மீள்குடியேற்றத்தை வலியுறுத்தியும், வலி.வடக்கு வீடழிப்பைக் கண்டித்தும் கூட்டமைப்பு பிரமுகர் தம்பிராசா உண்ணாவிரதம்

யாழ். வலி. வடக்கு மக்களின் வீடுகள் படையினரால் இடித்தழிக்கப்படுவதை கண்டித்தும் மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தியும் நாளை உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக கூட்டமைப்பு பிரமுகர் முத்தையாப்பிள்ளை தம்பிராசா இன்று அறிவித்துள்ளார். வலிகாமம் வடக்கிலிருந்து கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இடமபெயர்ந்து முகாம்களில் வாழும் மக்களின் வீடுகள் இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்படுகின்றன. அவற்றினை எதிர்க்கும் விதமாக யாழ். நகரில் உள்ள முனியப்பர் ஆலயம் முன்பாக நாளைகாலை 6.15 மணிமுதல் வெள்ளிக்கிழமை வரை உண்ணாவிரத பேராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த வடமாகாண சபை தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளராக தம்பிராசா களமிறங்கியிருந்தார்.

தம்பி.க.மு.தம்பிராசா
பாலாவோடை,
களபூமி,
காரைநகர்.
06.11.2013.

மேன்மை தங்கிய அதிமேதகு மகிந்த ராஐபக்ச அவர்கட்கு,
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு,
அலரிமாலிகை,
கொழும்பு.

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்,
சு. அருமைநாயகம் அவர்கள் ஊடாக,

ஜே.வி.பி கட்சியினரின்; விடுதலைக்கும் பாதுகாப்பான வாழ்விற்கும் ஐ.நா சபை வரை சென்று போராடி, யதார்த்தவாதியாக செயல்பட்ட மேன்மைதங்கிய அதிமேதகு எமது ஜனாதிபதி அவர்களே! எம் மக்களுக்காகவும் உங்களுள் ஒழிந்து கொண்டிருக்கும் இரக்க சிந்தனையுள்ள இதயத்தை திறந்து உங்களது அன்பை வாரிவழங்கி எமது மக்களின் சுதந்திரமான வாழ்விற்கும் அவர்களது இருப்பிற்கும் வழிசமைத்து தருவீர்கள் என்ற மிகுந்த நம்பிக்கையில் இவ் வேண்டுதலை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன்.

1. வலி வடக்கு மக்களின் வாழ்விற்கும் அவர்களின் பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்டு 6352 ஏக்கர்  நிலப்பரப்பு  கொண்ட  நிலத்தையும்  அவர்களது வாழ்விடங்களையும் (வீடுகளையும்) அவர்களுக்கே வழங்கி, அங்கே எம்மக்கள் மீண்டும் குடியமர்த்தப்பட்டு அவர்களின் சுதந்திரமான மேம்படுத்தப்பட்ட வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கப்படுவதற்கும்… தற்போது அவர்களது இருப்பிடங்கள் அனைத்தும் எம்மக்களை பாதுகாப்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்ற எமது இராணுவமே அவர்களது இருப்பிடங்களை அழித்துக் கொண்டிருப்பதை மக்களும் பத்திரிகையாளர்களும் பார்த்திருக்கின்றார்கள். இச்சம்பவத்தை எமது கட்சியின் தலைவர் கௌரவ இரா. சம்பந்தன்  ஐயா  அவர்கள்  தங்களுக்கு  ஏற்கனவே  தெரியப்படுத்தி இருக்கின்றார். அந்த  செயல்பாட்டை  நிறுத்துவதாக   தாங்களும்  உறுதி கூறியிருக்கின்றீர்கள். இருந்த  போதிலும்  எம் மக்களின்  இருப்பிடங்கள் எமது இராணுவத்தினராலேயே அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற மிகவும் தரக்குறைவான நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. எம்மக்கள் எல்லோரும் அச்சம் அடைந்து நிறைந்த பயத்திலும், மிகுந்த சோகத்திற்கும் உட்படுத்தப்பட்டிருக்கின்றார்கள். கொழும்பு 01இல் இராணுவ தலைமையகம் அமைந்திருந்த பிரதேசத்தையே வெளிநாட்டவரின் முதலீட்டில் உல்லாசப்பயனிகளுக்காக விடுதிகள் அமைப்பதற்காக வழங்க முடியுமாயிருந்தால் எமது மக்கள் பரம்பரை பரம்பரையாக தொண்றுதொட்டு வாழ்ந்திருந்த எமது மக்களின் இருப்பிடங்களை அவர்களுக்கே வழங்குவது தான் தர்மமும், அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமும் ஆகும். எமது மக்களின் பாதுகாப்பிற்காக தான் நிலைகொண்டிருக்கின்றோம் எனக்கூறிக்கொண்டு பலாலி முகாமில் நிலைகொண்டிருக்கின்ற எமது இராணுவத்தை சற்று உள்நகர்த்தி எமது மக்களின் வாழ்விடங்களை அவர்களுக்கே வழங்குவது தான் தங்கள் முன்னுள்ள மிக முக்கியமான தர்மமும் நியாயமும் உள்ள கடமையாகும் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். ஆகவே அவர்களின்  பாதுகாப்பையும்  சுதந்திரமான வாழ்க்கைக்கும் உத்தரவாதப்படுத்தி உத்தரவிடுவதற்கும்

