பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழியில் முறைப்பாட்டு வசதி-
வடக்கு கிழக்கு உட்பட அனைத்து மாவட்டங்களிலும் பொலிஸ் நிலையங்களில் பொதுமக்கள் தமிழ் மொழியில் பதிவுசெய்ய முடியும். இதனை ஆட்சேபிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் ரி.ஆனந்தராசா தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட சிவில் அமைப்புக்களுக்கும் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்றுமுன்தினம் யாழில் இடம்பெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த ஆணையாளர் ஆனந்தராசா, பொலிஸ் நிலையங்களில் தற்போது தமிழிலும் சிங்களத்திலும் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதனை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கடுமையாகக் கண்காணித்து வருகின்றனர். பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை எழுத்தில் கொண்டுசென்று கொடுக்கும்போது அதனை அவர்கள் தமது முறைப்பாட்டுப் புத்தகத்தில் பதிந்து நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். ஆனால் அவர்கள் விசாரணை செய்யும் வேளையில் அவர்கள் தமது கைகளினாலேயே பதிவுகள் மேற்கொள்வார்கள். நாம் அதனை உரியமுறையில் தெரிந்து கொண்டு அதில் கையயாப்பம் இடவேண்டும் என்று கூறியுள்ளார்.
உள்ளக விசாரணைக்கு பிரிட்டன் வலியுறுத்தல்-
இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரிய உள்ளக விசாரணைகளை நடத்தவில்லையெனில் சர்வதேச விசாரணைக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என பிரித்தானிய மீண்டும் வலியுறுத்தியுள்ளது. பிரித்தானியாவின் பொதுநலவாய அலுவலகத்தின் சிரேஸ்ட அமைச்சர் பரோனெஸ் வர்ஸி பிரிட்டிஷ் பாராளுமன்ற பிரபுக்கள் சபையில் தெரிவித்துள்ளார். மேலும் பொதுநலவாய மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் பங்கேற்றமை சரியான தீர்மானமே என்றும் பரோனெஸ் குறிப்பிட்டுள்ளார். டேவிட் கமரூன் இலங்கைக்கு சென்றதன் மூலம் அந்த நாட்டின் விடயங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரமுடிந்தது. அத்துடன் 1948ஆம் ஆண்டுக்கு பின்னர் வெளிநாட்டு தலைவர் ஒருவர் இலங்கையின் வடக்கிற்கு விஜயம் செய்த முதல் சந்தர்ப்பமாக அது அமைந்தது. பிரதமரின் தீர்மானம் காரணமாகவே ஊடகவியலாளர்களுக்கு அங்கு சென்று விடயங்களை வெளிப்படுத்த முடிந்ததுடன் காணாமல்போன மற்றும் இறந்துப்போன மக்களின் விடயங்களை சர்வதேசத்துக்கும் கொண்டு செல்லமுடிந்தது என்; சிரேஸ்ட அமைச்சர் பரோனெஸ் வர்ஷி சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தக் குற்றங்களை முன்வைக்கும் உரிமை பிரித்தானியாவுக்கு இல்லை-
இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றங்களை முன்வைக்கும் உரிமை பிரித்தானியாவுக்கு இல்லை என புதிய சமசமாஜ கட்சியின் பிரதான செயலாளர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன், இலங்கையின் யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தமை தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரன் பல மனித உரிமை மீறல்களை மேற்கொண்டிருந்தார். குறிப்பாக இங்கிலாந்தின் கல்விக்கான நலன் திட்டத்தை ரத்து செய்துள்ளார். அதேபோன்று லண்டனில் இடம்பெற்ற கழவரத்துக்கு அவரே பொறுப்பாளியாவார். இந்த சூழ்நிலையில் இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் உரிமை அவருக்கு இல்லை என விக்ரமபாகு கருணாரட்ன கூறியுள்ளார்.
