நியூசிலாந்து, அவுஸ்திரேலிய எம்.பிக்கள் விடுதலை-

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவுஸ்திரேலிய மற்றும் நியூஸிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும், விசா சட்டத்தை மீறி கொழும்பில் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்த முயன்றனர் என்ற குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். நியூசிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் ஜேன் லொஜ்ஜி மற்றும் அவுஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் செனற்றர் லீ ரிகியோனன் ஆகிய இருவருமே தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் நாட்டைவிட்டு வெளியேற இணங்கியமையை அடுத்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக குடியகல்வு, குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்கள் இருவரும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளைச் சந்தித்து நிலைமைகளை கேட்டறிந்திருந்தனர். 

பொதுநலவாய இளைஞர் மாநாடு ஆரம்பம்-

பொதுநலவாய இளைஞர் மாநாடு இன்று முற்பகல் அம்பாந்தோட்டை, மாகம் ரு{ஹணுபுர சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா ஆகியோரின் தலைமையில் இந்த மாநாடு நடைபெறுகின்றது. ஒன்பதாவது தடவையாக நடைபெறவுள்ள பொதுநலவாய இளைஞர் மாநாட்டில் 44 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 200 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர். அபிவிருத்திக்காக ஒன்றிணைவோம் என்ற தொனிப்பொருளில் இளைஞர் மாநாடு நடைபெறுகின்றது.

யுனெஸ்கோ உப தலைவராக கருணாரத்ன தெரிவு-

யுனெஸ்கோ எனப்படும் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பின் உப தலைவராக இலங்கை பிரதிநிதி பேராசிரியர் கருணாரத்ன ஹங்கவத்த ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் பிரான்ஸில் நடைபெற்ற யுனெஸ்கோவின் 37ஆவது பொதுச்சபைக் கூட்டத் தொடரின்போது அவர் உப தலைவர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை பல்வேறு துறைகளில் அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பில் இக்கூட்டத் தொடரின்போது பேராசிரியர் கருணாரத்ன ஹங்கவத்த உரையாற்றியுள்ளார்.