பிரதேசசபை உறுப்பினர்களின் வீடுகள்மீது தாக்குதல்-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின்; சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் சிறீஸ்கந்தராஜா சிறீரஞ்சன் மற்றும் கூட்டமைப்பின் வலி. மேற்கு பிரதேச சபைத் தலைவர் நாகரஞ்சினி ஐங்கரன் ஆகியோரின் வீடுகளின்மீது இன்று அதிகாலை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. மீசாலையில் அமைந்துள்ள சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் சிறீஸ்கந்தராஜா சிறீரஞ்சன் வீட்டின்மீது இன்று அதிகாலை 2மணியளவில் துப்பாக்கி, வாள், கத்திகளுடன் மோட்டார் சைக்கிள்களில் சென்ற குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளதுடன், வீட்டிலிருந்த சகல பொருட்களையும் அடித்து நாசமாக்கியுள்ளனர். அத்துடன் வீட்டிலிருந்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்த முயற்சித்த நிலையில் வீட்டிலிருந்துவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இத் தாக்குதல் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை வலி. மேற்கு பிரதேசசபைத் தலைவர் நாகரஞ்சினி ஐங்கரனின வீட்டின்மீது இன்று அதிகாலை 1.15 மணியளவில் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் சந்தேகத்தின் பேரில் இரு மாணவர்கள் கைது-
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியில் புலிகளுக்கு ஆதரவாக பதாதைகளை கட்டிய சந்தேகத்தின் பேரில் இரு மாணவர்களை படையினர் கைதுசெய்து களுவாஞ்சிகுடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். நேற்று இரவு 9.30 மணியளவில் களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் வைத்து இந்த இரு மாணவர்களும் படையினரால் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இன்றுகாலை தம்மிடம் ஒப்படைக்கப்பட்டதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் பட்டிருப்பு தேசிய பாடசாலையில் உயர்தரம் பயிலும் மோகன் டினேஸ்காந்த், சாதாரண தரம் பயிலும் கு.விதுசன் எனவும் களுவாஞ்க்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீதியில் கட்டியிருந்த பதாதைகளை தாம் வாசித்துக் கொண்டிருக்கும்போதே படையினரால் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸாரிடம் வழங்கிய முறைப்பாட்டில் மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த மாணவர்களை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொகா கோலா உற்பத்தி செய்யத் நீதிமன்றம் தடை-
இலங்கையில் கொகா கோலா உற்பத்தி செய்வதற்கும், களஞ்சியப்படுத்தி வைப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் மூன்று மாதகால தடையை அநுராதபுரம் மாவட்டம் கெபத்திகொல்லாவ நீதிமன்றம் விதித்துள்ளது. கொகா கோலா நிறுவனத்தின் மூலமாக உற்பத்தி திகதி, காலாவதி திகதி, பொதி இலக்கம் போன்றன குறிப்பிடப்படாமல் கொகா கோலா போத்தல்கள் விற்பனைக்காக விநியோகிக்கப்பட்டிருந்தமைக்காக இந்த தடை உத்தரவு குறித்த நீதிமன்றத்தின் மூலம் விதிக்கப்பட்டுள்ளது. 1980ஆம் ஆண்டின் உணவு சட்டத்தின் 26ஆம் இலக்க, 18ஆம் சரத்தின் (2)ஆம் பிரிவுக்கு அமைவாக, மேற்குறிப்பிட்ட அனைத்து விபரங்களும் உணவு மற்றும் பான உற்பத்தி வகைகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். மேலும் நிறுவனத்துக்கு 15000 ரூபா நட்டஈட்டை செலுத்துமாறும் நீதிமன்றம் பணித்துள்ளது. இந்த தீர்ப்பு குறித்து மேம்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்வதற்கு கம்பனி தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.
அவுஸ்திரேலியாவில் புலிகள்மீதான தடை நீடிப்பு-
புலிகள் அமைப்பு மீதான தடையை அவுஸ்திரேலியா மேலும் 3 வருடங்களுக்கு நீடித்துள்ளது. இந்த அறிவிப்பை அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப் அறிவித்துள்ளார். பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நிதி திரட்டுவதை தடுக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைச் சட்டத்தின் கீழ் இந்த தடை நீடிக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். புலிகள் அமைப்பு மாத்திரமன்றி அல் சஹாப் மற்றும் ஐ.ஆர்.ஏ போன்ற பயங்கரவாத அமைப்புக்கள் மீதான தடையையும் அவுஸ்திரேலியா நீடித்துள்ளது. இதன்படி புலிகள் அமைப்பிற்கு ஆதரவான செயற்பாடுகளுக்கு அவுஸ்திரேலியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட 32 நாடுகள் புலிகள் அமைப்பை தடைசெய்துள்ளன.
தொலைபேசியில் மிரட்டி கப்பம் பெற்ற இரு பெண்கள் கைது-
தொலைபேசியில் மிரட்டி கப்பமாக பணம் பறித்து வந்த இரு பெண்களை கொழும்பு, மிரிஹான விசேட குறிறத்தடுப்புப் பிரிவு பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். ஹோமாகம மற்றும் பத்தரமுல்ல ஆகிய பிரதேசங்களில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் வைத்தியர் ஒருவரிடமும் பேராசிரியர் ஒருவரின் மனைவியிடமும் தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்து பணத்தினை தமது வங்கிக் கணக்குகளினூடாக பெற்றுக் கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மிரிஹான விஷேட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோகண குறிப்பிட்டுள்ளார்.