கூட்டமைப்பு பிரமுகர் மு.தம்பிராசாவின் பாத யாத்திரை ஒத்திவைப்பு-

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரமுகர் முத்தையாப்பிள்ளை தம்பிராசா அவர்கள் இன்றுகாலை முதல் மேற்கொள்ளவிருந்த பாத யாத்திரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கவே இந்த பாத யாத்திரை பின்போடப்பட்டுள்ளதாக தம்பிராசா தெரிவித்துள்ளார். இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் அனைவரையும் பங்கேற்கச் செய்து அதைச் சிறப்பிக்க வேண்டுமென்று பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்கள் கூறியதன்படி இந்த எதிர்ப்பு நடவடிக்கைக்கு வலுச்சேர்க்கும் முகமாக மேற்படி பாத யாத்திரையை ஒத்திவைத்ததாகவும் தம்பிராஜா குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமல்லாது நேற்றையதினம் அரச அதிகாரிகள் முகாமிலிருந்த வலி வடக்கைச் சேர்ந்த 150 குடும்பங்களை அழைத்துச் சென்று பலாலி இராணுவ முகாமிற்கு கிழக்கே உள்ள கடலை அண்மித்த பகுதியினை மீள்குடியமர்விற்காக காண்பித்துள்ளனர். இரண்டு பரப்புக் காணியில் வீடும் கட்டித் தருவதாக அவர்கள் உறுதியளித்திருக்கின்றார்கள். அதில் முகாம்களைச் சேர்நத மக்களும் விருப்பம் கொண்டிருப்பதாகவும், ஒரு நல்ல ஒளிக்கீற்று தெரிவதால் அது சம்பந்தமாக தாம் பரிசீலித்திருப்பதாகவும் மேற்படி 19 முகாமிற்கும் பொறுப்பான தலைவர் அன்ரனி கூறியதன் பேரிலும், இந்த பாதயாத்திரையை நாங்கள் ஒத்திவைக்கின்றோம் என்றும் தம்பிரசா கூறியுள்ளார். வலி.வடக்கில் பொதுமக்களின் வீடுகள் படையினரால் இடித்தழிக்கப்படுவதைக் கண்டித்தும், அம்மக்களின் மீள்குடியமர்வை வலியுறுத்தியும் மேற்படி பாத யாத்திரையினை தம்பிராசா அவர்கள் மேற்கொள்ளவிருந்தார். இன்று அதிகாலை 6.15மணிக்கு நல்லூரிலிருந்து இந்த பாத யாத்திரையினைத் தொடங்கி வலி வடக்கின் எல்லைப்பிரதேசமான அச்சுவேலி வலாலைக் கிராமத்திற்கும், நாளை வலாலைக் கிராமத்திலிருந்து அடுத்த எல்லைக் கிராமமான சேந்தாங்குளத்திற்கும் அதன்பின்னர் திங்கட்கிழமை சேந்தான்குளத்திலிருந்து யாழ் நல்லூர் கோயிலை வந்தடைவதற்கும் கூட்.டமைப்பு பிரமுகர் முத்தையாப்பிள்ளi தம்பிராசா அவர்கள் திட்டமிடப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.