கிறீன்கட்சி உறுப்பினர்கள் இலங்கை வர முயற்சி-

அவுஸ்திரேலிய கீரின் கட்சி செனட்டர் லீ ஆர்ஹியான்னோன் இலங்கைக்கு விஜயம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். அகதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினை குறித்து ஆராய்வதற்காக பொதுநலவாய நாடுகள் மாநாட்டிற்கு முன்பதாகவே இலங்கை செல்லவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நியூஸிலாந்தின் கீரின் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் லோகியும் பொதுநலவாய நாடுகள் மாநாட்டிற்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஆராய அவர் முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இதேவேளை நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

சனல் 4 இயக்குனர் இலங்கை வர அனுமதி-

சனல் 4 ஆவணப்படங்களின் இயக்குனர் கெல்லும் மெக்ரே இலங்கைக்குள் நுழைவதற்கான விஸா வழங்கப்பட்டுள்ளது என ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் செய்தி சேகரிப்பதற்காகவே இவருக்கு விஸா வழங்கப்பட்டுள்ளது. பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் செய்தி சேகரிப்பதற்காக சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்தின் குழுவினருக்கும் விஸா வழங்கப்பட்டுள்ளது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களமும் அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. 
 
மன்மோகன் எதிர்பார்பை நிறைவேற்ற வேண்டும்

பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களது மாநாட்டில் பங்குகொள்ளும் பொருட்டு இந்திய பிரதமர் மன்மோன்சிங் இலங்கை சென்றால், அவர் வடக்கிற்கு செல்வது சிறந்தது என இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். அது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனிடையே, இலங்கை மாநாட்டில் இந்திய பிரதமர் கலந்து கொள்வது தொடர்பில் இதுவரையில் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பது இங்கு குறிப்பிட்டத்தக்கது.

புத்தூர் பெண் கொலை தொடர்பில் கவனயீர்ப்பு போhட்டம்-

யாழ். புத்தூர் பிரதேசத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகள் கைதுசெய்யப்பட வேண்டும் என கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. யாழ். புத்தூர் கிழக்கு பருத்தித்துறை வீதியில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் இன்றுகாலை 7 மணிமுதல் 10 மணிவரை இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.  உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள், ஊர்மக்கள் பெண்கள் அமைப்பினர், என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். கடந்த 29ஆம் திகதி புத்தூர் கிழக்கை சேர்ந்த அமிர்தலிங்கம் மைதிலி (வயது 27) எனும் பெண் வீட்டுக்கு அருகில் உள்ள தோட்ட கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.  இந்த பெண் பாலியல் பலாத்தகாரத்திற்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் கொலை செய்யப்பட்டு கிணற்றுக்குள் போடப்பட்டு இருக்கலாம் என ஊர் மக்கள் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக உரிய விசாரணைகள் துரித கெதியில் மேற்கொள்ளப்பட்டு இந்த கொலை குற்றச்செயலுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என கோரியே கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.