இனப்பிரச்சினைக்கு விரைவான தீர்வு தேவை-ஜூமா-

இலங்கையில் நீண்டகாலமாக இருந்துவரும் இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வு விரைவாக எட்டப்பட வேண்டும் என தென் ஆபிரிக்கா கோரியுள்ளது. போருக்கு பின்னரான காலத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தணிய வைக்கவும், பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் தமது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் தென் ஆபிரிக்கா தயாரகவுள்ளது என அதன் அதிபர் ஜேக்கப் ஜூமா தெரிவித்துள்ளார். தமது நாடு மிகவும் ஆழமான மற்றும் சிக்கலான மோதல்களை சந்தித்துள்ளது என்றும், பேச்சுவார்த்தைகள் மூலம் ஒரு வழிமுறையை கையாண்டு பிரச்சினைகளை தீர்த்துள்ளதாக இலங்கை ஜனாதிபதியுடன் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் ஜேக்கப் ஜூமா சுட்டிக்காட்டியுள்ளார். இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இருநாடுகளுக்கும் இடையே உயர் மட்டத்தில் பேச்சுகள் நடைபெற்று வருவதாகவும் ஜூமா கூறியுள்ளார்.

சர்வதேச விசாரணைக்கு அனுமதி இல்லை-பாதுகாப்புச் செயலர்-

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கை மீதான சர்வதேச விசாரணைக்கு அனுமதி வழங்கப்போவதில்லை எனவும், அவ்வாறான நடவடிக்கை தொடர்பான கோரிக்கையை தாம் முற்றாக நிராகரிப்பதாகவும் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூன் அந்நாட்டின் புலம்பெயர் புலி ஆதரவாளர்களை திருப்திப்படுத்தவே சர்வதேச விசாரணையைக் கோருவதாகவும் பாதுகாப்பு செயலர் குறிப்பிட்டுள்ளார். பிரிட்டனின் கன்சர்வேடிவ் மற்றும் ஜனநாயக கட்சியின் தேர்தல் வெற்றியை கருத்திற்கொண்டே அவர்களின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. கெமரூனின் இலங்கை விஜயமும் அதன் பின்னணியில் அமைந்ததே. போர்க் குற்றம் தொடர்பிலான கெமரூனின் எச்சரிக்கையானது இலங்கை இன்னமும் பிரிட்டிஷ் ஆளுகைக்குள் இருப்பதைப் போன்ற நிலைமையை தோற்றுவித்திருக்கிறது என கோத்தபாய ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமை மீறல் குறித்து எவ்வித நடவடிக்கையும் இல்லை-சர்வதேச மன்னிப்புச்சபை-

மனித உரிமைமீறல்கள் அதிகரித்துள்ள நாட்டில் பொதுநலவாய மாநாட்டினை நடாத்தியமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என சர்வதேச மன்னிப்பு சபை குற்றம் சாட்டியுள்ளது. எனவே இலங்கையில் யுத்தகாலத்திலும் யுத்த முடிவின் பின்னரும் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. அத்துடன் இந்த குற்றச்செயல்களுக்கு இதுவரை இலங்கை அரசாங்கம் எதுவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே இவ்வாறு தொடர்ந்தும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் ஒரு நாட்டில் பொதுநலவாய மாநாட்டினை நடாத்தியது சிறந்ததல்ல என சர்வதேச மன்னிப்பு சபையின் பொதுச்செயலாளரின் பணிப்பாளர் ஸ்டீவ் க்ரௌசோ சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தொடர்ந்தும் அக்கறை காட்டவேண்டுமானால் சர்வதேச சமூகம் இலங்கையின்மீது தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுக்க வேண்டும். எனினும் சர்வதேசத்திற்கு இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பது ஒரு சவாலாக அமைந்துள்ளது. இருப்பினும் இலங்கையில் மனித உரிமைமீறல்கள் அதிகரித்து இருக்கும்போது அங்கு பொதுநலவாய அமர்வை நடத்தியமை ஏற்றுக்கொள்ள முடியாதது. எனினும் சர்வதேச சமூகம் இலங்கைமீது அழுத்தங்களை தொடர்ந்தும் பிரயோகிக்கும்போது போர்க்குற்றம் உட்பட்ட பல விடயங்களுக்கு தீர்வு காணமுடியும் என ஸ்டீவ் க்ரௌசோ குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டிஷ் பிரதமர் கெமரூனுக்கு கென்ய அமைச்சர் கண்டனம்-

எந்தவொரு நாடும் வெளிநாடுகளில் இருந்து தீர்வுகளையும், ஸ்திரத்தன்மையையும் இறக்குமதி செய்ய முடியாது என கென்ய வெளிவிவகார மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் அமினா மொகமட் தெரிவித்துள்ளார். இலங்கை பிரச்சினைக்கு உள்நாட்டிலேயே தீர்வு காணப்படவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் இலங்கை சர்வதேச விசாரணையை எதிர்கொள்ளவேண்டும் என வெளியிட்ட எச்சரிக்கை தொடர்பிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். பொதுநலவாய நாடுகள் ஒவ்வொன்றும் இறைமையுள்ள நாடுகளாகும் எனவே ஒரு நாட்டை மற்றும் ஒரு நாடு அச்சுறுத்தமுடியாது என்றும் கென்ய வெளியுறவு அமைச்சர் அமினா மொகமட் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்

பொதுநலவாய பணியிலிருந்த பொலிஸாருக்கு விடுமுறை-

பொதுநலவாய உச்சி மாநாட்டிற்காக விசேட பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 3 நாட்கள் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பில் 23 ஆவது பொதுநலவாய மாநாடு நடைபெற்ற காலத்தில் இவர்கள் ஆற்றிய விசேட பணிக்காக இந்த விடுமுறை வழங்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த விசேட பணிகளில் 20 ஆயிரம் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டுத் தலையீடுகளை ஐ.தே.க அனுமதிக்காது-சஜித் பிரேமதாச-

வெளிநாட்டுத் தலையீடுகளை ஐக்கிய தேசியக் கட்சி அனுமதிக்கப் போவதில்லை என கட்சியின் முன்னாள் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பாணந்துறையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் உள்விவகாரங்களில் வெளிநாட்டு அரசாங்கங்கள் தலையீடு செய்வதனை நாம் விரும்பவில்லை. அத்துடன் இந்த நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்த படையினருக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும். இதற்கு அரசாங்கமும் எதிர்க்கட்சியும் ஆதரவளிக்க வேண்டும். மேலும் நாட்டில் வெளிநாட்டு தலையீடுகளுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். எனினும் ஐ.தே.கட்சியின் தலைமைக் காரியாலயம் தாக்குதலுக்கு இலக்கானதனைத் தொடர்ந்தே பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் கட்சி பங்கேற்கவில்லை எனவும் சஜித் பிரேமதாச மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.