ஐ.நா விசேட பிரதிநிதி இலங்கைக்கு விஜயம்-

ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதியொருவர் எதிர்வரும் வாரத்தில் இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. உள்ளக இடப்பெயர்வுக்கு உள்ளானவர்களின் மனிதவுரிமைகள் தொடர்பான ஐ.நாவின் விசேட பிரதிநிதி ச்சலோக்கா பெயானியே இங்கு வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலர் கருணாதிலக்க அமுனுகம குறிப்பிட்டுள்ளார். டிசம்பர் 2ஆம் திகதி முதல் 6ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருக்கும் அவர் யுத்தத்தினால் வடக்கில் இடம்பெயர்ந்தவர்களை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மற்றும் ஐ.நா பிரதிநிதி வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றம் அமைச்சர்களையும் அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இடம்பெயர்ந்தோர் முகாம்களில் கண்காணிப்புகளை மேற்கொள்ளவுள்ள அவர், முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் விஜயம் செய்வார் என்று மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

காலியில் கடல் பாதுகாப்பு மாநாடு ஆரம்பம்-

இந்திய கடற்படை தளபதி அட்மிரல் டி.கே.ஜோசி நேற்று இலங்கை வந்துள்ளார். 2013ஆம் ஆண்டுக்கான கடல் பாதுகாப்பு தொடர்பான காலி கலந்துரையாடல் இன்று இடம்பெறுகின்ற நிலையில், அதில் கலந்துகொள்வதற்காகவே அவர் இலங்கைக்கு வந்துள்ளார். இந்திய கடற்படைத் தளபதி, சர்வதேச கடற்படை பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்கின்ற அதேவேளை இலங்கை கடற்படைத் தரப்பினருடன் இருதரப்பு பேச்சவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார். இந்திய கடற்படையின் 21ஆவது தளபதியாக 2012ஆம் ஆண்டு நியமனம் பெற்ற அட்மிரல் தேவேந்திரகுமார் ஜோசி, நீர்மூழ்கிக் கப்பல் அழிப்பு யுத்த நடவடிக்கையில் தேர்ச்சி பெற்றவராவார். அவர் காலி கலந்துரையாடலின்போது, ஆசிய, பசுபிக் வலயத்தில் கடற்படை முன்னுரிமை தொடர்பான இந்தியாவின் அனுபவங்கள் குறித்த விரிவுரையொன்றையும் நிகழ்த்தவுள்ளார். காலி கலந்துரையாடலில் 35 நாடுகளின் உள்ளக, வெளிநாட்டு கடற்படை மற்றும் கடற்றொழில் தொடர்பான நிபுணர்கள் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மாநாட்டை புறக்கணிப்பதால் மனித உரிமையில் முன்னேற்றம் ஏற்படாது-கென்பரா டைம்ஸ்-

பொதுநலவாய நாடுகளின் கொழும்பு மாநாட்டை இந்திய பிரதமர் மன்மோகன்சி;ங் புறக்கணித்தமை காரணமாக இலங்கையின் மனித உரிமைகள் விடயத்தில் எவ்வித முன்னேற்றம் ஏற்படப்போவதில்லை என கென்பரா டைம்ஸ் தெரிவித்துள்ளது கென்பரா டைம்ஸில் தமது கட்டுரையை எழுதியுள்ள அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகமான க்ரோவ்போட்டின் விரிவுரையாளர் ரமேஸ் தாகூர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார் இலங்கை மாநாட்டை புறக்கணித்தமையால் பெற்ற நன்மைகள் குறைவானதே. எனினும் அதற்காக கொடுக்கவேண்டிய விலை அதிகமானது என்றும் தாகூர் கூறியுள்ளார். இலங்கையின் மனித உரிமைகள் விடயமாக மன்மோகன்சிங் இந்த முடிவை எடுக்கவில்லை மாறாக தமிழகத்தின் வாக்குகளை மையமாகக்கொண்டே இம்முடிவை அவர் மேற்கொண்டார் இதனால் இந்தியாவுக்கு பாதிப்புகளே அதிகமாக ஏற்படும். இந்நிலையில் கடந்த 20 வருடக்கால ஆட்சியில் மன்மோகன்சிங் அண்டை நாடுகளில் அதிகாரப்பரவாலக்கம், அல்லது மனித உரிமைகள் மேம்பாடு அல்லது அண்டை நாடுகளுடனான உறவு என்ற விடயங்களில் தோல்வி கண்டுள்ளார் என விரிவுரையாளர் ரமேஸ் தாகூர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வலி.வடக்கில் வீடுகள் மீண்டும் இடித்தழிப்பு-

