பொது வேட்பாளராக சோபித்த தேரர்-

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மாதுலவெல சோபித்த தேரரை தாம் ஏற்றுக் கொள்வதாக ஜே.வி.பி (மக்கள் விடுதுலை முன்னணி) தெரிவித்துள்ளது. ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த இதனைக் கூறியுள்ளார். எவ்வாறாயினும் இது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவகுழுத் தலைவர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புச் செயலர் இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு-

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்துக்கும் இடையில் புதுடில்லியில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாகவும் அதில் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.

இலங்கைக் கடற்படைக்கு இந்தியப் பயிற்சி-

இலங்கை கடற்படையினருக்கு பயிற்சி வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது. த ஹிந்து பத்திரிகையில் இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்திய கடற்படை தளபதி எட்மிரல் டீ.கே.ஜோசி, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் மேற்கொண்ட சந்திப்பின்போது இது குறித்து இணக்கம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்து சமுத்திரத்தின் இலங்கை மற்றும் இந்திய கடல் எல்லைகளின் பாதுகாப்பு தொடர்பில் இந்த சந்திப்பின் போது முக்கியவத்துவம் வழங்கி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக த ஹிந்து தெரிவித்துள்ளது. இதற்கிடையில் இந்த தகவலை நியு டெல்கியில் உள்ள இந்த கடற்படை தலைமையகம் உறுதி செய்துள்ளது.

பொருளாதார தடையிலிருந்து இலங்கைக்கு விதிவிலக்கு-

ஈரானுக்கு விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடையில் இருந்து, இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு விதிவிலக்கை அமெரிக்கா நீடித்துள்ளது. அமெரிக்காவின் ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் அணுவிருத்தி செயற்பாடுகளின் காரணமாக, அமெரிக்கா அந்நாட்டுக்கு பொருளாதார தடையை விதித்திருந்தது. இந்நிலையில் ஈரானில் இருந்து மசகு எண்ணெயை இறக்குமதி செய்யாத நாடுகளுக்கு, அமெரிக்கா விதிவிலக்களிக்கிறது. இதன்படி, இலங்கை, சிங்கபூர், மலேசியா சீனா, இந்தியா, தென்கொரியா, துருக்கி மற்றும் தாய்வான் ஆகிய நாடுகளுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்த விதிவிலக்கின்படி, ஈரானில் இருந்து எண்ணெய் கொள்வனவு செய்யும் நாடுகளில் உள்ள வங்கிகள், அமெரிக்கா நிதி கட்டமைப்பின் துண்டிப்புகளுக்கு எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு உட்படாது என்று தெரிவிக்கப்படுகின்றது.

புலிகளின் செயற்பாட்டாளரை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தல்-

தமிழ்நாட்டில் தலைமறைவாக வாழ்கிற புலிகள் இயக்க செயற்பாட்டாளர் ஒருவரை கைது செய்யும் நடவடிக்கைகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா மேற்கொள்ள வேண்டும் என ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசுவாமி வலியுறுத்தியுள்ளார். கத்தோலிக்க பாதிரியாரான கெஸ்பர்ராஜ் அவர்கள் புலிகள் இயக்கத்துக்கு ஆயுதங்களை விநியோகித்ததாக கூறி, அமெரிக்காவின் எப்.பீ.ஐ. புலனாய்வு தரப்பினர் நிவ்யோர்க் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் அவர் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருப்பதுடன், அவருக்கு எதிராக சர்வதேச பிடிவிறாந்தும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் தமிழகத்தில் பதுங்கியிருப்பதாகவும், அண்மையில் இந்தியாவின் என்.டீ.டி.வி தொலைகாட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்றிருந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசிடம் கோரப்பட்டுள்ள நிலையில், தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுப்பிரமணியசுவாமி வலியுறுத்தியுள்ளார்.

பண்டாராநாயக்க சர்வதேச ஞபாகார்த்த மாநாட்டு மண்டபத்தில் தீ-

கொழும்பு பண்டாராநாயக்க ஞபாகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திலுள்ள கட்டடமொன்றில் பரவிய தீ முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த தீ விபத்து இன்று முற்பகல் 11.15 அளவில் இடம்பெற்றது. தீயைக் கட்டுப்படுத்துவதற்காக 10 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டதாக தீயணைப்பு சேவைப் பிரிவினர் குறிப்பிடுகின்றனர். புனரமைப்பு நடவடிக்கைகளின் பொருட்டு மாநாட்டு மண்டபம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், நிகழ்ச்சிகளுக்காக பயன்படுத்தப்பட்ட மண்டபத்திலேயே தீ பரவியுள்ளது. தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. அண்மையில் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு நடைபெற்றபோது, ஊடக மத்திய நிலையமாக இயங்கிய கட்டடமே தீயினால் சேதமடைந்துள்ளது. இதேவேளை, இந்த தீ விபத்திற்கான காரணத்தை கண்டறியும் பொருட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன கூறியுள்ளார்.

புதிய வெளிநாட்டுத் தூதுவர்கள் நியமனக் கடிதங்கள் கையளிப்பு-

இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் மற்றும் தாய்லாந்து நாடுகளின் புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் தமது நியமனப் பத்திரங்களை கையளித்துள்ளனர். நியமனப் பத்திரங்களை கையளிக்கும் உத்தியோகப்பூர்வ நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கான தாய்லாந்தின் புதிய தூதுவரான நொபொன் அச்சரியாவனிச் மற்றும் ஆப்கானிஸ்தானின் புதிய தூதவரான அசிஸூடின் அஹமத்சதா ஆகியோரின் நியமனப் பத்திரங்களை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.