வவுனியாவில் தீப்பந்த போராட்டம்-

staged-a-candle-vigilகாணாமல் போனவர்களை கண்டுபிடித்து தருமாறு கோரி வவுனியாவில் இன்று தீப்பந்த போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட காணாமல் போனவர்களை தேடும் உறவுகள் சங்கமும், பிரஜைகள் குழுவுமே இணைந்து இந்த போராட்டத்தை நடத்தியுள்ளது. வவுனியா கந்தசுவாமி கோவில் வீதியிலேயே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த பலரும் பங்கேற்றிருந்தனர்.

சவேந்திர சில்வாவுடன் விவாதிக்க தயார்; கெலும் மக்ரே-

ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப்பிரதிநிதி சவேந்திர சில்வாவுடன் எந்த நேரத்திலும் விவாதம் நடத்த தான் தயாராக உள்ளதாக சனல் 4 ஊடகவியலாளர் கெலும் மக்ரே அறிவித்துள்ளார். அதன்படி சனல்4 ஆவணப்பட தயாரிப்பாளர் கெலும் மெக்ரேயுடன் விவாதத்துக்கு தாம் தயார் என்று ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப்பிரதிநிதி சவேந்திர சில்வா ஏற்கனவே தெரிவித்திருந்தார். இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் கெலும் மெக்ரே தயாரித்துள்ள ஆவணப்படங்கள் தொடர்பிலேயே சவேந்திர சில்வா இந்த அழைப்பை விடுத்துள்ளார். ஏற்கனவே சனல்4 ஆவணப்படம் ஒன்று நியூயோக்கில் வெளியிடப்பட்ட போது, அதில் 7 நிமிடங்கள் உரையாற்றுமாறு ஐ.நாவிற்கான இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி பாலித கோஹனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் அதனை அவர் ஏற்றுக்கொள்ளாது இந்நிகழ்வுக்கு சவேந்திர சில்வாவே பொருத்தமானவர் என கோஹன குறிப்பிட்டிருந்தார்.

24ஆவது பொதுநலவாய மாநாட்டை மால்டாவில் நடத்த தீர்மானம்-

2015ஆம் ஆண்டு நடைபெறவிருக்கின்ற 24 ஆவது பொதுநலவாய மாநாட்டை தென் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மால்டாவில் நடத்துவதற்கு பொதுநலவாய தலைமை இன்று முடிவு செய்துள்ளது. அடுத்த மாநாடு மொரீசியஸில் நடத்துவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் மொரீசியஸ் பிரதமர் இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டை புறக்கணித்ததுடன் அடுத்த மாநாட்டை தனது நாட்டில் நடத்தமாட்டேன் என்று அறிவித்திருந்தார். இதனையடுத்தே அடுத்த  மாநாட்டை மால்டாவில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்துக்கு இலங்கை யானை பரிசளிப்பு-

இலங்கை மீதான சர்வதேச விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை அரசாங்கத்துக்கு துணையாக செயற்படும் நியூசிலாந்துக்கு இலங்கை யானை ஒன்றை பரிசாக வழங்கவுள்ளது. கொழும்பில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய பொதுநலவாய நாடுகளின் மாநாடு தொடர்பான நியூசிலாந்தின் நிலைப்பாட்டை இலங்கை பாராட்டியுள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புச் சின்னமாக இலங்கை அரசு நியூசிலாந்துக்கு யானையை வழங்கியுள்ளது.

அரச தலைவர்களுக்கு இடையில் சந்திப்பு-

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு இன்றுடன் நிறைவுபெறுகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை தாமரை தடாகம் மஹிந்த ராஜபக்ஸ கலையரங்கில் இந்த மாநாடு ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து பொதுநலவாய அரச தலைவர்கள் பல்வேறு சந்தர்பங்களிலும் சந்தித்து கருத்துக்களை பறிமாறிக்கொண்டுள்ளனர். இதேவேளை, பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ள அரச தலைவர்களுக்கு இடையில் இன்று முற்பகல் சிநேகப்பூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

300 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்;-குடிவரவு குடியகல்வு திணைக்களம்-

கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டு 300 வெளிநாட்டுப் பிரஜைகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர் இந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் 300 வெளிநாட்டுப் பிரஜைகள் கறுப்புப் பட்டியலிடப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. சுற்றுலா வீசா மூலம் நாட்டுக்குள் பிரவேசித்தவர்களே நாடு கடத்தப்பட்டுள்ளதுடன் இவர்களில் இந்திய மற்றும் பாகிஸ்தானியர்களே நாடு கடத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் வீசா சட்டங்களை மீறி இலங்கையில் தொழில்களில் ஈடுபட்ட பலரும் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.