மாவீரர் நினைவு தினத்தை அனுசரிக்க இலங்கை அரசு தடை  

imagesமாவீரர் தினத்தை அனுசரிக்கக்கூடாது என்று இலங்கை அரசாங்கம் அறிவித்திருக்கிறது. அவ்வாறு அனுசரிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என்று அது கூறியிருக்கிறது. விடுதலைப்புலிகளைக் கொண்டாடுவதோ அல்லது அவர்களை ஊக்குவிப்பதோ தண்டமைனக்குரிய குற்றமாகும் என தேசிய பாதுகாப்புத் தகவல் நிலையம் தெரிவித்திருக்கின்றது. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இ;த்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது. அவ்வாறு மேற்கொள்பவர்கள் நீதிமன்றத்தின் மூலம் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் நவம்பர் மாதம் 26 ஆம் திகதி விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளாகும். நாளை மறுதினம் நவம்பர் மாதம் 27 உயிர் நீத்த விடுதலைப்புலிகளை அவர்களது ஆதரவாளர்கள் நினைவு கூர்கின்ற மாவீரர் நாளாகும்.

இந்தத் தினங்கள் இரண்டையும் விடுதலைப்புலிகள் வெகு விமரிசையாகக் அனுசரித்துவந்துள்ளனர். பொதுமக்களும் இந்தத் தினங்களில் தமது உயிர் நீத்த (விடுதலைப்புலி உறுப்பினர்கள்) இறந்த பிள்ளைகள் மற்றும் உறவினர்களை நினைவு கூர்ந்து வந்துள்ளனர். விடுதலைப்புலிகள் யுத்தத்தின் மூலம் முற்றாக அழிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்த விடுதலைப்புலிகளை நினைவு கூரக் கூடாது என அரசாங்கமும், இராணுவத்தினரும் அறிவித்து வந்துள்ளனர். எனினும், உயிரிழந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களை நினைவு கூர்வது ஒரு ஜனநாயக நாட்டில் மக்களுக்குள்ள உரிமையாகும். இதனைத் தடுத்து நிறுத்துவது மனித உரிமை மீறலாகும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன் மற்றும் அரியநேந்திரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையிலேயே மாவிரர் தினத்தை அனுசரிக்கக் கூடாது என வலியுறுத்தும் அறிக்கையை தேசிய பாதுகாப்புக்கன ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இந்த அறிவித்தலை யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க மற்றும் பொலிஸ் பேச்சாளர் ஆகியோரும் வெளியிட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாவீரர் தினத்தையொட்டி, யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் உட்பட்ட பகுதிகளில் படையினர் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது