வடக்கிலிருந்து 90ஆயிரம் வாக்காளர்கள் இணைப்பு-தேர்தல் ஆணையாளர்-

வடமாகாணத்திலிருந்து 90,000 வாக்காளர்கள் 2013ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் இடாப்பில் சேர்க்கப்படவுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் நேற்று அறிவித்துள்ளது. 2012ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் இவ்வருடம் டிசம்பரில் பூர்த்தியாகிவிடுமென தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 2012இல் புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் 10 சதவீதமானேர் வடமாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். 2013ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலும் டிசம்பர் 23இல் தயாராகிவிடும், இவ்வருட வாக்காளர் பட்டியலில் 1.2 மில்லியன் வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டதுடன், 71,7512 வாக்காளர்கள் அகற்றப்பட்டுள்ளனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். .

கரவெட்டி பிரதேச சபை தவிசாளரின் வீட்டின் மீது தாக்குதல்-

யாழ். கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் சு.வியாகேசுவின் வீடு இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டமை தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்றையதினம் அதிகாலை 2மணியளவில் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி உடுப்பிட்டியில் அமைந்துள்ள தனது வீடே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளதாக தவிசாளர் தெரிவித்துள்ளார். வானொன்றில் வந்த இனந்தெரியாத நபர்கள் மேற்படி பிரதேச சபை உறுப்பினரின் வீட்டுக்கு தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இந்தத் தாக்குதலின் காரணமாக வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள், கதவுகள் மற்றும் வீட்டில் தரித்து நின்றிருந்த வாகனம் உள்ளிட்டவை சேதமாக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துஐற பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பயணிகள் காசோலை நிறுத்தம்-

பயணிகள் காசோலை வழங்கும் நடவடிக்கை உடனுக்கு அமுல்வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளது என இலங்கை வங்கிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மத்திய வங்கியில் நடைபெற்ற கூட்டத்தில் பயணிகள் காசோலைகளை வழங்குவதை நிறுத்திவிட சகல வங்கிகளும் உடன்பட்டதாக இலங்கை வங்கிகள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார். இன்று பயணிகள் காசோலைகளை பயன்படுத்துவதற்கான விருப்பம் வெகுவாக குறைந்துள்ளது. அநேகமான பயணிகள் கடனட்டைகள், செலவு அட்டைகள் அல்லது பணத்தை எடுத்து செல்லவே விரும்புகின்றனர். இந்த தீர்மானம் பற்றி பொதுமக்களுக்கு அறிவிக்கும் பொறுப்பை மத்திய வங்கி ஏற்றுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியா வருமாறு வடக்கு முதல்வருக்கு அழைப்பு-

இலங்கையின் நிலைமைகள் பற்றி பேசுவதற்காக பிரித்தானியாவிற்கு வருமாறு வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன. பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோனிற்கும் வட மாகாண முதலமைச்சரிற்கும் இடையிலான சந்தித்திப்பின்போது இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது. இந்த அழைப்பிற்கு முன்னரே இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், முதலமைச்சரை புதுடில்லி வருமாறு அழைத்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மதவாச்சி குளக்கரையிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு-

மதவாச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் காணாமல் போன பெண் ஒருவர் குளக்கரையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் தங்கையால் இந்த சம்பவம் குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மதவாச்சி, பூனாவ பிரதேசத்தைச் சேர்ந்த 33வயதான சகுந்தலா பத்மினி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 24ஆம் திகதி தொடக்கம் குறித்த பெண் காணாமற்போன நிலையில் நேற்றுமாலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக அநுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

உப்பளம் அமைக்கும் முயற்சியை நிறுத்துமாறு கோரிக்கை-

மன்னார், விடத்தல்தீவு கிழக்கு கிராம சேவையாளர் பிரிவுக்குற்பட்ட நாயாற்று பகுதியில் வெளியூர் வாசிகள் அனுமதியின்றி உப்பளம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக விடத்தல்தீவு கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் பொ.சிவேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விடத்தல்தீவு கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்கம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளது. குறித்த கடிதத்தில், விடத்தல்தீவு கிழக்கு கிராம சேவையாளர் பிரிவுக்குற்பட்ட ´நாயாற்று´ பகுதியில் உள்ள 50 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட உப்புத்தரவையில் சில வெளியூர்வாசிகள் கிராம அலுவலகரின் அனுமதியின்றி உப்பளம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். Read more