விசாரணை நடத்துவதற்கு மனித உரிமை ஆணைக்குழு தீர்மானம்-
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமைகள் மீறல் விசாரணைகளை பொதுநலவாய செயலகத்தின் தொழில்நுட்ப உதவியுடன் முன்னெடுக்கப்போவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த விசாரணைகளை தேசிய மட்டத்திலேயே நடத்த ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், பொதுநலவாய செயலகத்தின் மனித உரிமை பிரிவின் பிரதிநிதிகள் அடங்கிய தூதுக்குழுவினர் டிசம்பர் 2ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக கூப்படுகிறது. 2009ஆம் ஆண்டிலிருந்து 2013ஆம் ஆண்டு இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலேயே முதலில் உள்ளக விசாரணை நடத்தப்படவேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் பிரதீபா மஹாநாம தெரிவித்துள்ளார். தேசிய ரீதியிலான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதையே பொதுநலவாயம் நம்புகின்றது என பிரதீபா மஹாநாம கூறியுள்ளார்.
மொழியை கற்பிக்கும் புதிய முறை அறிமுகம்-
மொழியை கற்பிக்கும் புதிய முறைமை தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்மூலம் மும்மொழி செயற்றிட்டத்தை நாடு முழுவதும் உரிய முறையில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளதுடன் உத்தியோகத்தர்கள் மற்றும் சாதாரண பிரஜைகளுக்கு மொழிகளை கற்பிக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேற்படி திறமையுள்ளவர்களுக்கு மொழியை கற்பிக்கும் செயற்றிட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் ஆங்கில மொழியை கற்பிக்கும் விசேட திட்டமொன்றை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
டேவிட் கமரூனுக்கு எதிர்ப்பை வெளியிட வேண்டும்- அமைச்சர் வாசு-
பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொண்ட பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன், இலங்கைக்கு எதிராக வெளியிட்ட கருத்து தொடர்பில் எதிர்ப்பை வெளியிட வேண்டும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகளின் செயலாளர் மற்றும் பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் ஆகியோரிடம் இது குறித்து உரிய முறையில் முறைப்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அங்கத்துவ நாடுகளின் உள்நாட்டுப் பிரச்சினைகள் தொடர்பாக பகிரங்கமாக விமர்சனம் செய்யக் கூடாது என்ற உடன்பாடு பொதுநலவாய அமைப்பில் உள்ளது. எனினும் டேவிட் கமரூன் இலங்கையில் வைத்து வெளியிட்ட கருத்துக்களை கடுமையாக எதிர்க்கின்றேன். இது குறித்து அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் எதிர்ப்பை தெரிவிக்காது விடின் தவறான முன்னுதாரணம் கொடுத்ததாக அது ஆகிவிடும். இருப்பினும் பிரித்தானிய பிரதமரின் கருத்துக்களை சிறிதாக எண்ணிவிடக் கூடாது. அது தொடர்பாக இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாத்தறையில் தமிழரின் பெயரில் வீதி திறந்துவைப்பு-
தென் மாகாணத்திலுள்ள வீதியொன்றுக்கு தமிழரொருவரின் பெயர் முதற் தடவையாக சூட்டப்பட்டுள்ளது. மாத்தறை நகரிலுள்ள வீதியொன்றுக்கே சேர் பொன்னம்பலம் இராமநாதனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவியேற்பு தினம் மற்றும் பிறந்த தினம் ஆகியவற்றை முன்னிட்டே மேற்படி வீதிக்கு இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. குறித்த வீதியின் பெயர் சூட்டும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச்சூட்டில் இரு விமானப்படை வீரர்கள் உயிரிழப்பு-
நுவரெலியா, பீதுருதலாகல விமானப்படை முகாமில் சிப்பாய் ஒருவர் மற்றுமொரு சிப்பாயை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த படைவீரர் ஒருவர் மற்றுமொரு படைவீரர்மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அதே துப்பாக்கியில் தன்னையும் சுட்டுள்ளார். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.