அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து பிரதிநிதிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு-
அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்துப் பிரதிநிதிகளுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றுமாலை யாழ். ரில்கோ விடுதியில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் நியூசிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் ஜேன் லொஜ்ஜி மற்றும் அவுஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் செனற்றர் லீ ரிகியோனன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வட மாகாண சபை அமைச்சர் ஜங்கரநேசன், வட மாகாணசபை உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சர்வேஸ்வரன், வலி வடக்கு பிரதேசசபை தலைவர் சுகிர்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் வட மாகாண நிலைமைகள் மற்றும் வட மாகாணசபையின் செயற்பாடுகள் சம்பந்தமாகவும், வட மாகாணத்தில் மக்கள் அன்றாடம் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் விளக்கிக் கூறினார்கள். சுமார் ஒன்றரை மணிநேரம் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது பாராளுமன்ற உறுப்பினர் ஜேன் லொஜ்ஜி மற்றும் செனற்றர் லீ ரிகியோனன் ஆகியோர் தாங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பல்வேறு விடயங்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்கள்.