Header image alt text

வாதறவத்தை பாய்த் தொழிற்சாலையை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்-

யாழ்ப்பாணம் புத்தூர் வாதறவத்தை கிராமத்திற்கு இன்றுமாலை விஜயம் செய்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் வலிதெற்கு பிரதேசசபை உறுப்பினர் நவலோகராஜா(லோகன்) ஆகியோர் அப்பகுதிகளைப் பார்வையிட்டதுடன், வாதறவத்தை பகுதியில் பாய்த் தொழிற்சாலை அமைந்திருந்த பகுதிக்கும் விஜயம் செய்து தொழிற்சாலையையும் பார்வையிட்டுள்ளனர். சுமார் முப்பது முதல் நாற்பது பெண்கள் வரையில் பணியாற்றி வந்த இந்த பாய்த் தொழிற்சாலை இன்று முழுமையாக அழிக்கப்பட்ட நிலையில் உள்ளது. இந்த தொழிற்சாலையை மீளவும் ஆரம்பிப்பது தொடர்பாகவும், கிராம மக்களின் தேவைகள் குறித்தும் வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், பிரதேச சபை உறுப்பினர் நவலோகராஜா அவர்களும் பிரதேச மக்களுடன் விரிவாக கலந்துரையாடியுள்ளனர். இதனையடுத்து வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் நவலோகராஜா ஆகியோர் வாதறவத்தை விக்னேஸ்வரா சனசமூக நிலையத்திற்கு விஜயம் செய்து சனசமூக நிலையத்திற்கான வீதிப் பிரச்சினைகள், முன்பள்ளிக்கான கட்டிடத் தேவைகள் என்பன தொடர்பாக விரிவாக கலந்துரையாடியுள்ளனர். விக்னேஸ்வரா சனசமூக நிலைய செயலாளர் ரவி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலின்போது பிரதேச இளைஞர்களும், பெண்களும் என பெருமளவிலானோர் கலந்துகொண்டிருந்தனர்.

ஊடக அடக்குமுறைக்கு எதிராக மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் போராட்டம்-

131123144501_lanka_candlelight_vigil_624x351_amilagamage 131123145047_lanka_candlelight_vigil_624x351_amilagamage 131123150628_lanka_candlelight_vigil_624x351_amilagamage 131123151330_lanka_candlelight_vigil_624x351_amilagamageசர்வதேச தண்டனை நிறைவு நாள் இன்று அனுஸ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு ஊடகத்துறைக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் நேற்று மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் போராட்டம் இடம்பெற்றது. இலங்கை இதழியல் கல்லூரி பழைய மாணவர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. இளம் ஊடகவியலாளர்களை ஒரு குடையின்கீழ் ஒன்று திரட்டுவது இதன் இன்னுமொரு நோக்கமாகும். இலங்கை மற்றும் உலகில் ஊடகத்துறை மற்றும் கலைத்துறைக்கு சேவையாற்றி உயிர் நீத்தவர்கள் இதன்போது நினைவு கூறப்பட்டு, அவர்களுக்கு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இதன்போது கருத்து வெளியிட்ட இலங்கை இதழியல் கல்லூரியின் பழைய மாணவர் சங்க செயற்குழு உறுப்பினர் பழனி விஜயகுமார், இலங்கையில் ஊடக சுதந்திரத்திற்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். கருத்து வெளியிடும் சுதந்திரற்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

 

கிளிநொச்சியில் 50 தமிழ் குடும்ப பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை-

D210330340

கிளிநொச்சியில் மூன்று கிராமங்களைச் சேர்ந்த 50 தமிழ்க் குடும்ப பெண்களுக்கு போஷாக்கு இன்மையை காரணம் காட்டி கட்டாயக் கருத்தடை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே கட்டாய கருத்தடை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உரிய விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என யாழ். சிவில் சமுகப் பிரதிநிதிகளும் ஊடகவியலாளர்களும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒரவரான முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஆர்.ஆனந்தராஜாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சிவில் சமுகப் பிரதிநிதிகளுடன் நேற்று யாழ்.கிறின் கிராஸ் ஹோட்டலில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.இச்சந்திப்பில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் பொலிஸ் நிலையங்களில் இடம்பெறும் மொழி உரிமை மீறப்படும் சம்பவங்கள், மீள்குடியேற்றம் தடைப்படுவதற்கான காரணங்கள், இராணுவத்தினரின் அடக்குமுறைகள், சமூகவிரோத சம்பவங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. மேலும் கிளிநொச்சியில் மூன்று கிராமங்களைச் சேர்ந்த 50 தமிழ்க் குடும்ப பெண்களுக்கு போஷாக்கு இன்மையை காரணம்காட்டி கட்டாயக்கருத்தடை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு உரிய விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதன்போது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்; ஆர்.ஆனந்தராஜா, தமது ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலம் முறைப்பாடு வழங்கப்படுமிடத்து உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார். வடக்கில் திட்டமிட்ட சமுகப்பிறழ்வை ஏற்படுத்தும் நோக்குடன் இந்தக்கட்டாய கருத்தடை மேற்கௌ;ளப்பட்டதா என்ற கேள்வி எழுவதோடு தமிழரின் விகிதாசாரத்தை குறைக்க கருத்தடை மருந்தை பயன்படுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. அத்தோடு பெண்களின் உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் அமைப்புகளும் சிவில் சமுகப் பிரதிநிதிகளும் இந்த கட்டாய கருத்தடையை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் போதுமானதாகயில்லை எனவும் இதன்போது குற்றம்சாட்டப்பட்டது.

