காணாமல் போனோர் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டியும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த வலியுறுத்தியும் வவுனியாவில் இம்மாதம் மாபெரும் தீப்பந்த ஊர்வலத்துக்கு ஏற்பாடு.

SAM_9835 SAM_9836காணாமல் போனோர் தொடர்பில் அரசை பொறுக்கூற வைப்பதற்கும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்துவதற்கும் ஜனநாயக ரீதியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தலைமை கட்டடத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் தேவராசா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கூட்டமைப்பின் சார்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம், மாகாணசபை உறுப்பினர்களான தியாகராசா, இந்திரகுலராசா, லிங்கநாதன் ஆகியோரும், வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தலைவர் சிவலிங்கமும், உறுப்பினர்களும், வவுனியா வடக்கு பிரதேசசபை தலைவர் பாலசுப்பிரமணியமும், உறுப்பினர்களும், பிரஜைகள் குழுவின் சார்பில் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் காப்பாளரும் மனித உரிமை ஆர்வலருமான சண் மாஸ்டர், பிரஜைகள் குழுவின் தலைமைக்குழு உறுப்பினர்களோடு, வவுனியா மாவட்ட காணாமல் போனோர் சங்கத்தலைவி இராஜேஸ்வரி, மாவட்டத்தின் உள்ளூர் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
தமிழ் மக்கள் சமகாலத்தில் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளான திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புகள், இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் குடியேற்றங்கள், இயற்கை வளச்சுரண்டல்கள், சிவில் நிர்வாகத்தில் இராணுவ தலையீடுகள், தமிழர் பாரம்பரிய பண்பாட்டு நிலங்களில் பௌத்த விகாரைகளை நிறுவுதல், காணாமல் போனோர் தொடர்பில் பொறுப்புக்கூறாமை, தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாமை எனப்பல்வேறு பிரச்சினைகள் பற்றியும், அவற்றுக்கான மாற்று நடவடிக்கைகள் பற்றியும், கலந்துரையாடப்பட்டது.
விசேடமாக காணாமல் போனோர் தொடர்பில் அரசை பொறுப்புக்கூற வலியுறுத்தியும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த கோரியும் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினது தலைமையில் மாபெரும் தீப்பந்த ஊர்வலத்தை இம்மாதம் 15.11.2013 அன்று வவுனியா கந்தசுவாமி கோவில் முன்பாக நடத்துவதெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போராட்டத்துக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு தனது முழு ஆதரவையும், மக்கள் ஒழுங்கமைப்புக்கான ஒத்துழைப்பினையும் வழங்குமென கூட்டத்தில் கலந்து கொண்ட வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும், மாகாணசபை அமைச்சர் சத்தியலிங்கமும், ஏனைய மாகாணசபை உறுப்பினர்களும், பிரதேசசபை தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களும் கூட்டாக தெரிவித்தனர்.