வட மாகாண அமைச்சர், உறுப்பினர்கள் வீடுகள்மீது தாக்குதல், முதலமைச்சரின் உருவப் பதாகை சேதம்-
வட மாகாண முதலமைச்சர் சி.வி.வீக்கினேஸ்வரனின் உருவப் பதாகை கிழித்து நாசம் செய்யப்பட்டதுடன் அதற்கு தீயும் மூட்டப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபை தேர்தலின்போது சி.வி.விக்கினேஸ்வரனின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக சிவகுருநாதர் வீதியில் உள்ள உதயன் விருந்தினர் விடுதி பயன்படுத்தப்பட்டு வந்தது. அதற்காக அங்கு அமைக்கப்பட்டிருந்த முதலமைச்சரின் உருவப்பதாகை நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் கிழித்து நாசம் செய்யப்பட்டதுடன் அதற்கு தீயும் மூட்டப்பட்டுள்ளது. இதேவேளை வடமாகாண விவசாயத்துறை அமைச்சர் ஐங்கரநேசனின் இல்லத்தின்மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன்போது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளன. அத்துடன் வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் அலுவலகம் முன்பாக மலர்வலையம் வைக்கப்பட்டுள்ளதுடன், ஆர்னல்டின் வீடென எண்ணி, வட மாகாணசபை உறுப்பினர் ஆர்னல்டின் சகோதரியின் வீட்டின்மீதும் கல்வீச்சு தாக்குல் நடத்தப்பட்டுள்ளது.
காணாமற் போனமை தொடர்பில் 5ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு-
வடக்கு, கிழக்கில் காணாமற்போன 5ஆயிரம் பேர் தொடர்பாக இதுவரை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, காணாமற்போனோர் தொடர்பான விபரங்களைக் கண்டறிய நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த ஆணைக்குழுவின் தலைவரான மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம இது குறித்து ஊடகங்களிடம் தகவல் வெளியிடுகையில், ‘தற்போது முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகிறோம். முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்ளும் நடைமுறை முடிவுக்கு வந்த பின்னர், நிபுணர்கள் வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு, முறைப்பாடுகள் குறித்து தனித்தனியாக விசாரணை நடத்தப்படும். நாம் சுதந்திரமாகவே விசாரணையை நடத்துவோம். காணாமற் போதலுக்குப் பொறுப்பானவர்கள் நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொள்ள நேரிடும். அவர்களுக்கு எதிராக, சட்டமா அதிபர் திணைக்களம் குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் முன்வைக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
பாடசாலை உணவு நிகழ்ச்சி திட்டத்திற்கு ஜப்பான் உதவி-
உலக உணவு திட்டத்தின்கீழ் வட மாகாண பாடசாலை உணவு நிகழ்ச்சி திட்டத்திற்கு ஜப்பான் உதவி வழங்கவுள்ளது. வட மாகாணத்தில் செயற்படுத்தப்படும் இந்த உணவு நிகழ்ச்சி திட்டத்துக்கு உலக உணவு திட்டத்தின் ஊடாக இலங்கை அரசாங்கத்துக்கு 282 மில்லியன் ரூபா பெறுமதியான உணவு நன்கொடை உதவியை வழங்க ஜப்பானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த உணவு உதவி வழங்கப்படுவதை பொருளாதார அபிவிருத்தி அமைச்சு கண்காணிக்கவுள்ளது. வடக்கில் மீள்குடியேறிய சிறுவர்களிடையே மந்த போஷாக்கு காணப்படுவதாக விசனம் தெரிவிக்கப்பட்டது. இவர்களுக்கான போஷாக்கு திட்டத்துக்கு 2012ஆம் ஆண்டு ஜப்பான் 180 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கியிருந்தது.
