Header image alt text

போர்க் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்: ப.சிதம்பரம்-

மனித உரிமை மீறல் குற்றவாளிகளை இலங்கை அரசு விசாரணை நடத்தி தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் நேற்று நடைபெற்ற 2ஆவது தெற்காசிய டயஸ்பரா கன்வென்ஷன் மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம் சிறுபான்மை தமிழ்மக்கள் இன்னலுற்று வருகிற இலங்கையில் முதலீடுகள் செய்ய ஏன் அனுமதிக்க வேண்டும்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதலிளித்து பேசிய அவர், தனது சொந்த நாட்டு மக்களுக்கும், உலகமெங்கும் உள்ள மக்களுக்கும் பதில் அளிக்க வேண்டிய கடமை இலங்கை அரசுக்கு உண்டு. இந்த விடயத்தில் மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தி அதற்கு காரணமானவர்களை இலங்கை தண்டிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மனித உரிமை மீறல் பிரச்சினையைப் பொருத்தமட்டில் எந்த நாடு, எந்த மக்கள் என்ற எல்லைகள் கிடையாது. எனவே இதில் இலங்கை அரசுக்கு பொறுப்பு இருக்கிறது. மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க வேண்டும். அந்த சதிகாரர்களைப் பிடித்து நீதியின் முன் நிறுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

யுத்த குற்றங்கள் தொடர்பில் எந்தவொரு ஆதாரத்தையும் கொண்டு போக முடியாது: ராவணா பலய-

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறுப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் எந்தவொரு ஆதாரத்தினையும் யாரும் கொண்டுபோக முடியாது. எம் மீது விசாரணைகளை மேற்கொள்ள முன்னர் பிரித்தானியாமீது சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என நேற்றைய ஆர்ப்பாட்டத்தின்போது ராவணா பலய பௌத்த அமைப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர். பிரித்தானியா மீது விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென்ற மகஜரை கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரத்திடம் அவர்கள் நேற்று கையளித்தனர். பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனுக்கு எதிராகவும் பிரித்தானியாவிற்கு எதிரான மனித உரிமை மீறல் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் நேற்று ராவணா பலய பௌத்த அமைப்பினால் கொழும்பு பிரித்தானிய உயர் ஸ்தானிகரத்துக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் மற்றும் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் படங்களை பதித்த பதாதைகளை ஏந்தியும் கோசங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இலங்கையை கெமரூன் கையாண்ட முறை தவறு-இந்தியா-

பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் இலங்கையில் யுத்தக் குற்றத்தை கையாண்ட முறையை கேள்விக்கு உள்ளாக்கியதுடன் இவ்வாறான முறை தீங்கானது என இந்தியா கூறியுள்ளது. சாதாரண மக்கள்மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டை விசாரிக்க சுயாதீனமான ஒரு செயன்முறையை அமைக்க இலங்கைக்கு 4 மாத அவகாசம் வழங்கி இது நடைபெறாதுவிடின் இலங்கை ஐ.நா ஆதரவுடனான ஒரு சர்வதேச விசாரணைக்கு முகம்கொடுக்க வேண்டியிருக்குமென கெமரூன் கூறியிருந்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதற்கு பதிலளிக்கும் வகையில் ‘கண்னாடி வீட்டிலிருப்போர் கல்லெறியக் கூடாது’ எனவும் இலங்கை இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க தேவையெனக் கருதும் காலத்தை எடுக்கும் எனவும் கூறியிருந்தார். டெல்லியிலுள்ள இந்திய அரச வட்டாரங்கள் கெமரூனின் அணுகுமுறையை நிராகரித்துள்ளன. கெமரூன் மாதிரி நாம் நடந்துகொள்ள மாட்டோம் என அவர்கள் கூறியுள்ளனர். வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் பொதுநலவாய தலைவர்கள் உச்சிமாநாட்டுக்கு சென்றிருந்தமை இலங்கை பற்றிய இந்தியாவின் அக்கறையின் வெளிப்பாடாகும் எனவும் இந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஆஸியிலிருந்து 79பேர் திருப்பி அனுப்பிவைப்பு-

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் சென்றவர்களில் 79பேர் பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். கடந்த 10ஆம் திகதி அவுஸ்திரேலியா சென்றடைந்த குழுவொன்றே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் கூறியுள்ளது. ஆஸி அரசாங்கத்தின் புதிய கொள்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, நீங்கள் படகு மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா வந்தால் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவீர்கள் எனும் கடுமையான செய்தியையும் அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலிய அரசின் குடிவரவுக் கொள்கை முன்னொருபோதும் இல்லாதவாறு கடுமையாக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த 2012 ஒக்டோபர் மாதத்திலிருந்து படகுமூலம் அவுஸ்திரேலியா சென்ற 1,100க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். கடத்தல்காரர்களுக்கு பணம் செலுத்துவோர் தமது உயிரை ஆபத்துக்கு உள்ளாக்குவதுடன் பணத்தையும் வீணடிக்கின்றனர். இங்கு அவர்களுக்கு விஸா கிடையாது. இவர்கள் எதற்காக பணம் கொடுத்தார்களோ அது அவர்களுக்கு கிடைக்காது. அதனால் இவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவர். அவுஸ்திரேலிய அரசாங்கம் படகு மூலம் வருவோரை திருப்பி அனுப்புவதை தொடர்ந்து முன்னெடுக்கும் என்று அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் செய்தியில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஈரான் கடற்படையின் நீர்மூழ்கி கப்பல்கள் இலங்கையில்-

ஈரானின் 28ஆவது கடற்படையணியின் ஒரு தொகை போர்க்கப்பல்கள் மற்றும் (நீர்மூழ்கிக் கப்பல்கள்) தரீக் சப்மரீன்கள் மும்பை மற்றும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று அந்நாட்டின் பஃர்ஸ் செய்திச்சேவை தெரிவித்துள்ளது. தங்களது போர்க் கப்பல்கள் தெற்காசியாவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பதாக ஈரான் கடற்படையின் செயற்பாட்டுப் பிரிவின் கட்டளை அதிகாரி லெப்டினன் கமாண்டர் ஷியாவஸ் ஜரா கூறியுள்ளார். இந்த கப்பல்கள் மற்றும் சப்மரீன்கள் கொழும்பு மற்றும் மும்பாய் துறைமுகங்களை அடையும் என்றும் ஷியாவஸ் குறிப்பிட்டுள்ளார். இந்த போர்க்கப்பல்களின் நோக்கம் இதுவரையில் தெளிவுபடுத்தப்படாத போதிலும் ஈரான் கடற்படையின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு இதுவொரு அனுபவமாக அமையும் என பஃர்ஸ் செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.