வடக்கு ஆளுநரின் உரையை எதிர்த்து அமர்வில் இருந்து மூவர் வெளிநடப்பு

வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறியின் உரைக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூன்று மாகாண சபை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். மாகாண சபை இரண்டாவது அமர்வின்போது, கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், எம்.கே சிவாஜிலிங்கம், சுகிர்தன் ஆகியோர் வெளிநடப்பு செய்துள்ளனர். இதேவேளை, வட மாகாண சபையை ஆரம்பித்து வைக்கும் முகமாக ஆளுநர் ஜீ ஏ சந்திரசிறி உரையாற்றியுள்ளார்.

மன்மோகன் சிங்கின் தீர்மானம் தவறானது- ஜோன் கீன்-

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளாமை தவறான தீர்மானம் என நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளார். டெக்கன் கொனிக்கல் என்ற ஊடகத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அந்த நாட்டின் அரசியல் கட்சிகளின் அழுத்தங்கள் காரணமாகவே மன்மோகன் சிங் இத்தீர்மானத்தை மேற்கொண்டதாகவும், இதுதவிர, கனேடிய பிரதமர் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளாமை தவறானது எனவும் ஜோன் கீன் தெரிவித்துள்ளார். இதனிடையே, தாமும் வெளிவிவகார அமைச்சர் மரே மெக்கலியும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதாக நியூசிலாந்து பிரதமர் கூறியுள்ளார்.

டேவிட் கெமரூன் வடக்கிற்கு விஜயம்-

பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் உள்ளிட்ட குழுவினர் எதிர்வரும் 15ஆம் திகதி வட மாகாணத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். இதன்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகளை அவர்கள் சந்தித்துப் பேசவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கின் தற்போதைய நிலவரம், மக்கள் வாழ்வாதார பிரச்சினை, வலி வடக்கு மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல்வேறுப்பட்ட விடயங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.. இதேவேளை, யாழ் பொதுநூலகத்தில் இடம்பெறவுள்ள நிகழ்வொன்றிலும் பிரித்தானிய பிரதமர் கலந்து கொள்ளவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

தொண்டராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்-

யாழ் மாவட்ட 231 தொண்டராசியர்கள் இன்று வட மாகாண சபைக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். தங்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன் எடுக்கப்பட்டதாக தொண்டராசிரியர் சங்க செயலாளர் வீ சுபதீஸ் தெரிவித்துள்ளார்;. எட்டு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் இதுவரை தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மாநாட்டை பகிஷ்கரிப்பது மனித உரிமை மீறல்களுக்கு எதிரான நடவடிக்கையல்ல – ஜோன் கீ-

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை பகிஷ்கரிப்பது, இலங்கையில் இடம்பெற்றதாகக கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு ஏற்ற நடவடிக்கை அல்லவென என நியூசிலாந்து தெரிவித்துள்ளது. பொதுநலவாய மாநாட்டின் உறுப்பு நாடு என்ற வகையில் மாநாட்டில் பங்குபற்றுவது மிகவும் அவசியம் என நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளார். இந்த மாநாடு இலங்கையுடனான இருதரப்பு கலந்துரையாடல் அல்லவெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கமைய தாமும் வெளிவிவகார அமைச்சர் மரீ மெக்கலீயும் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கைக்கு வருகை தரவுள்ளதாகவும்,  இதன்போது, வடக்கு மாகாண சபை, மக்கள் வழங்கிய ஆணையை அரசியலமைப்புக்கு உட்பட்ட வகையில் மேற்கொள்ளும் என நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.