சுழிபுரம் பாரதி முன்னிலைப்பள்ளி கட்டிடத் திறப்புவிழா-

unnamedயாழ். சுழிபுரம் பாரதி முன்னிலைப் பள்ளியின் கட்டிடத் திறப்புவிழா நேற்றுமாலை இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வட மாகாண கல்வியமைச்சர் குருகுலராஜா அவர்கள் கலந்து கொண்டதுடன், சிறப்பு விருந்தினராக பிரதேசசபைத் தலைவர் நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் பங்கேற்றிருந்தார்.

இதன்போது பாரதி முன்னிலைப் பள்ளியின் பழைய மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

இங்கு விசேட அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், தற்போது லண்டனில் வசிக்கும் இதே ஊரைச் சேர்ந்த ரவிசங்கர் அவர்கள் அங்கிருந்து இங்கு வந்தபோது இந்த பாரதி முன்னிலைப்பள்ளி கட்டிடத்திற்கென பெருந்தொகைப் பணத்தைக் கொடுத்து இக் கட்டிடத்தைக் கட்டிக் கொடுத்துள்ளார். தனது தந்தை மற்றும் சகோதரரின் நினைவாக அதனை அவர் செய்துள்ளார். 27லட்சம் ரூபாவுக்கும் மேலாக அவர் இதற்கு செலவு செய்துள்ளார். இது மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும். வெளிநாடுகளில் இவ்வாறான பலர் இருக்கின்றபோதிலும், ஒரு சிலரே இவ்வாறாக பெரியளவிலான உதவிகளை செய்கின்றனர். எனவே இந்த உதவியைச் செய்துகொடுத்த ரவிசங்கர் அவர்களுக்கு இக்கிராம மக்கள் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்.

தற்போது வடக்கு கிழக்கு பகுதிகளின் கல்வி நிலைமை மிகவும் பின்னடைவில் உள்ளது. எனவே இவ்வாறானவர்கள் கல்விக்கு ஊக்கம் தந்து வடக்கு கிழக்கு பகுதிகளை கல்வியில் தலைநிமிரச் செய்ய உதவியாகவும், உறுதுணையாகவும் நிற்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.