யாழ்ப்பாணம் வலி வடக்கு பாதுகாப்பு வலயத்தில் நின்று போயிருந்த வீடுகள் இடித்தழிப்பு நடவடிக்கைகள் மீண்டும் நேற்று ஆரம்பமானதாக கூறப்படுகின்றது. கடந்த சில நாட்களாக கமரூனின் விஜயம் மற்றும் இடம்பெயர்ந்த மக்களது போராட்டங்களை அடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடித்தழிப்பு நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் எஸ. சுகிர்தன் தெரிவித்துள்ளார். முன்னதாக இடித்தழிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் அதற்கு எதிராக இடம்பெயர்ந்த மக்கள் போராட்டங்களிற்கு தயாராகியிருந்தனர். எனினும் அதனை குழப்பும் வகையில் ஜனாதிபதி இடித்தழிப்பிற்கு தடை விதித்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும் அதையும் மீறி வலி வடக்கு மக்கள் செய்த உண்ணாவிரதப் போராட்டம் அரசின் பாராமுகத்தால் பயனற்றுப் போனது. இந்நிலையில் நின்று போயிருந்த இடித்தழிப்பு நடவடிக்கைகள் தற்போது மீண்டும் ஆரம்பமாகியுள்ளதாகவும் தற்போது பொதுமக்களது வீடுகளுடன் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாடசாலைகள் மற்றும் இந்து ஆலயங்கள் தேவாலயங்கள் என பலவும் முற்றாக இடித்தழிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பிரதி பொலீஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர இடமாற்றம்-

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் பெற்றுள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக பூஜித ஜயசுந்தர செயற்பட்டிருந்தார். இந்நிலையிலேயே அவர் யாழ்ப்பாணத்திற்கு; இடமாற்றம் பெற்றுள்ளார். இடமாற்றம் பெற்றுச்செல்லும் இவருக்கான விசேட அணிவகுப்பு மரியாதை மட்டக்களப்பு மாகாத்மா காந்தி பூங்கா சதுக்கத்தில் நேற்றையதினம் இடம்பெற்றது. இந்த அணிவகுப்பில் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேவன் சில்வா, உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தாயின் சமாதியை பார்க்கச் சென்றதால் ஜெயபாலன் கைதானார்-வாசுகி-

தனது தாயின் சமாதியைப் பார்க்கப்போனதால்தான் கவிஞர் ஜெயபாலன் இலங்கையில் கைது செய்யப்பட்டதாக தான் நம்புவதாக அவரது மனைவி வாசுகி பிபிசிக்கு கூறியுள்ளார். இது தொடர்பில் ஜெயபாலனின் மனைவி மேலும் தெரிவித்துள்ளதாவது, அவரது கைதுக்காக இலங்கை அரசாங்கம் வேறு காரணங்களைக் கூறினாலும், தனது வீட்டில் உள்ள தனது தாயின் சமாதியைப் பார்க்கப் போனதற்காகவே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். எங்களுடைய காணிக்குள் நாங்கள் போவது என்ன குறை?. எனது கணவர் இலங்கையில் இனவிரோதத்துக்கு குந்தகமாக எதுவும் அங்கு பேசவில்லை என தெரிவித்துள்ளார். இலங்கைக் கவிஞரும், நடிகருமான வா.ஐ.ச ஜெயபாலன் மாங்குளம் பகுதியில் வைத்து நேற்று முன்தினம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஊடக சுதந்திரம் என்ற போர்வையில் புலிகளின் புகழ்பாடுதல் சட்டவிரோத செயல்-

ஊடக சுதந்திரம் என்ற போர்வையில் புலிகளின் புகழ்பாடுதல், பெருமைபோற்றுதல் சட்டவிரோதமானதென தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அவ்வாறு எவரும் நடந்துகொண்டால் சட்ட நடவடிக்கைக்கு முகங்கொடுக்க வேண்டிவரும் என அந்த நிலையம் எச்சரித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் 27ம் திகதி மாவீரர் தினமாகும். இதனை அனுஸ்டிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். புலிகள் அழிக்கப்பட்டுள்ள நிலையில் மாவீரர் தினம் அனுஸ்டிப்பது சட்டவிரோதமான செயல் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.