Posted by plotenewseditor on 8 November 2013
Posted in செய்திகள்
புதுக்குடியிருப்பில் ஆயுதங்கள் மீட்பு-
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச கிணறு ஒன்றிலிருந்து ஒரு தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. 70 அடி வரையிலான ஆழமுடைய இந்தக் கிணறை நேற்று முன்தினம் இறைக்கும்போது, பாவனைக்குட்படுத்தப்படாத ரி-56 ரக துப்பாக்கி ரவைகள் அடங்கிய பெட்டி ஒன்றும், 50மில்லிமீற்றர் ரக துப்பாக்கி ரவைகளும் பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டன. பின்னர் குறித்த கிணற்றில் மேலும் ஆயுதங்கள் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பெயரில், இராணுவத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது. இதன்படி நேற்றுமாலை அங்கு சென்ற இராணுவத்தினர் உரப்பை ஒன்றினுள் துருப்பிடிக்காதவாறு கிறீஸ் பூசப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்த ரி56 ரக துப்பாக்கி ரவைகளை மீட்டுள்ளனர்.
கல்முனை மேயர் சிராஸ் இராஜினாமா-
கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் மேயர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கான தனது இராஜினாமா கடிதத்தினை சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் கையளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர் ஹக்கீமின் வீட்டில் வைத்தே தனது இராஜினாமா கடிதத்தினை அவர் கையளித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது. நவம்பர் முதலாம் திகதியிலிருந்து கல்முனை மேயராக அவர் செயற்பட முடியாது எனவும் மேயர் பதவியை இராஜினாமா செய்யுமாறும் கட்சியின் தலைவர் மேயர் சிராஸ் மீராசாஹிப்க்கு அறிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
தேசிய அடையாள அட்டைபெற கால அவகாசம்–
இம்முறை க.பொ.த சாஃத பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்கள் தேசிய அடையாள அட்டைப் பெற்றுக்கொள்ள இரண்டுவாரம் விசேட காலஅவகாசம் வழங்குவதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 11ம் திகதி தொடக்கம் இரண்டு வாரத்திற்கு இந்த கால அவகாசம் வழங்கப்படும் என ஆட்பதிவு ஆணையாளர் ஆர்.எம்.எஸ்.சரத்குமார தெரிவித்துள்ளார். அநேகமான மாணவர்களுக்கு தற்போது தேசிய அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பனங்கட்டிகொட்டு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்–
வெளி மாகாண மீனவர்களின் வருகையினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து மன்னார் பனங்கட்டிகொட்டு மீனவர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். பனங்கட்டிகொட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தினால் இன்றுமுற்பகல் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான வெளி மாகாண மீனவர்கள் அங்கு வருகை தந்து வாடிகளை அனுமதியின்றி அமைத்து இரவுநேர மீன்பிடியில் ஈடுபடுவதுடன், வேறு தொழில்களில் ஈடுபடுகின்றமையால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக இந்த மீனவர்கள் குற்றஞ்சுமத்துகின்றனர். சுமார் 500 மீனவர்கள் இன்றைய தொழில் நடவடிக்கைகளை முற்றாக நிறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். வெளி மீனவர்கள் தமது வாடிகளை அகற்றி, அமைதியான முறையில் தமது வாழ்வாதார தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான சூழலை அதிகாரிகள் ஏற்படுத்தித் தரவேண்டும் என பனங்கட்டிகொட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் ஜஸ்டின் சொய்ஸா தெரிவித்துள்ளார். மீனவர்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் உரிய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.
மாநாட்டை புறக்கணிக்கும் முடிவு சரியானதே-டேஸ்மன்ட டுட்டு-
இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்பு தொடர்பாக உலக நாடுகள் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு நெருக்கடிகளைத் தந்து அந்த நாட்டை சரியான பாதைக்குத் திரும்பச் செய்ய வேண்டும். இலங்கை தீவிரமாக செயற்பட அதற்கு அழுத்தம் கொடுக்க உதவும் என்றால் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை புறக்கணிப்பு செய்யும் முடிவும் சரியானதுதான் என நோபல் பரிசு வென்ற தென் ஆபிரிக்க தலைவர் டேஸ்மன்ட் டுட்டு தெரிவித்துள்ளார். புதுடில்லி சென்றுள்ள டுட்டு, அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தபோது பொதுநலவாய மாநாட்டை இந்தியா புறக்கணிப்பது குறித்த விவாதம் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அக்கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், இலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க நல்ல களமாக பொதுநலவாய மாநாடு அமையும் என்பதில் சந்தேகமில்லை. நிச்சயம் தமிழ் சமுதாயத்தினரின் உரிமைகள் குறித்தும் அவர்களது மறுவாழ்வு குறித்தும் மறுசீரமைப்பு தொடர்பிலும் இங்கு விவாதிக்க முடியும் தீர்மானங்கள் போட முடியும். Read more