மாநாடு குறித்த தகவல்களை பதிவுசெய்யவே வந்துள்ளேன்-கெலம் மக்றே-

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு தொடர்பான தகவல்களை பதிவுசெய்வதற்காகவே இலங்கை வந்துள்ளதாக செனல் 4 ஊடகவியலாளர் கெலம் மக்றே தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பில் பிரித்தானியாவின் செனல் 04 தொலைக்காட்சியில் கானொளிகளை வெளியிட்ட ஊடகவியலாளர் கெலம் மக்றேயின், இலங்கை வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று விமான நிலைய வளாகத்தில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர், கெலம் மக்றே இலங்கை வருவதற்கு வீசா வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக, கெலம் மக்றேயுடன் வருகைதந்த குழுவினர் சுமார் 30 நிமிடங்கள் விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தனர். இங்கு ஊடகத்தினரிடம் கருத்து தெரிவித்த கெலம் மக்றே, பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு தொடர்பான தகவல்களை பதிவுசெய்வதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன். இங்கு என்ன நடக்கின்றது என்பதை ஆராய்ந்து, அது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளேன். அத்துடன் இங்கு என்ன நடக்கின்றது என்பது தொடர்பிலும் எழுதவுள்ளேன் என்று கூறியுள்ளார்.

பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகள் ஊவாவிற்கு விஜயம்-

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிற்காக இலங்கை வரவுள்ள 14 நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் ஊவா மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளனர். இவர்கள் நாளை மறுதினம் ஊவா செல்லவுள்ளதாக மாகாண பிரதான செயலாளர் பி.பீ அமரசேகர தெரிவித்துள்ளார். மாகாணத்தின் இனங்களுக்கிடையேயான ஒற்றுமை, சகவாழ்வு, சுற்றுலா சிறப்பிடங்கள், கல்வி, தொழில்துறை, கலாசாரம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகள் தொடர்பான தெளிவுகளை பெற்றுக்கொள்வதே இந்த விஜயத்தின் நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதுதவிர, பசறை, பெல்கஹதென்ன பயிற்சி நிலையம், பசரறை தமிழ் வித்தியாலயம், பண்டாரவளை மாநகர சபை, பண்டாரவளை கிரேக் பாடசாலை, ஹப்புத்தளை எடிசன் தங்கு இல்லம், வெல்லவாய ஹந்தபானகல வாவி, மாலிகாவில உள்ளிட்ட பல இடங்களை குறித்த குழு பார்வையிடவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

யாழ் – கொழும்பு விமான சேவை நிறுத்தம்-

யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்கும் இடையிலான விமானசேவை நேற்றுமுதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. விமானசேவை நிறுத்தப்பட்டதிற்கான காரணம் எங்களுக்கு தெரியாது, உள்நாட்டு விமானப் போக்குவரத்து சபையினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று மேற்படி விமான சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனம் தெரிவித்துள்ளது, அத்துடன் விமான சேவைகள் எதிர்வரும் 18ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் எனவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், யாழ்ப்பாணத்திற்கு  இன்று விஜயம் மேற்கொண்டிருந்த கனேடியப் பிரதிநிதிகள் ஏ9 வீதியின் வழியாகவே சென்றிருந்தமை இங்கு  குறிப்பிடத்தக்கது.

ஏறாவூர் பகுதியில் கைக்குண்டு மீட்பு-

மட்டக்களப்பு, ஏறாவூர், மதுரன்காடு பிரதேசத்திலிருந்து கைக்குண்டு ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. ஏறாவூர் பொலிஸாருக்கு நேற்று கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து இந்த கைக்குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. கல்லடி இராணுவ முகாமைச் சேர்ந்த அதிகாரிகளினால் இந்த கைக்குண்டு செயலிழக்கப்பட்டுள்ளது. கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளில் ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகுpன்றனர்.

பொதுநலவாய மாநாட்டின்போது 150 தீயணைப்பு வீரர்கள்-

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் தமது செயற்பாடுகளை விஸ்தரிப்பதற்கு கொழும்பு, தீயணைப்பு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கென, 150 தீயணைப்பு வீரர்கள் 08 இடங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக திணைக்கள அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இதற்கமைய, எதிர்வரும் 20ஆம் திகதிவரை பேலியகொடை, தெமட்டகொடை, தும்முல்ல ஆகிய பகுதியில் இந்தக் குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், ஏனைய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.