மீனவர் தொடர்பில் பேசுவதற்கு இந்தியா தயார்-
இந்திய மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளை ஒழுங்கு செய்ய தயாராக இருப்பதாக, இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. தமிழ் நாட்டின் காங்கிரஸ் குழு தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையின் அடிப்படையில், இந்த பிரச்சினைகள் குறித்த பேச்சுவார்த்தைளுக்கு உதவியளிக்க மத்திய அரசாங்கம் தயாராக இருக்கின்றது. தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அனுப்பியிருந்த கடிதத்தில், எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் இந்திய, இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளை நடத்த ஏற்பாடு செய்யுமாறு கோரியிருந்தார். இதற்கு இந்திய அரசாங்கம் எந்த வேளையிலும் தயாராக இருப்பதாகவும், டிசம்பருக்கு முன் இந்த பேச்சுவார்த்தை நடத்த தமிழகம் கோரினாலும், அதற்கான ஏற்பாட்டினை செய்வதாகவும் பி.எஸ் ஞானதேசிகள் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையர் பலர் மலேசியாவில் கைது-
விசா நிபந்தனைகளை மீறிச் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் மலேசியாவில் கைதாகியுள்ள இலங்கையர்களுக்கு இலங்கையிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எந்தவிதத்திலும் பொறுப்புக்கூறாது என்று அப்பணியகம் இன்று அறிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் விசாவில் மலேசியாவுக்குச் சென்றுள்ள இலங்கையர்கள் பலர் அங்கு வேலைவாய்ப்புக்களைத் தேடி அழைந்து வந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களில் விடுதலையை தம்மால் உறுதி செய்ய முடியாது என்றும் அதற்காக பணியகம் ஒருபோதும் உதவப்போவதுமில்லை என்றும் பணியகத்தின் பிரதி முகாமையாளர் மங்க ளரந்தெனிய சுட்டிக்காட்டியுள்ளார்.
றாகம சிறையிலிலிருந்து கைதிகள் தப்பியோட்டம்-
கம்பஹா மாவட்டத்தில அமைந்திருக்கும் மஹர சிறைச்சாலையிலிருந்து கைதிகள் மூவர் தப்பியோடியுள்ளனர். நேற்றுமாலை பெய்துகொண்டிருந்த பலத்த மழையின் போதே இம்மூவரும் தப்பியோடியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு தப்பியோடிய கைதிகள் மூவரும் பொலன்னறுவை, மாரவில மற்றும் தங்கொட்டுவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்களைக் கண்டுபிடித்து கைது செய்வதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொலீசார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
அரைவாசி பேர் நேர்மையான அகதிகளே-ஆஸி ஊடகங்கள்-
இலங்கையில் இருந்து படகுகள் மூலம் அவுஸ்திரேலியா செல்கின்றவர்களில் பாதி அளவானவர்கள் நேர்மையான அகதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களத்தின் புதிய ஆய்வினை அடிப்படையாக கொண்டு, அவுஸ்திரேலிய ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன. எனினும் நேர்மையான அகதிகளை கருத்தில் கொள்ளாமலேயே, அவர்களின் வருகை கட்டுப்படுத்துவதற்கு, இலங்கை அரசாங்கத்துக்கு உதவ முன்வந்துள்ளதாகவும், அந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 2 மில்லியன் டொலர்கள் பெறுமதியான இரண்டு கண்காணிப்பு படகுகளை இலங்கைக்கு வழங்குவதாக, அவுஸ்திரேலியாவின் பிரதமர் டொனி எபட் கடந்த வாரம் அறிவித்திருந்தார். எனினும் அவுஸ்திரேலியாவின் குடிவரவு மற்றும் எல்லை பாதுகாப்பு சபையின் புதிய அறிக்கையின்படி, இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு படகுமூலம் சென்ற அகதிகள், இனம், மதம் மற்றும் குறிப்பிட்ட சிலக் குழுக்களின் அங்கத்தவர்கள் என்ற அடிப்படையில், இம்சிக்கப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கை அகதிகளில் 63.9 சதவீதமானர்கள் நேர்மையான அகதிகள் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஒக்டோபரில் இலங்கை அகதிகளின் வருகையை தடுக்க சர்வதேச கொள்கைகளை அவுஸ்திரேலியாவின் தொழிற்கட்சி அமுலாக்கியிருந்தது. இக்காலப்பகுதியில் நாடுகடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான அகதிகள் தொடர்பில் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அவர்களில் 52.1 சதவீதமானவர்கள் நேர்மையான அகதிகள் என்று தெரியவந்துள்ளது.