இராணுவத்தினருக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரதப் போராட்டம்

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தியும் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் வீடழிப்பு நடவடிக்கையினை தடுத்து நிறுத்தக் கோரியும் எதிர்வரும் 12ஆம் திகதி காலை 8மணி தொடக்கம் மாவட்டபுரம் கந்தசுவாமி கோவில் முன்பாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வலி வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் அறிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பினை மீறி வலிகாமம் வடக்கில் மக்களின் வீடுகள் இராணுவத்தினரால் தொடர்ந்து இடித்தழிக்கப்பட்டு வருவதையடுத்தே இந்த போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கைக்கு எதிராக நிற்குமாறு அழுத்தம்-

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அமைப்பின் மாநாட்டில் நியூசிலாந்து, இலங்கைக்கு எதிராக ஒரு தீர்க்கமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பான தூதுக்குழு மற்றும் மனு ஒன்றை சர்வதேச மன்னிப்புச் சபை நியூசிலாந்து பாராளுமன்றிற்கு இன்று அனுப்பியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை மேற்கொண்டுள்ள மனித உரிமை மீறல்களை நியூசிலாந்து கணக்கிலெடுக்காது இருக்க முடியாது எனவும், எனவே பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டின்போது பொதுநலவாய அமைப்பு தலைவர் பதவி இலங்கை ஜனாதிபதிக்கு வழங்கப்படுவதை நியூசிலாந்து எதிர்க்க வேண்டும் எனவும் சர்வதேச மன்னிப்புச் சபையின் பேச்சாளர் கிராண்ட் பெயில்டோன் கூறியுள்ளார்.

பொதுநலவாயத்தை ஜெயா எதிர்த்தமைக்காக நன்றி தெரிவிப்பு-

பொதுநலவாய மாநாட்டுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, பிரிட்டன் முன்னாள் அமைச்சர் ஜோன் மாரி ரெயன நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அதில், பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகள் கோட்பாடுகளுக்கு மதிப்பளித்து இலங்கை அமர்வுகளில் இந்தியா பங்கேற்கக் கூடாது என கோரி தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது. இதற்காக உலகத் தமிழர் பேரவையின் சார்பில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சியில் விபத்து, இராணுவ அதிகாரிகள் உயிரிழப்பு-

கிளிநொச்சியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவத்தின் லான்ஸ் கோப்ரல் ஒருவரும், அதிகாரி ஒருவரும்  மரணமடைந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி இராணுவத் தலைமையகத்திலிருந்து குருநாகல் இராணுவத் தலைமையகத்திற்கு சென்று கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

பொதுநலவாயத்தை முன்னிட்டு புதிய 500 ரூபா நாணயத்தாள் வெளியீடு-

பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு புதிய 500 ரூபா நாணயத்தாளை வெளியிடவுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்தப் புதிய 500 ரூபா நாணயத்தாளில் பொதுநலவாயம் – இலங்கை என்ற இலச்சினை பொறிக்கப்பட்டிருக்கும் என்பதுடன், இந்த நாணயத்தாள் நவம்பர் 15ஆம் திகதியிலிருந்து சுழற்சிக்கு விடப்படும் எனவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரின் சடலங்கள் மீட்பு

அநுராதபுரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரின் சடலங்களை இன்றுகாலை பொலிஸார் மீட்டுள்ளனர். அநுராதபுரம், ஹல்மில்லகுளம பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்தே மேற்படி சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்றுமொருவர் ஆபத்தான நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

பண்டாரவளை பஸ் விபத்தில் 10 பேர் பலி, 18 பேர் காயம்-

பண்டாரவளை, பூனாகலை, மாபிடிய பகுதியில் பஸ் ஒன்று 350அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. இவ்விபத்து நேற்றுமாலை 6.50அளவில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 16வயது சிறுமி உள்ளிட்ட 5 பெண்களும் அடங்குகின்றனர். விபத்தில் பஸ் சாரதி மற்றும் நடத்துநனர் உட்பட மேலும் 18 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.