wigneswaran_1654672gயாழ்ப்பாணம் முதல்வர் அலுவலகத்தில் வைத்து இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், ‘தி இந்து’வுக்கு அளித்த பிரத்தியேக பேட்டி. இதில், இலங்கைத் தமிழர் நிலை பற்றியும் இந்தியத் தமிழர்களின் உணர்வுகள் குறித்தும் அடிக்கடி ஏற்படும் மீனவர் கைது குறித்தும் முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் தனது மனநிலையைப் பகிர்ந்துகொள்கிறார் விக்னேஸ்வரன். அரசியல்வாதியாக இருந்தும் அரசியலற்ற சமூகக் கண்ணோட்டத்துடன் அவர் கூறியதாவது:

‘ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு’ என்பது உங்கள் நிலைப்பாடாக உள்ளது. ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தனித் தமிழீழம் குறித்து உணர்ச்சிபொங்கப் பேசி வருகின்றனர். இது உங்களுக்கு என்னவிதமான தாக்கத்தை உருவாக்குகிறது?

உணர்வுக்கும் அறிவுக்கும் இடையிலான போராட்டமாக இதை எண்ணத் தோன்றுகிறது. உணர்வு, சுதந்திரத் தென்னிந்தியாவிலிருந்து கொந்தளிக்கிறது. அறிவோ, யதார்த்தத்தின் நிலையறிந்து நிதானமாக இலங்கையில் பயணிக்கிறது.

தமிழக மீனவர்கள் இலங்கையிலும் இலங்கை மீனவர்கள் தமிழகத்திலும் அடிக்கடி கைது செய்யப்படுகின்றனர். மொத்தத்தில் இரு தரப்பிலும் பாதிக்கப்படுவது தமிழ் மீனவர்கள்தான். இதைத் தவிர்க்க நீங்கள் செய்யக்கூடியது என்ன?

உண்மையில் பாதிக்கப்படுவது யார் என்பதை உலகுக்கு உணர்த்துவதே நான் செய்யக்கூடியது. நீங்கள் தமிழர்கள். பாதிக்கப்படுவதாகக் கூறுகிறீர்கள். ஆனால், உண்மையில் பாதிக்கப்படுவது இந்திய – இலங்கை கடற்பரப்பில் வாழும் கடல் இனங்களே. எதற்காக இந்திய மீனவர்கள் தங்கள் கடல் எல்லை தாண்டி இரவு 1 மணியளவில் நன்றாக நாங்கள் பார்க்கக்கூடிய தூரத்திலேயே பயணித்து மீன் பிடிக்கிறார்கள்? பலருக்கு இது தெரியாமல் இருக்கலாம். காரணம், இந்திய கடல் பிராந்தியத்தில் இழுவலைப் படகுகள் மூலம் கடல் வளங்களாகிய மீன்களை வாரி இழுத்து காலி செய்துவிட்டார்கள். பணத்தாசையால் பெரும் படகு முதலாளிகள் தங்கள் நாட்டுக்கும் கடல் வளத்துக்கும் செய்துள்ள துரோகம் இது. உங்கள் பகுதியில் மீன் கிடைக்காததால், இலங்கைக் கடல் பகுதியில் மீன் வாருகிறார்கள். இந்நிலை தொடர்ந்தால், இலங்கை கடல் பிராந்தியத்திலும் கடல் இனங்கள் அற்று ஒன்றுமில்லாமல் போய்விடும். எங்கள் நாட்டில் இழு படகுகள் தடைசெய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் அப்படியல்ல. இழு படகுகளால் மீன் வளங்கள் மட்டுமல்ல் பவளப்பாறைகள்கூட இழுத்துவரப்படுகின்றன. இழு படகு உபயோகத்தை இந்தியா தடை செய்ய வேண்டும். அப்படிப்பட்ட சட்டம் வருமா என்பது சந்தேகமே. தமிழகத்தின் தலைவிதியை தீர்மானிப்பவர்கள் அவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இழு படகை விட்டுவிட்டு மீண்டும் கரை வலையை மீனவர்கள் உபயோகித்தால் மீன் இனம் பெருகும். கடல் அன்னை பூரிப்பாள். இன்று பயனடைந்து கொண்டிருப்பவர்கள் இழு படகுகளுக்குச் சொந்தக்காரர்களான பெரும் பணக்காரர்களே. சிறு மீனவர்கள் அல்லர்.

இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாடு குறித்த உங்கள் நிலைப்பாடு என்ன?

 பகிஷ்கரிப்பது ஒரு தந்திர உபாயம். பிழை செய்தவர்கள் தங்கள் பிழைகளை உணர நாடும் கருவி அது. பகிஷ்கரிப்பு எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதுதான் முக்கியம். அதுபோல மாநாடு சென்று மனத்தாங்கல்களை வெளிப்படுத்துவதும் ஒரு தந்திரம்தான். இவற்றில் எதைப் பின்பற்றுவது என்பது நாட்டுக்கு நாடு மாறுபடும். இந்நிலையில் நாங்கள் பகிஷ்கரிப்பது என தீர்மானித்துள்ளோம்.

