பு திட்டத்திற்காகவே வீடமைப்பு அதிகார சபையிடம் வழங்கப்பட்டிருந்தது. ஆனாலும் தற்போது அந்த திட்டத்திற்காக காணிகள் பகிர்ந்தளிக்கப்படும்போது அது தொடர்பாக அறிவித்து இருக்க வேண்டும். ஆனால் எனக்கு அறிவிக்கப்படவில்லை என பதிலளித்துள்ளார்.

யாழ். அரச அதிபர் ஜப்பான் தூதரக அதிகாரிகள் சந்திப்பு-

யாழ். மாவட்டத்தில் ஜப்பானின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் தேவைகள் குறித்தும் யாழ். அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திற்கும் அந்நாட்டு தூதரக உயரதிகாரிகளுக்கும் இடையில் கலந்துடையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றுகாலை நடைபெற்ற இக் கலந்துரையாடலில் ஜப்பான் தூதரகத்தைச் சேர்ந்த எல்.நாசி .பி.சினோசி உள்ளிட்ட ஐவர் பங்கு கொண்டிருந்தனர். சந்திப்பினையடுத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர், யாழ்.மாவட்த்தில் மீள்குடியேற்றப்பட்ட பல குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்து கொடுக்கப்படவேண்டிய தேவையுள்ளது. அதனைவிட வாழ்வாதாரத் தொழில் துறைகளான மீன்படி, விவசாயம் என்பனவற்றையும் முன்னேற்ற வேண்டியுள்ளது. எனவே இவ்விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன என்றார்.

அரச தலைவர்கள் மாநாடு-

22வது பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு ஆரம்பமாவதற்கு இன்னும் 11 நாட்களே எஞ்சியுள்ளன. இந்நிலையில், கொழும்பு நகரை மையப்படுத்தி மாநாடு இடம்பெறவுள்ளதன் காரணமாக நகரை அழகுபடுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. கொழும்பு நகரின் பல வீதிகளில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இந்த மாற்றங்களை எதிர்வரும் 8ஆம் திகதிக்குள் நிறைவிற்கு கொண்டு வர எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. இதனிடையே, பல வீதிகள் புனரமைக்கப்பட்டு வருவதாக கொழும்பு மாநகர சபையின் தொழிற்துறை பிரிவின் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க உயர்மட்ட பிரதிநிதிகள் வருகை-

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள வெளிவிவகார செயலர்கள் உள்ளிட்ட வெளிநாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகள் எதிர்வரும் 10ஆம் திகதிமுதல் நாட்டிற்கு வருகைதரவுள்ளனர். எதிர்வரும் 11ஆம் திகதிமுதல் வெளிவிவகார அமைச்சர்கள் நாட்டிற்கு வருகைதரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பொதுத் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ரொட்னி பெரேரா கூறியுள்ளார். வெளிநாடுகளின் அரச தலைவர்கள் 14ஆம் திகதிமுதல் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டிற்கு வரவுள்ள அரச தலைவர்களை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

இலங்கை – இந்திய கடற்படையின் கூட்டு பயிற்சி-

இலங்கை – இந்திய கடற்படையின் கூட்டுப் பயிற்சிகள் கோவாவை அண்மித்த கடற்பரப்பில் இன்று ஆரம்பமாகவுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது. இப் பயிற்சிகளில் கலந்துகொள்ளும் நோக்கில், கடற்படையின் சமுத்திர கப்பல் இந்தியாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமான்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். இன்று ஆரம்பமாகும் இந்த பயிற்சி எதிர்வரும் 08ஆம் திகதிவரை இடம்பெறும் என கடற்படை பேச்சாளர் கூறியுள்ளார். இலங்கை – இந்திய கடற்படைகளுக்கு இடையில், வருடாந்தம் முன்னெடுக்கப்படும் இந்த கூட்டுப் பயிற்சிகள் கடந்த வருடம் திருகோணமலை கடற்பரப்பில் இடம்பெற்றதையும் கொமான்டர் கோசல வர்ணகுலசூரிய நினைவுகூர்ந்தார்.

வயது வந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு-

இலங்கையில் வயது வந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதன் காரணமாக, எதிர்வரும் 28 வருட காலப்பகுதியினுள், பாரிய சமூக பிரச்சனைகள் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சமூக பாதுகாப்பு சபையின் தலைவர் சுமணா ஆரியதாச இந்த எச்சரிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். நாட்டின், முதியோர் தொகை அதிகரிப்பைப் போல சிறார் தொகையும் வெகுவாக அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய எதிர்வரும் 2041ஆம் ஆண்டளவில், ஐவரில் நால்வர் வயதானவர்களாக இருப்பர் எனவும் அவர் கூறியுள்ளார்.

யாழில் கிறிஸ்தவ ஆலயம்மீது கல் வீச்சு-

யாழ். புன்னாலைக் கட்டுவன் பிரதேசத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயம்மீது நேற்றிரவு ஒயில் ஊற்றி கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இனந்தெரியாத குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த கல்வீச்சில் தேவாலயத்தின் 26 யன்னல் கண்ணாடிகள் சேதமாக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தேவாலய நிர்வாகத்தினரால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அமைச்சுக்குப் பெயர் மாற்றம்-

துறைமுக மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சானது நெடுஞ்சாலைகள், துறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சாக பெயர்மாற்றப்பட்டுள்ளது. பெயர்மாற்றம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை இன்றையதினம் பெற்றுக்கொண்டதாக துறைமுக மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

பிரித்தானியா செல்வதற்கான பிணை வைப்பீடு இரத்து- பிரித்தானியாவுக்கு சுற்றுலா செல்பவர்கள் மூவாயிரம் பவுண்ட்ஸ்களை பிணைப் பணமாக செலுத்த வேண்டும் என்ற கட்டாய திட்டத்தை இரத்துச் செய்யவுள்ளதாக பிரித்தானிய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கை உள்ளிட்ட ஆறு ஆபத்தான நாடுகளிலிருந்து தமது நாட்டுக்கு பயணிப்போர் இவ்வாறான பிணைப் பணத்தை செலுத்த வேண்டும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், கானா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளில் இருந்து பிரித்தானியாவுக்கு பயணம் செய்வோருக்கு ஆறு மாதகால விசாவை வழங்க பணத்தை வைப்புச்செய்யும் திட்டம் கடந்த ஜூன் மாதம் முன்வைத்திருந்தது. அதனை நவம்பர் மாதம் அமுல்படுத்தப்படும் என உள்துறை அமைச்சர் தெரேசா தெரிவித்திருந்தார். 6 மாதகால விசா பெறுபவர்கள் அந்த அனுமதி காலத்தையும் தாண்டி பிரித்தானியாவில் தங்கியிருந்தால் வைப்புச் செய்த அந்த பணத்தை அரசாங்கம் பறிமுதல் செய்யும் என அந்த திட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. விசா காலம் நிறைவடைந்து தொடர்ந்தும் பிரித்தானியாவில் தங்கியிருப்போர் அங்கு தங்கியிருப்பதை தடுக்கும் வகையில் இந்த திட்டத்தை கொண்டுவருவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வந்ததாக உள்துறை அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அதனை தொடர வேண்டும் என இன்னமும் முடிவு செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆரம்பத்தில் இது ஆயிரக்கணக்கான பயணிகளை பாதிக்கும் என்றாலும் நூற்றுக்கணக்கானவர்களே அதற்கான இலக்காக இருந்ததாக கடந்த ஜூன் மாத அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.