இன்று முதல் அதிவிரைவு தபால் சேவை-
இலங்கை தபால் சேவை வரலாற்றில் முதன்முறையாக அதிவிரைவு தபால் சேவை இன்று உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் அதிவிரைவு தபால் சேவை இன்று முற்பகல் 10மணி ஒரு நிமிடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அதிவிரைவு தபால் சேவையின் ஊடாக 24 மணித்தியாலத்திற்குள் தபாலை உரியவருக்கு சேர்ப்பதற்கு எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் 9 வாகனங்கள் இந்த சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன. இதன்பிரகாரம் கிழக்கு மாகாணத்திலும் அதிவிரைவு தபால் சேவையின் அங்குரார்ப்பண நிகழ்வு மாகாண தபால் மாஅதிபர் வாசுகி அருளாராஜா தலைமையில் இன்று நடைபெற்றது. குறைந்த கட்டணத்தில் இந்த சேவைகள் முன்னெடுக்கப்படுவதுடன், 20 கிராமிற்கு ஆரம்ப விநியோக வலையத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு 50ரூபா கட்டணம், ஏனைய பகுதிகளுக்கான விநியோகக் கட்டணமாக 60 ரூபாவும் அறவிடப்படவுள்ளது. மேலதிக ஒவ்வொரு 10 கிராமிற்கும் 10 ரூபாவால் கட்டணம் அதிகரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மாற்றத்தை பார்க்க விரும்புகின்றேன்: ஹேக்-
இலங்கைப் பிரச்சினையை பொறுத்தளவில் எல்லையோரத்தில் நிற்பதனால் ஐக்கிய இராச்சியத்தால் பெரிதாக ஒன்றும் செய்யமுடியாது எனவும் இலங்கையில் மாற்றத்தைக் காண விரும்புபவர்களில் தானும் ஒருவர் எனவும் பிரித்தானிய வெளிவிவகார செயலர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார். பொதுநலவாய மாநாட்டை பகிஸ்கரிப்பது தவறானது. மாநாட்டுக்கு செல்வதே சரியானது. யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் சர்வதேச சமூகம் இதையே செய்தது. அங்கு செல்வதனால் நிலைமையை நாம் நேரடியாக அவதனிக்க முடியும். சகல தரப்பு மக்களையும் சந்திக்க முடியும். நாம் காணும் பிரச்சினைகளை அரசாங்கத்திடம் நேரடியாகவும் வெளிப்படையாகவும் பிரஸ்தாபிக்க முடியும் எனவும் கூறியுள்ளார்.
அடையாள அட்டை விண்ணப்பம்-
இந்த வருடத்திற்காக கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சையில் தோற்றும் மாணவர்களின் அடையாள அட்டைகள் இதுவரை கிடைக்காத பட்சத்தில் அது அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன் ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு தமது விண்ணப்பங்களை முன்வைக்குமாறு பரீட்சார்த்திகளிடம் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் ஆர்.எம்.சரத்குமார வேண்டுகோள் விடுத்துள்ளார். பெயர், விலாசம், தொலைத்தொடர்பு இலக்கம் மற்றும் விண்ணப்ப இலக்கங்களுடன் துரிதமாக 0112593634 என்ற இலக்கத்திற்கு தொலைநகல் மூலம் அனுப்பிவைக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவர் சி.ஆர்.டி சில்வா காலமானார்-
இலங்கையின் முன்னாள் சட்ட மா அதிபர் மற்றும் சிரேஸ்ட சட்டத்தரணி சி.ஆர்.டி சில்வா இன்றுகாலை காலமானார். சுகயீனமுற்ற நிலையில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்றுவந்த அவர் இன்று காலமானார். இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராயவென ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவராக சி.ஆர்.டி சில்வா செயற்பட்டவர்.
வாக்காளர் பெயர்ப்பட்டியல்; மேன்முறையீடு பரிசீலிப்பு–
2013ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப்பட்டியல் தொடர்பில் கிடைத்துள்ள மேன்முறையீடுகளை பரிசீலனை செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் மட்டத்தில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதன்போது, மேன்முறையீடுகள் தொயடர்பில் கிடைத்துள்ள ஆட்சேபனைகள் தொடர்பிலும் கவனத்திற் கொள்ளப்படவுள்ளது. இம்மாத இறுதிக்குள் அனைத்து மேன்முறையீடுகளையும் பரிசீலனை செய்யவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார். அதன்பின் 2013ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப்பட்டியலை வெளியிட முடியுமெனவும் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.