கூட்டமைப்பு பிரமுகர் தம்பிராசாவின் உண்ணாவிரதம் நிறைவுக்கு வந்தது-

யாழ். வலி. வடக்கு மக்களின் வீடுகள் படையினரால் இடித்தழிக்கப்படுவதை கண்டித்தும் மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தியும் நேற்றுக் காலைமுதல் யாழ். கோட்டைப் பகுதியில் அமைந்துள்ள முனியப்பர் ஆலயம் முன்பாக இரண்டு நாட்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரமுகர் முத்தையாப்பிள்ளை தம்பிராசா இன்றுமாலை 4மணியுடன் தனது போராட்டத்தினை நிறைவுசெய்து கொண்டுள்ளார். வலிகாமம் வடக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் யாழ். மாவட்ட அரச அதிபர் ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நடைபெற்று முடிந்த வடமாகாண சபை தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளராக முத்தையாப்பிள்ளை தம்பிராசா களமிறங்கியிருந்தார்.