குடாநாட்டில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்திற்கு தூபமிடப்படுகிறது-தர்மலிங்கம் சித்தார்த்தன்-
உயர் பாதுகாப்பு வலயங்களாகக் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை குடாநாட்டின் இன விகிதாசாரத்தினை மாற்றியமைக்கும் வகையில் திட்டமிட்ட செயற்பாடுகளுக்கு பயன்படுத்த தூபமிடப்படுகின்றது.
இதனை அரசாங்கம் உடனடியாக நிறுத்தவேண்டும் என புளொட் அமைப்பின் தலைவரும் வட மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் வலி வடக்கில் காங்கேசன்துறை தொகுதி முழுவதும் உள்ளடங்கலாக இளவாலை வரையில், சுற்றியுள்ள நிலப்பரப்பினை இராணுவம் தமக்குள் வைத்துள்ளது,
அரசாங்கம் இன்றைய நிலையில் யுத்தம் முடிவடைந்து விட்டது என திரும்பத் திரும்ப கூறிவருகின்றது. இவ்வாறானதோர் சூழ்நிலையில் பாதுகாப்பு வலயங்களுக்கு என ஏன் இவ்வளவு பெருவாரியான காணிகளை அரசாங்கம் கையகப்படுத்தியுள்ளது என்ற கேள்வியுள்ளது? இதற்குப்பின்னால் வேறு நோக்கங்களே இருப்பதாக நாம் பார்க்கின்றோம்.
நாம், மக்களின் வீடுகள் இடித்தழிக்கப்படுகின்றன என்றவுடன் குறித்த பகுதிகளுக்கு நேரில் சென்று எதற்காக வீடுகளை இடித்தழிக்கின்றீர்கள் என இராணுவத்தினரிடம் கேட்டோம். அதற்கு அங்கிருந்த படை அதிகாரி, தாம் வேறு கட்டிடங்களை அமைத்து இராணுவத்தினரையும், அவர்களது குடும்பங்களையும் குடியமர்த்தப் போவதாக வெளிப்படையாகவே கூறினார்.
அத்துடன் அந்த அதிகாரி, யாழ்பாணத்திற்கு வெளியில் உள்ள இராணுவத்தினரை மீளப்பெறவுள்ளதனால் தமக்கு இடவசதிகள் தேவையாக உள்ளதாகவும் அதற்காக இக் காணிகளில் கட்டிடம் அமைத்து உபயோகப்படுத்தப் போவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
கொழும்பில் இருப்பவர்கள் வேறு கருத்துக்களைக் கூறினாலும் இவ் அதிகாரியின் கருத்துக்களை நாம் நிராகரித்துவிட்டுப் பார்க்க முடியாது. இவ்விடயம் தொடர்பில் வழக்குகள் கூடத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படும் இந் நடவடிக்கையினை நாம் குடாநாட்டின் குடிப்பரம்பலை மாற்றுவதற்கான ஓர் முயற்சியாகவே பார்க்கின்றோம்.
வன்னியில் அரச காணிகளை பெருவாரியாக எடுக்கின்றனர். யாழில் அதற்கான சூழ்நிலை காணப்படாத நிலையில் உயர் பாதுகாப்பு வலயங்களாக மக்களின் காணிகளைக் கையகப்படுத்தி அதனுள்ளாக திட்டமிட்ட வகையில் சிங்களக் குடிப்பரம்பலை ஏற்படுத்த அரசாங்கமும் படைத்தரப்பும் முயற்சிக்கின்றன என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.