வாதறவத்தை பாய்த் தொழிற்சாலையை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்-

யாழ்ப்பாணம் புத்தூர் வாதறவத்தை கிராமத்திற்கு இன்றுமாலை விஜயம் செய்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் வலிதெற்கு பிரதேசசபை உறுப்பினர் நவலோகராஜா(லோகன்) ஆகியோர் அப்பகுதிகளைப் பார்வையிட்டதுடன், வாதறவத்தை பகுதியில் பாய்த் தொழிற்சாலை அமைந்திருந்த பகுதிக்கும் விஜயம் செய்து தொழிற்சாலையையும் பார்வையிட்டுள்ளனர். சுமார் முப்பது முதல் நாற்பது பெண்கள் வரையில் பணியாற்றி வந்த இந்த பாய்த் தொழிற்சாலை இன்று முழுமையாக அழிக்கப்பட்ட நிலையில் உள்ளது. இந்த தொழிற்சாலையை மீளவும் ஆரம்பிப்பது தொடர்பாகவும், கிராம மக்களின் தேவைகள் குறித்தும் வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், பிரதேச சபை உறுப்பினர் நவலோகராஜா அவர்களும் பிரதேச மக்களுடன் விரிவாக கலந்துரையாடியுள்ளனர். இதனையடுத்து வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் நவலோகராஜா ஆகியோர் வாதறவத்தை விக்னேஸ்வரா சனசமூக நிலையத்திற்கு விஜயம் செய்து சனசமூக நிலையத்திற்கான வீதிப் பிரச்சினைகள், முன்பள்ளிக்கான கட்டிடத் தேவைகள் என்பன தொடர்பாக விரிவாக கலந்துரையாடியுள்ளனர். விக்னேஸ்வரா சனசமூக நிலைய செயலாளர் ரவி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலின்போது பிரதேச இளைஞர்களும், பெண்களும் என பெருமளவிலானோர் கலந்துகொண்டிருந்தனர்.