மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி சம்பூரில் போராட்டம்-

திருகோணமலை சம்பூர் பாதுகாப்பு வலயத்தில் பொதுமக்களது காணிகளை படையினர் ஆக்கிரமித்திருப்பதைக் கண்டித்தும், அந்த மக்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தியும் இன்றையதினம் முற்பகல் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது. கிளிவெட்டி நலன்புரி நிலையத்திற்கு முன்பாக முற்பகல் 9 மணிக்கு இந்த போராட்டம் ஆரம்பமாகி நடைபெற்றுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக்குழு தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள், உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் என பெருமளவிலானோர் பங்கேற்றிருந்தனர்.

வவுனியா-கொழும்பு பஸ்கள் மீது இன்றும் கல்வீச்சு-

வவுனியாவிலிருந்து கொழும்பு பயணிக்கும் தனியார் பஸ்கள் மூன்றாவது நாளாகவும் இன்று அதிகாலை கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. அதிகாலை 5.15 மணியளவில் வவுனியாவிலிருந்து கொழும்பு சென்ற பஸ்கள்மீது ஆராச்சிகட்டுவ பகுதியில் வைத்து கற்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்றவர்களே ஆராச்சிகட்டுவ பகுதியில் வைத்து இவ்வாறு தாக்குதல் நடாத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிசார் தெரிவித்துள்ளனர். இத் தாக்குதலில் பயணிகளுக்கோ, சாரதி மற்றும் நடத்துனருக்கோ எவ்விதமான எவருக்கும் காயங்களும் ஏற்படவில்லை என்று தெரிவித்த பொலிசார் பஸ்களுக்கு சேதம் எற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

வட மாகாணம் தொடர்பில் இலங்கை ஆஸி இணக்கப்பாடு-

வடமாகாணம் தொடர்பில் இலங்கையுடன் மேலும் ஒரு இணக்;கப்பாட்டினை ஏற்படுத்திக் கொள்ளவிருப்பதாக அவுஸ்திரேலியாவின் பிரதமர் டோனி எபட் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக தாம் இலங்கையில் இருக்கும் காலப்பகுதியில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஏ.எப்.பி. இணையத்தளம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதற்கிடையில் இது சம்பந்தமாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜுலியா பிசப் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இலங்கையில் இருந்து புறப்படும் அகதி படகுகளை, மீண்டும் திருப்பி அனுப்புவது தொடர்பான பாதுகாப்பு பரிமாற்ற நடவடிக்கையை மேலும் வலுவூட்டும் வகையில் இந்த பேச்சுவார்த்தைகள் அமையும் என்றும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டு விசாரணை மேற்கொள்ளப்படும்-அமைச்சர் ரம்புக்வெல்ல-

இலங்கை மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரசாங்கம் உரிய உள்நாட்டு விசாரணையை மேற்கொள்ளும் என்று, அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இதனைத் தெரிவித்துள்ளார். செனல் 4 ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை உள்நாட்டு வரைமுறைகளுக்கு அமைய விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது. இது எந்த அழுத்தங்களின் அடிப்படையிலும் இடம்பெறவில்லை. அதேநேரம் இந்த விசாரணைகள் எந்த வகையில் மேற்கொள்ளப்படும் என்பதை அரசாங்கமே தீர்மானிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மொரிஷியலில் அரச தலைவர்கள் மாநாடு இடம்பெறாது-நவீன் சந்திர-

பொதுநலவாய அரச தலைவர்களது 2015ஆம் ஆண்டு மாநாடு மொரிஷியஸில் இடம்பெற மாட்டாது என மொரிஷியஸ் பிரதமர் நவீன் சந்திர ராம்கூலம் அறிவித்துள்ளார். இலங்கையில் இம்முறை ஆரம்பமாகியுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் மொரிஷியஸ் பிரதமர் நவீன் சந்திர ராம்கூலம் கலந்து கொள்ளவில்லை. இலங்கையில் மனித உரிமைகளை மதிக்கும் விஷயத்தில் பெரிய முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை என்று கூறி மொரிஷியஸ் பிரதமர் மாநாட்டை புறக்கணித்தார். இலங்கையில் இறுதிக்கட்ட போரின்போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார். இதனால் 2015ஆம் ஆண்டு பொதுநலவாய அரச தலைவர்களது மாநாட்டை நடத்துவதற்கான வாய்ப்பை மொரிஷியஸ் இழந்துள்ளது. பொதுநலவாய அரச தலைவர்களது மாநாட்டை அடுத்தமுறை நடத்தவுள்ள நாடு அதற்கு முன்னதாக நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ளவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

4ஆயிரம் கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை-

நான்காயிரம் கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்பொருட்டு நேர்முகப் பரீட்சைகள் தற்போது நடத்தப்பட்டு வருவதாக விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன தெரிவித்துள்ளார். நேர்முகப் பரீட்சையின் மூலம் இணைத்துக் கொள்ளப்படும் கிராம உத்தியோகத்தர்களை, வெற்றிடங்கள் நிலவும் பகுதிகளில் சேவைக்கு அமர்த்தவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கல்விப் பொதுத் தாரதர உயர்தர பரீட்சையின் மூன்று பாடங்களில் சித்தியடைந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்ததாக அமைச்சர் டபிள்யூ டி.ஜே. செனவிரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.