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது பல கட்சிகளின் கலவையாகும். ஒவ்வொரு கட்சித் தலைவரும் ஒவ்வொரு குரலில் பேசுகின்றனர். அவர்கள் அனைவரோடும் கைகோத்து நிலையான ஆட்சியைத் தர நீங்கள் வைத்திருக்கும் வியூகம் என்ன ?

 அன்பு ஒன்றுதான். என்னதான் அவர்கள் பேசினாலும் அவர்கள் எங்கள் உடன்பிறப்புகள். அவரவர் கருத்துகளுக்கு காரணம் உண்டு. வன்முறையின் சூழலில் வளர்ந்தவர்கள் அவர்கள். ‘அடித்துப் பறித்தால்தான் கிடைக்கும். அரவணைத்தால் அனைத்தும் போய்விடும்’ என்பது அவர்கள் கொள்கை. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதற்கு ஏற்ப, அனைவரும் கைகோத்ததால், வெற்றி பெற்றோம். ஒற்றுமை குறைந்தால் கீழிறங்க வேண்டிவரும் என்ற எண்ணம் அவர்களை ஒன்றுபடுத்திவைக்கிறது. ‘பஞ்சமே ஆனாலும் பாரம் அவனுக்கன்னாய் நெஞ்சமே அஞ்சாதே நீ’ என்பதே எங்கள் வியூகம். இறைவன் எங்களைக் கைவிடமாட்டான்.

மாகாண அதிகார வரம்பில் காவல்துறை இல்லை. சரியான அதிகாரப் பகிர்வினை அடைய நீங்கள் வைத்திருக்கும் திட்டம் என்ன?

 அதிகாரம் ஒழுங்காகப் பகிர்ந்தளிக்கப்படவில்லை என்பது தெரிந்தே நாங்கள் தேர்தலில் ஈடுபட்டோம். மக்கள் சக்தி எங்களுடன் உள்ளது என்பதை தேர்தல் மூலம் இலங்கை அரசுக்கு தெரிவித்துள்ளோம். பேச்சுவார்த்தை மூலமே அதிகாரப் பகிர்வைப் பெற வேண்டும். இப்போது அதிகாரம் போதுமானதாக இல்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.

 

உங்கள் ஆட்சியில் எதனை அமல்படுத்த அதிக முன்னுரிமை தருகின்றீர்கள்?

 போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணங்களுக்கு முன்னுரிமை தருகிறேன். வேலையற்றோர், விதவைகள், வீடு – நிலங்களை இழந்து நிற்போர் ஆகியோருக்கு நிவாரணம் வழங்கவேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது.

இந்திய உதவியுடன் வீடு கட்டித் தரும் திட்டம் எந்த அளவில் உள்ளது? அதை விரைவுபடுத்த நீங்கள் எடுத்திருக்கும் முயற்சி என்ன?

 குறிப்பிட்ட தொகையே வீடுகட்ட ஒதுக்கப்பட்டுள்ளது. இப்போது ஆண்டுகள் சில கடந்த நிலையில், பொருள்களின் விலையேற்றத்தால் வீடுகளை கட்டி முடிக்க இயலாமல் பலர் திண்டாடுகின்றனர். இதுகுறித்து யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதருடன் பேசிக்கொண்டிருக்கிறோம். குறைந்த வட்டியுடன் கடன் வசதி செய்து தரும்படி பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறோம்.

இலங்கை அரசின் மும்மொழித் திட்டம் வரவேற்பு பெற்றுள்ளதா?

 தமிழ் மக்கள் நினைக்கிறார்கள் – எங்களை சிங்களம் படிக்கவைத்துவி்ட்டு சிங்களர்கள் தமிழ் படிக்கமாட்டார்கள் என்று. மேற்படிப்பு படிப்பதற்கு தமிழும் சிங்களமும் தெரிந்திருக்க வேண்டும் என்று பள்ளியிலேயே கட்டாயப்படுத்தினால்தான் பலன் இருக்கும். அலுவலகங்களில் மட்டும் செயல்படுத்தி ஒன்றும் ஆகாது.

யாழ்ப்பாணத்துக்கு வருமாறு இந்தியப் பிரதமரை அழைத்திருந்தீர்கள். அதுபோல இந்தியாவுக்கு, குறிப்பாக தமிழகத்துக்கு நீங்கள் வருவீர்களா? அதற்கான திட்டம் ஏதும் உள்ளதா?

 தமிழகத்துக்கு வர திட்டம் தீட்டவேண்டியதில்லை. கடந்த 25 ஆண்டுகளாக ஒவ்வோர் ஆண்டும் தமிழகம் வந்துபோய்க் கொண்டிருக்கிறேன். தற்போது அரசியல் நிமித்தம் நீங்கள் அழைத்து நான் வருவதுதான் பொருத்தமாக இருக்கும். நீங்கள் அழைத்தால் என் பாதுகாப்பு உங்கள் பொறுப்பு. அழைக்காமல் நானாக வந்தால் எனக்கு அவன் பொறுப்பு.