இலங்கை அகதிகளை இலக்குவைத்தே அவுஸ்திரேலியா கொள்கை வகுப்பு-

படகுமூலம் வரும் சட்டவிரோத அகதிகளை உடனடியாக நாடு கடத்தும் அவுஸ்திரேலியாவின் கொள்கை, இலங்கை அகதிகளை மாத்திரமே இலக்கு வைத்து மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் தாதியாக கடமையாற்றும் ஒருவர், த கார்டியன் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளார். கிறிஸ்மஸ் தீவில் உள்ள அகதிகள் மிகவும் மோசமான நிலையில் வாழ்கின்றனர். அங்கு போதிய இடவசதிகள் இல்லை. இதற்கிடையில் புதிதாக வரும் அகதிகளை ஓரிரு வாரங்களுக்குள் மீண்டும் நாடுகடத்தும் கொள்கையை அவுஸ்திரேலிய அரசு கடைப்பிடிக்கிறது. எனினும் இது இலங்கை அகதிகளை மாத்திரமே இலக்கு வைத்து நடத்தப்படுகிறது என குறித்த தாதி கூறியுள்ளார். ஏனைய அகதிகள் யாரும் அவ்வாறு நாடுகடத்துலுக்கு உட்படுத்தப்படுவதில்லை. இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து 47 நாட்கள் பயணம் மேற்கொண்டு வருகின்ற தமிழ் அகதிகள், இவ்வாறு உடனடியாக திருப்பி அனுப்படுவது, நியாயமற்ற செயல் என்று மேற்படி தாதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அனந்தி சசிதரன் மனித உரிமைக்குழுவில் முறைப்பாடு-

தனது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்திருந்த பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரனின் வடபகுதிக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இதன்போது முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தின்போது பொலிஸாரால் தனது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அனந்தி சசிதரனின் முறைபாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் அனந்தி சசிதரன் முறைபாட்டினை செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த முறைபாடு தொடர்பான விசாரணைகளை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளதாக கலாநிதி பிரதிபா மஹாநாமஹேவா மேலும் கூறியுள்ளார்.

இலங்கையின் மறுசீரமைப்புக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு-

இலங்கையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் நீசா பீஸ்பால் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் அரசியல் அபிவிருத்தியுடன், எதிர்கால வேலைத்திட்டங்களுக்கும் அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கும் என்று துணை இராஜாங்கச் செயலாளர் நீசா பீஸ்பால் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கவிஞரும், நடிகருமான வீ.எஸ்.எஸ் ஜெயபாலன் கைது-

உள்நாட்டு வீசா சட்டமூலத்தை மீறியமைக்காக கவிஞரும், நடிகருமான வீ.எஸ்.எஸ். ஜெயபாலன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். சுற்றுலா வீசாவில் வந்து, வேறு பணிகளில் ஈடுபட்டமைக்காக அவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலீஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். ஜெயபாலன் வவுனியா மாங்குளம் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டார். வீ.எஸ்.எல் ஜெயபாலன் தற்போது நோர்வேயின் பிரஜா உரிமை கொண்டவர். அவர் தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வுதுறை அதிகாரிகள் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண மேலும் கூறியுள்ளார்.

பிரதியமைச்சர் சந்திரசேன, அமைச்சராக பதவியேற்பு-

பிரதி பொருளாதார அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். விசேட வேலைத்திட்டகள் அமைச்சராகவே அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் சிரேஷ்ட அமைச்சர்கள் அடங்களாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 57 பேரும், பிரதியமைச்சர்கள் 38 பேரும் செயற்றிட்ட அமைச்சர்கள் இருவரும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மாளிகையிலுள்ள மரத்திலேறி ஆர்ப்பாட்டம்-

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பதற்கு இடமளிக்கும் வரையில் தான் இறங்க மாட்டேன் என்று கூறி ஜனாதிபதி மாளிகையிலுள்ள மரத்திலேறி ஒருவர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார். நகர அபிவிருத்தி அதிகார சபையின் முன்னர் சிரேஷ்ட உதவியாளர் ஒருவரே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அநுராதபுரத்திலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இருக்கின்ற மரத்திலேயே ஏறி அவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். வட மத்திய மாகாண சபையின்கீழ் சாரதியாக சேவையாற்றிய அவர் ஒழுக்காற்று நடவடிக்கையின் பின்னர் 2007 ஆம் ஆண்டு சேவையிலிருந்து நீக்கியதாகவும் தனக்கு ஏற்பட்ட அசாதாரணத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவருவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காமையை அடுத்தே அவர் மரத்திலேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அநுராதபுரத்திலுள்ள மாளிகைக்கு இன்று சனிக்கிழமை வருகைதந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.