உயர் பாதுகாப்பு வலயத்திற்கு செல்ல முதலமைச்சருக்கு அனுமதி மறுப்பு-

யாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்கு நேற்றுமாலை சென்ற வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் இராணுவத்தினரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். வலிகாமம் வடக்கிலுள்ள பொதுமக்களின் காணிகள் படைத்தரப்பால் அபகரிக்கப்பட்டு அங்குள்ள வீடுகள், கோயில்கள் மற்றும் பாடசாலைகள் உடைக்கப்படுகின்றன. இந்த நிலவரங்களை பார்வையிடுவதற்கு அப்பகுதிக்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் நேற்று சென்றிருந்தார். எனினும் அவரை உள்ளே செல்ல அனுமதிக்காமல் படைத்தரப்பு அவரை திருப்பி அனுப்பியுள்ளனர். முதலமைச்சரை மாவிட்டபுரம் பகுதியில் வழிமறித்த படையினர், உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் செல்வது என்றால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற வேண்டும் எனவும், பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி உள்ளே செல்ல அனுமதிக்கப்பட மாட்டாதெனவும் கூறியுள்ளனர்.

நிலையான அரசியல் தீர்வொன்று ஏற்படுத்தப்பட வேண்டும்-இரா.சம்பந்தன் எம்.பி-

இலங்கையில் நிலையான அரசியல் தீர்வு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை பல நாடுகள் தடை செய்திருந்தன. எனினும் தற்போது அந்த நாடுகள், இலங்கையில் நிலையான அரசியல் தீர்வு ஒன்றையும், தேசிய ஒற்றுமையையும் ஏற்படுத்தும் அவசியம் குறித்து வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் விரைவாக தமிழ் மக்கள் சுயமரியாதையுடனும், உரிமைகளுடனும் வாழக்கூடிய வகையிலான அரசியல் தீர்வு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னாள் இராணுவ அதிகாரிகள் இருவர் ஆளுநர்களாக இருப்பதால், சாதாரண அரச சேவையாளர்களும், பொது மக்களும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதேநேரம் தற்போது தமிழ் மக்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகள் எப்போது தீரும் என்பதே தற்போதைய கேள்வியாக இருப்பதாகவும் சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் யுத்த இழப்பு கணக்கெடுப்பை நம்ப முடியாது-அவுஸ்திரேலிய காங்கிரஸ்-

இலங்கை யுத்தத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் இழப்புக்கள் குறித்து இலங்கை அரசு மேற்கொண்டுள்ள கணக்கெடுப்பு தொடர்பில் அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் சந்தேகம் வெளியிட்டுள்ளது. இலங்கை அரசு மற்றும் அரச அதிகாரிகள் நேர்மையான முறையில் இந்த கணக்கெடுப்பை மேற்கொள்ள மாட்டர் என அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸின் தேசிய செய்தித் தொடர்பாளர் சாம் பாரி தெரிவித்துள்ளார். சுயாதீன அமைப்பொன்றின் மூலமாக இந்த கணக்கெடுப்பு நடவடிக்கை கண்காணிக்கப்படுகின்ற வரையில் இதனை நம்ப முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடெங்கிலும் 30 ஆண்டுகால யுத்தத்தினால் மரணித்தவர்கள், காணாமல் போனவர்கள், காயமடைந்தவர்கள், ஊனமுற்றவர்களின் விபரங்களையும், சொத்துக்களுக்கு ஏற்பட்ட அழிவுகள் பற்றிய விபரங்களையும் அறிவதற்கு இதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆறு மாத காலப்பகுதியில் 14,000 உத்தியோகத்தர்களின் உதவியோடு 14,000 கிராமங்களில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் இளம் குடும்பஸ்தர் சந்தேகத்தின்பேரில் கைது-

மன்னாரில் இளம் குடும்பஸ்தர் ஒருவரை முன்னாள் புலி உறுப்பினராக இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டிருப்பதாக அவரது மனைவி மன்னார் பிரஜைகள் குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த முறைப்பாடு நேற்று முன்தினம் செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் இம்மானுவேல் செபமாலை அவர்கள் தெரிவித்துள்ளார். மன்னார் முருங்கன் வாழ்க்கைப்பெற்றான் கண்டல் கிராமத்தைச் சேர்ந்த இரு குழந்தைகளின் தந்தையான திருச்செல்வம் கிரிஸ்துராசா (வயது-31) விசாரணைக்காக கடந்த 24ஆம் திகதி முருங்கன் பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் 25ஆம் திகதி முருங்கன் பொலிஸ் நிலையத்திற்கு சென்றபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் அவர் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், இக்கைதினை உறுதிப்படுத்தும் சிட்டை ஒன்றும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவரின் மனைவி தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் இம்மானுவேல் செபமாலை அவர்கள் மேலும் கூறியுள்ளார்.