மங்களராமய விகாராதிபதிக்கு பிணை-
மட்டக்களப்பு, பட்டிப்பளை பிரதேச செயலகத்தினுள் நேற்று புகுந்து வன்முறையில் ஈடுபட்டார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் 50 ஆயிரம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு தேரர் இன்றுக்காலை சென்றிருந்த வேளையிலேயே பொலிஸார் அவரை களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதன்போதே நீதவான் எஸ்.எம்.ரஹ்பீக் மேற்கண்டவாறு தீர்ப்பளித்துள்ளார். பட்டிப்பளை பிரதேச செயலகத்தினுள் அரச சொத்துக்களான பெக்ஸ் மற்றும் தொலைபேசியை சேதப்படுத்தினார் ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளே அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் பொலிஸாரினால் முன்வைக்கப்பட்டது. தேரருக்கு பிணை வழங்கிய நீதவான் வழக்கை எதிர்வரும் 19ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார். இதேவேளை மேற்படி பௌத்த தேரரின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகங்களிலும் பகிஸ்கரிப்பும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது. பட்டிப்பளை பிரதேச செயலகம் உள்ளிட்ட 14 பிரதேச செயலகங்களிலும் பகல் 12.05க்கு பணிப்பகிஸ்கரிப்பும் ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் பட்டிப்பளை பிரதேச செயலகத்தினுள் நேற்று புகுந்து வன்முறையில் ஈடுபட்டமைக்கும், பிரதேச செயலரை தகாத வார்த்தைகளினால் ஏசியமை, தவறான தகவல்களை வெளியிட்டமை உள்ளிட்ட செயற்பாடுகளை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதேநேரம், நேற்றைய தினம் பகல் முதல் பட்டிப்பளை பிரதேச செயலகம் இயங்கவில்லை.
கிழக்கு பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்-
கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதியை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு சிலர் முயற்சி செய்வதாகவும், அதனை தடுத்து நிறுத்தி பல்கலைகழகத்தில் கடமையாற்றும் தகமையற்ற கல்விசார் ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்குமாறு கோரியும் மாணவர்களினால் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. மட்டக்களப்பு அரசடியில் உள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இன்று நண்பகல் 12.00மணி தொடக்கம் ஒரு மணிவரை நடைபெற்றது. கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சகல சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் எங்கள் எதிர்காலம் பீடாதிபதிகளின் கைகளில், பீடைகளை ஒழிப்போம் பீடத்தினைக் காப்போம், தொல்லை கொடுப்பவனே தொலைந்துபோ, போன்ற பதாகைகளையும் ஏந்தியிருந்தனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்த மாணவர்கள், இது அரசாங்கத்துக்கோ, பல்கலைக்கழகத்துக்கோ எதிரான ஆர்ப்பாட்டம் அல்ல. கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தில் தேவைக்கு அதிகமாக சில தகமையற்ற கல்விசார் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் பல பிரச்சினைகளை பல்கலைக்கழகத்துக்குள் ஏற்படுத்த முனைகின்றனர். குறிப்பாக சிறப்பாக செயற்பட்டுவரும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதியையும் இங்கு சிறந்த முறையில் கடமையாற்றும் விரிவுரையாளர்களையும் இங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி நியனம் தொடர்பிலான தேர்வில் பிழையுள்ளதாகவும் மீள்தேர்வு செய்யுமாறும் சிலர் வைத்திய கல்வி ஆய்வுத் திணைக்களத்திடம் முறையிட்டுள்ளனர். இது சிறந்த முறையில் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் நடவடிக்கைகளை ஸ்தம்பிக்க செய்யும் நடவடிக்கையாகும். கடந்த காலத்தைவிட சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடம் சிறந்த முறையில் இயங்கி வருகின்றது. இதனை இல்லாமல் செய்யும் நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜாவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். இது தொடர்பில் சிறந்த நடவடிக்கைகள் எடுப்பார்கள் என எதிர்பார்க்கின்றோம். எனவே சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதியை இடமாற்றும் செயலை உடன் தடுத்து நிறுத்தி பீடத்தில் உள்ள தகுதியற்ற கல்விசார் ஊழியர்களை நீக்கவேண்டும். அவ்வாறு நடைபெறாவிட்டால் தொடர்ச்சியான பகிஸ்கரிப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டங்களை மேற்கொள்வோம் என தெரிவித்துள்ளனர்.