2. ஆண்டாண்டு காலமாக சந்தேக நபர்கள் என்ற போர்வையிலும், தகவல் தரவில்லை என்று குற்றம் சாட்டியும் விசாரணைகள் எதுவுமில்லாது குற்றப்பத்திரம் கூட இதுவரை தாக்கல் செய்யாது சிறைகளில் வாடுகின்ற எமது உறவுகள் அனைவரின் விடுதலைக்கும் அவர்களின் சுதந்திரமான அச்சமற்ற வாழ்விற்கும், பாதுகாப்பிற்கும்

3. காணமாற் போனவர்கள் என அடையாளம் இடப்பட்டு திரைமறைவு சிறைகளில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் எமது உறவுகளின் விடுதலைக்கும் அவர்களின் சுதந்திரமான அச்சமற்ற வாழ்விற்கும் பாதுகாப்பிற்கும்

4. நீண்டகாலப் போரின் சாட்சிகளாக பல்லாயிரக்கணக்கில் வாழ்ந்து வரும் எமது உறவுகளான தமிழ் விதவைப் பெண்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படுவதற்கும் அவர்களது சுதந்திரம் அச்சமற்ற வாழ்வுக்கும், பாதுகாப்புக்கும், பெண்ணுரிமைக்கும் அவர்களது குடும்பத்தின் வாழ்க்கையை மேம்படுத்தப்படுவதற்கும், சிறந்த முறையில் அவற்றை கையாளுவதற்கும் வடக்கு கிழக்கு மாகாண சபைகளுக்கு மேலதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டு சிறந்த முறையில் இயங்குவதற்கு வழிசமைத்து தருவதற்கும்

5. கடந்த போர்க்காலங்களில் அகப்பட்டு அங்கவீனர்களாக காட்சி தரும் எமது உறவுகளின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பத்தப்படுவதற்கும் சிறந்த முறையில் கவனத்தில் எடுக்கப்பட்டு அவர்களது சுதந்திரம், அச்சமற்ற வாழ்க்கைக்கும், பாதுகாப்புக்கும் அவர்கள் வாழ்வதற்குரிய சலுகைகள் முதலானவற்றை கையாளுவதற்கும் வடக்கு கிழக்கு மாகாண சபைகளுக்கு மேலதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டு சிறந்த முறையில் இயங்குவதற்கு வழிசமைத்து தருவதற்கும்

 மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை தங்கள் முன் வைத்து தம்பி க.மு. தம்பிராசா ஆகிய நான் கார்த்திகை மாதம் 7ம்,8ம் திகதிகளில் அடையாள உண்ணாவிரதத்தை யாழ்ப்பாணம் கோட்டை முனியப்பர் ஆலய முன்றலில் ஆரம்பித்து அதை தொடர்ந்து எனது பாதயாத்திரை ஏற்கனவே முடிக்கப்பட்டிருந்த நல்லூர் கந்தன் ஆலயத்தில் இருந்து வளாலாய் கிராமத்திற்கும் அங்கிருந்து சேந்தான் குளக் கிராமத்திற்கும் அதன் பின்னர் யாழ்ப்பாணம் கோட்டை முனியப்பர்  ஆலயத்தை வந்தடையும். எனது கோரிக்கைகள் சம்பந்தமாக மக்களின் மேலான விருப்பத்தை மக்கள் எனது பாதயாத்திரையின் போது தாங்களும் கலந்து கொண்டு தங்களின் மேலன கவணத்திற்கு தெரிவித்துக்கொள்வார்கள். எமது மக்களின் பூரணத்துவமுடைய சுதந்திரமான அச்சமற்ற வாழ்வுக்கும், இருப்பிற்கும் அவர்களின் பாதுகாப்பிற்கும் உண்மையான உத்தரவாதம் அளிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் வரை எனது உண்மையான அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்; என்பதை தங்களின் மேலான மேலான கவணத்திற்கு தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.
‘நன்றி’
தங்கள் உண்மையுள்ள,

………………………………………………….
தம்பி.எ.க.மு. தம்பிராசா