Header image alt text

பருத்தித்துறைப் பகுதியில் வீடுகள், காணிகள் கையளிப்பு-

யாழ். பருத்தித்துறை பகுதியில் 521 படைத்தலைமையகத்தின் கட்டுப்பாட்டிலிருந்த 50வீடுகள் மற்றும் 22காணிகள் இன்று பொதுமக்களின் கையளிக்கப்பட்டுள்ளன. 521ஆவது படைத்தலைமையகத்தின் ஏற்பாட்டில் பருத்தித்துறை பாதுகாப்பு படைப்பிரிவின் 7ஆவது படைப்பிரிவினால் இன்றுகாலை இந்த கையளிப்பு இடம்பெற்றுள்ளது. 521ஆவது படைப்பிரிவின் கேணல் டி.எம்.ரி.பி டிசாநாயக்க வீடுகள் மற்றும் காணிகள் கையளிப்பதற்கான அத்தாட்சி ஆவணத்தினை பருத்தித்துறை பிரதேச செயலர் ஆர்.ரி.ஜெயசீலனிடம் கையளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இராணுவ கட்டுப்பாட்டிற்குள் இருந்த வீதியும் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. மேற்படி கையளிக்கப்பட்ட வீடுகளை மக்கள் சென்று பார்வையிட்டுள்ளனர். இந்நிகழ்வில், பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, சக்கோட்டை பகுதி கிராம அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.

பொதுநலவாய மாநாட்டிற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்-

பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கான நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பமாகின்றன. இதன்படி அரச தலைவர்களின் மாநாடு எதிர்வரும் 15ம் திகதி நடைபெறவுள்ளது. அத்துடன் பொதுநலவாய நாடுகளின் இளைஞர் மாநாடு மற்றும் பொது மாநாடு என்பன நாளைய தினம் ஆரம்பமாகவுள்ளன. இந்த முறை பொதுநலவாய நாடுகளின் இளைஞர் மாநாடு ஹம்பாந்தொட்டையில் நடைபெறவுள்ளது. பொதுமாநாடு ஹிக்கடுவையில் நடைபெறவுள்ளது. இதற்கிடையில் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் மற்றும் அரச தலைவர்கள் இன்றுமுதல் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

மாவிலாற்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு-

மாவிலாறு பிரதேச காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு தொகுதி ஆயுதப்பொருட்கள் இன்று மீட்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்துள்ளனர். ரி.56 ரக துப்பாக்கி 01, எம்.ரி.எம்.ஜி. ரக துப்பாக்கி-01, எல்.எம்.ஜி. ரவைகள் 400. ர்p.56 ரக துப்பாக்கி ரவைகள். 2000. சீ4 வெடிமருந்து 15 கிலோ. ர்p.என்.ரி.வெடிமருந்து 20கிலோ மற்றும் வயர் உள்ளிட்டவையே மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். வாகரை படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து வாகரை 233ஆவது படைப்பிரிவு படையினரும், புலனாய்வினரும் இணைந்து இவற்றை மீட்டதாக வாகரை பொலிசார் கூறியுள்ளனர்.

மன்னர் காசியப்பரின் மண்பானை-

மாத்தளை மாவட்டம் தம்புள்ளை, சீகிரியா நுழைவாயிலின் வடபகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது, மன்னர் காசிப்பர் காலத்துக்கு உரியது என நம்பப்படும் மண் பானை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கடந்த தினங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்சியின் போது இது மீட்கப்பட்டுள்ளது. இந்த பானை மண்ணால் நிரப்பப்பட்டுள்ளது. இதன் நிறை 20 கிலோ என்று தெரிவிக்கப்படுகிறது. இதனை மேலதிக ஆய்வு உட்படுத்தவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

வழக்கம்பறையில் மௌனப் பிரார்த்தனை-

யாழ். வலி. மேற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் வலக்கம்பறை அம்மன் ஆலயத்தில் மௌனப் பிரார்த்தனை ஒன்று நேற்றுபகல் 1.00 மணிமுதல் 3.00 மணிவரை நடைபெற்றது. வலி. மேற்கு பிரதேச சபைத் தலைவர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரனின் தலைமையில் ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இந்த மௌனப் பிரார்த்தனை இடம்பெற்றது. இதன்போது மீளக் குடியமர்ந்தவர்களை மீண்டும் அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்றுதல், எமது பண்பாட்டு அம்சமான ஆலயங்களை அழிப்பதை நிறுத்துதல், பரவலாக இடம்பெற்றுவரும் பெண்கள், சிறுவர்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல், காணாமல் போனோர் தொடர்பில் விரைவாக திருப்தி அளிக்கக்கூடிய தீர்வை அளித்தல், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாது கைது செய்யப்பட்டுள்ள இளைஞர் யுவதிகளை விடுவிக்க விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிற 6 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை ஜனாதிபதியிடம் கையளிப்பதற்காக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனிடம் வலி.மேற்கு பிரதேசசபை தவிசாளரினால் கையளிக்கப்பட்டது.. இதன்போது குருமார்கள், வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், வட மாகாணசபை உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், பா.கஜதீபன், பிரதேசசபை உறுப்பினர்கள், தவிசாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருமளவிலானோர் பங்கேற்றிருந்தனர்.

கோப்பாய் சரவணபவானந்த வித்தியாலயத்திற்கு மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் விஜயம்-

யாழ். கோப்பாயில் அமைந்துள்ள கோப்பாய் சரவணபவானந்த வித்தியாலயத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் நேற்றுமுற்பகல் விஜயம் செய்திருந்தார். அவர் தனது விஜயத்தின்போது சரவணபவானந்த வித்தியாலயத்தின் அதிபர் திரு. ஆனந்தராஜா அவர்களையும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களையும் சந்தித்து உரையாடினார். இதன்போது அங்குள்ள குறைநிறைகளையும், மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் தொடர்பிலும் மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் கேட்டறிந்து கொண்டார்.

கூட்டமைப்பு பிரமுகர் மு.தம்பிராசாவின் பாத யாத்திரை ஒத்திவைப்பு-

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரமுகர் முத்தையாப்பிள்ளை தம்பிராசா அவர்கள் இன்றுகாலை முதல் மேற்கொள்ளவிருந்த பாத யாத்திரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கவே இந்த பாத யாத்திரை பின்போடப்பட்டுள்ளதாக தம்பிராசா தெரிவித்துள்ளார். இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் அனைவரையும் பங்கேற்கச் செய்து அதைச் சிறப்பிக்க வேண்டுமென்று பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்கள் கூறியதன்படி இந்த எதிர்ப்பு நடவடிக்கைக்கு வலுச்சேர்க்கும் முகமாக மேற்படி பாத யாத்திரையை ஒத்திவைத்ததாகவும் தம்பிராஜா குறிப்பிட்டுள்ளார். Read more