டேவிட் கெமரூன் இராஜதந்திர உறவுகளை மீறியதாக குற்றச்சாட்டு-
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கெமரூன் தமது இலங்கை விஜயத்தின்போது இராஜதந்திர உறவுகளை மீறியுள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. அவர் தமது விஜயத்தின்போது இராஜதந்திர முறைகளுக்கு ஏற்ப நடந்து கொள்ளவில்லை என இலங்கையின் மேலதிகாரி ஒருவரை கோடிட்டு பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. தமது இலங்கை விஜயம் வெற்றிகரமாக அமைந்ததாக கெமரூன் பிரித்தானிய நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். இதனிடையே கெமரூன் இலங்கைக்கு வந்தபோது தேசிய விருந்தினர் புத்தகத்தில் கையொப்பமிட மறுத்ததாக கூறப்படுகிறது. அதேநேரம் தமிழர் விடயத்தில் பொதுநலவாய மாநாட்டில் தலையிட கெமரூனுக்கு அதிகாரம் இல்லை என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
கைதிகளுக்கு வாக்களிப்பதற்கு வாய்ப்பு-
குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இந்தியாவில் சிறை வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு தேர்தல்களின்போது வாக்களிப்பதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன. இந்திய உயர்நீதிமன்றத்தினால் நேற்று; வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமையவே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாக்களிப்பு உரிமை மறுக்கப்படும் கைதிகளுக்கு தேர்தல்களில் போட்டியிட முடியாது என முன்னதாக சட்டம் வகுக்கப்பட்டிருந்தது. எனினும், சிறைவாசம் அனுபவித்துவரும் கைதிகளுக்கு தேர்தலில்களின்போது வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
தாதியர்கள் சேவைக்கு இணைப்பு-
இலங்கையில் முதற் தடவையாக தாதியர் சேவை பயிற்சிக்காக 6ஆயிரத்து 25பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார். உயர்தர விஞ்ஞான பாடத்தில் சித்தி எய்திய மாணவர்களுக்கே இந்த வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. இந்நடவடிக்கை அடுத்த மாதம் 17ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது. இதனிடையே, அன்று தொழில்சார் மருத்துவ சேவையை நிறைவுசெய்த 1,700 பேருக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திருமலை கைதிகளின் பிரச்சினை குறித்து பிரதி அமைச்சர் ஆராய்வு-
திருகோணமலை சிறைச்சாலைக்கு, சிறைச்சாலை மற்றும் மறுசீரைமைப்பு பிரதி அமைச்சர் சந்திர சிறி முத்துகுமாரன இன்று விஜயம் ஒன்றினை மேற்கொண்டு கைதிகளின் பிரச்சினைகளை கேட்டறிந்துள்ளார். இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் ஜீ.எஸ்.விதானகே, அமைச்சின் ஆலோசகர் சதீஸ்குமார், திருகோணமலை சிறைச்சாலை அத்தியட்சகர் ஜே.சீ.வீரசிங்க ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். பிரதி அமைச்சர் பதவி ஏற்தை முன்னிட்டு திருகோணமலைக்கு தனது முதலாவது விஜயத்தினை மேற்கொண்டு திருகோணமலை சிறைச்சாலையிலுள்ள 228 கைதிகளையும் சந்தித்துள்ளார். இதில் இந்திய மீனவர்கள் 31 பேரையும், 5 வருடங்களாக புலிகள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 13 கைதிகளையும் சந்தித்து அவர்களது பிரச்சினைகளை அமைச்சர் இதன்போது கேட்டறிந்து கொண்டுள்ளார்.
புதிய ஹெல்மட் அணியும் சட்டம் இடைநிறுத்தம்-
முகத்தை முழுமையாக மறைக்கும் வகையிலான தலைக்கவசப் பாவனைக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடையை தற்காலிகமாக நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அதிக விலைக்கு தலைக்கவசம் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களின் பிரகாரம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். முழுமையான முகத்தை மறைக்கும் வரையிலான தலைக்கவசங்களை அணிபவர்களில் சிலர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுப்பட்டிருக்கின்றமையும், தலைக்கவசங்கள் கண்களை மறைப்பதால், வீதி தெளிவாக தென்படமையால் விபத்து இடம்பெறுவதாலும் இதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.