தமிழகத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமான இலங்கைத் தமிழ் அகதிகள் உள்ளனர். அவர்கள் தாயகம் திரும்ப என்ன செய்யப் போகிறீர்கள்?

 தற்போது வடக்கு மாகாணத்திலிருந்து ராணுவத்தை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். அவர்கள் படிப்படியாகக் குறைக்கப்பட்டால், அகதிகள் திரும்ப வழி ஏற்படும். அகதிகளுக்கு வீட்டு வசதிகள், தொழில் வாய்ப்புகள் செய்துதர வேண்டியது எங்கள் பொறுப்பு என்பதை உணர்ந்துள்ளோம்.

வடக்கு மாகாணத்தில் தொழில் வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்பு பெருக்கத்துக்கும் முதலீட்டுக்கும் இந்தியாவிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

 விவசாயம், கால்நடைப் பண்ணை, கைத்தொழில்கள் ஆகியவற்றில் எங்களுக்கு இந்தியா அறிவுரை வழங்க வேண்டும். கலை – கலாச்சாரத்தில் எங்களது வரலாற்றை உலகுக்கு எடுத்துரைப்பதில் இந்தியாவின் உதவி தேவைப்படுகிறது. பெரும் முதலீட்டை மத்திய அரசிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

உங்கள் குடும்பமே சிங்கள – தமிழ் இனங்களின் இணக்கமான வாழ்வுக்கு உதாரணம்தான். இலங்கையில் இரு இனங்களும் இணக்கமாக வாழ நீங்கள் முன்வைக்கும் யோசனைகள் என்னென்ன?

 என் இரு மகன்களும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். அதற்காக இரு இன மக்களும் மற்ற இனத்தில் வரன் தேட வேண்டும் என கூறமாட்டேன். புரிந்துணர்வும் பரஸ்பர நம்பிக்கையும்தான் இணக்கத்தை ஏற்படுத்தும். சிங்களர்களே சிறுபான்மையினர் மனோநிலையில்தான் வாழ்கின்றனர். மற்றவர்களைக் காட்டிலும் நாம் தாழ்ந்துவிட்டோமே என்ற எண்ணத்தில் எங்களைத் துன்புறுத்துகின்றனர். இதற்குக் காரணம் தமிழ்நாடுதான். இலங்கைத் தமிழ் மக்கள் சார்பாக தமிழக மக்கள் பேசப்பேச, இத்தனை கோடிப் பேரின் ஆதரவு இலங்கைத் தமிழர்களுக்கு இருக்கிறது. எங்களுக்கு யாரும் இல்லை என்கிற எண்ணம் மேலோங்க எங்களைத் துன்புறுத்துவதில் இன்பம் காண்கிறார்கள் சிங்களர்கள்.

உங்களின் முதன்மையான தேடல் ஆன்மிகம் என்று கூறியிருக்கிறீர்கள். உங்களின் ஆன்மிகத் தேடல் பற்றிக் கூறுங்களேன்

 மாணவனாக இருந்தபோதே எனக்கு ஆன்மிக ஈடுபாடு அதிகம். சமய ஓப்பீடு பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றவன் நான். இந்தப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற இந்து, பவுத்தம், கிறிஸ்தவ, இஸ்லாமிய சமயங்கள் பற்றிய அறிவு முக்கியம். பல சமயப் பெரியோர்களை நேரடியாகச் சந்தித்தேன். தத்துவமேதை ஜே.கிருஷ்ணமூர்த்தி, சுவாமி சாந்தானந்த சரஸ்வதி, சத்யசாயி பாபா, சிவபால யோகி, ராம்சூரத்குமார், ராஜஸ்தானில் வசித்த விமலா தக்கார் போன்றோரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மாத்தளை சுவாமி பிரேமானந்தரை ஆன்மிக ஆசானாக அடையும் பேறு பெற்றேன். மக்கள் சேவையே என் கடமை என்ற எண்ணத்தை என்னுள் வேரூன்ற வைத்தவர் அவர்தான்.

ஒரு பேட்டியில் ‘இதற்கு முன் அரசியலில் ஈடுபட்டது இல்லை’ என்று கூறியிருந்தீர்கள். இப்போது அரசியலில் இறங்கியிருப்பது ஏன்?

 பெயர், புகழ், கல்வி, அந்தஸ்து, பணம் எல்லாம் பெற்ற பின் அமைதி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தவன் நான். அரசியல் எனக்கு வேண்டாத ஒன்று. ஆனால், சேவை நமது கடமை என்று ஆன்மிகம் சொல்கிறது. உற்றார் உறவினர்கள், நண்பர்கள், மாணவர்கள், ‘ வடமாகாணத் தமிழ் மக்களுக்கு நீ சேவை செய்தே ஆகவேண்டும்’ என நிர்ப்பந்தித்தபோது இறைவன் மீது பாரத்தை போட்டுவிட்டு தேர்தலில் நிற்க சம்மதித்தேன். நான் அரசியலில் இறங்கவில்லை: இறக்கிவிடப்பட்டேன்.