வீசா இன்றி தங்கியிருப்பவர்களை கைது செய்ய நடவடிக்கை-

வீசா இன்றி இலங்கையில் தங்கியிருப்பவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார். இதன்படி குடிவரவு குடியகல்வு திணைக்கள புலனாய்வுப் பிரிவினர் இந்த தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர் அதில் வீசா இன்றி இன்னும் தங்கியிருக்கும் ஆயிரம் பேர் வரையில் கைது செய்யப்படுவர் என்றும் தெரிவித்துள்ளார்.. வீசா காலம் முடிவடைந்தும் பல ஆண்டுகள் இவ்வாறு நாட்டில் தங்கியிருக்கின்றனர். இவ்வாறு நாட்டுக்குள் பிரவேசித்த சிலர் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் சிலர் திருமணம் செய்து கொண்டுள்ளனர். மேலும் சிலரைக் காணவில்லை. இந்தியா, ரஸ்யா, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு வீசா காலம் முடிவடைந்து நாட்டில் தங்கியுள்ளனர். இவர்களை கைது செய்து நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா அமைப்பின் தெற்காசிய தூதராக சச்சின் நியமனம்-

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற சச்சின் டெண்டுல்கர், ஐ.நா அமைப்பின் தெற்காசிய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர், சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் ஐக்கிய நாடுகளின் சபையின் தெற்காசிய பிரிவின் தூதராக, இரண்டு ஆண்டுகளுக்கு நியமனம் பெற்றுள்ளார். இது குறித்து சச்சின் டெண்டுல்கர் கூறுகையில், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் எனது இரண்டாவது இன்னிங்சை சிறப்பாக தொடங்க உதவிய யூனிசெப் அமைப்புக்கு நன்றி. இந்த தூதர் பணி எனக்கு மிகவும் முக்கியமானது, என்னால் முடிந்தளவுக்கு சிறப்பாக செயல்பட உள்ளேன். உலகின் பெரும்பாலான சிறுவர்கள் போதிய சுகாதார வசதிகள் இல்லாமல் உள்ளனர். இதனால் ஏற்படும் நோய் பாதிப்பு காரணமாக, தினமும் 1600 சிறுவர்கள் மரணம் அடைகின்றனர் என்ற செய்தி என்னை மிகவும் பாதித்தது. எனவே இவர்களுடன் இணைந்து சுகாதாரத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்புகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.

அரசின் கணக்கெடுப்பு குறித்து கூட்டமைப்பு அவதானிப்பு-

இலங்கையில் 1982முதல் 2009வரை உள்நாட்டுப் போர் மற்றும் மோதல்களில் இறந்தவர்கள், மற்றும் இழந்த உடமைகள் குறித்த நாடாளாவிய கணக்கெடுப்பு ஒன்றை நடத்த இலங்கை அரசு முடிவு செய்திருப்பது பற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது கருத்தேதும் தெரிவிக்க முடியாது என கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்த கணக்கெடுப்பு எவ்வாறு நடக்கும், இதன் செயல்பாடுகள் எப்படி இருக்கும், ஏற்பட்ட இழப்புகளை உண்மையாக கணக்கெடுக்கும் வகையில் இருக்குமா அல்லது மூடி மறைக்கும் முயற்சியாக இருக்குமா என்பதையெல்லாம் பார்த்துத்தான் ஒரு கருத்தைத் தெரிவிக்க இயலும் என்றும் அவர் கூறியுள்ளார். போரின்போது வன்னியில் சிக்கியிருந்த சிவிலியன்களின் எண்ணிக்கையை அரசு முதலில் மிகவும் குறைத்தே காட்டிவந்தது, சுமார் 30,000 பேர்தான் அங்கே சிக்கியிருக்கிறார்கள் என்றே கூறிவந்தது. ஆனால் போரின் முடிவில் அப்பகுதியிலிருந்து சுமார் 3 லட்சம் பேர்வரை வெளியே வந்தார்கள். போரில் சிவிலியன்கள் இருந்த இடங்கள் ஷெல் தாக்குதலுக்கு உள்ளாகின, வைத்தியசாலைகள் கூட தாக்குதலுக்கு உள்ளாகின என்றெல்லாம் கூறப்படுகையில், போரில் இறந்த சிவிலியன்களின் எண்ணிக்கை பெரிதாகத்தான் இருக்கும், இதை ஐ.நா மன்ற தலைமைச் செயலருக்கு ஆலோசனை வழங்க அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவே சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, இலங்கை அரசு தொடங்கியிருக்கும் இந்த முயற்சியை இப்போது வரவேற்பது என்ற பேச்சுக்கே இடமில்லை, அந்த முயற்சியை நாங்கள் அவதானிப்போம் என்று பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.