Header image alt text

பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழியில் முறைப்பாட்டு வசதி-

வடக்கு கிழக்கு உட்பட அனைத்து மாவட்டங்களிலும் பொலிஸ் நிலையங்களில் பொதுமக்கள் தமிழ் மொழியில் பதிவுசெய்ய முடியும். இதனை ஆட்சேபிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் ரி.ஆனந்தராசா தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட சிவில் அமைப்புக்களுக்கும் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்றுமுன்தினம் யாழில் இடம்பெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த ஆணையாளர் ஆனந்தராசா, பொலிஸ் நிலையங்களில் தற்போது தமிழிலும் சிங்களத்திலும் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதனை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கடுமையாகக் கண்காணித்து வருகின்றனர். பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை எழுத்தில் கொண்டுசென்று கொடுக்கும்போது அதனை அவர்கள் தமது முறைப்பாட்டுப் புத்தகத்தில் பதிந்து நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். ஆனால் அவர்கள் விசாரணை செய்யும் வேளையில் அவர்கள் தமது கைகளினாலேயே பதிவுகள் மேற்கொள்வார்கள். நாம் அதனை உரியமுறையில் தெரிந்து கொண்டு அதில் கையயாப்பம் இடவேண்டும் என்று கூறியுள்ளார்.

உள்ளக விசாரணைக்கு பிரிட்டன் வலியுறுத்தல்-

இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரிய உள்ளக விசாரணைகளை நடத்தவில்லையெனில் சர்வதேச விசாரணைக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என பிரித்தானிய மீண்டும் வலியுறுத்தியுள்ளது. பிரித்தானியாவின் பொதுநலவாய அலுவலகத்தின் சிரேஸ்ட அமைச்சர் பரோனெஸ் வர்ஸி பிரிட்டிஷ் பாராளுமன்ற பிரபுக்கள் சபையில் தெரிவித்துள்ளார். மேலும் பொதுநலவாய மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் பங்கேற்றமை சரியான தீர்மானமே என்றும் பரோனெஸ் குறிப்பிட்டுள்ளார். டேவிட் கமரூன் இலங்கைக்கு சென்றதன் மூலம் அந்த நாட்டின் விடயங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரமுடிந்தது. அத்துடன் 1948ஆம் ஆண்டுக்கு பின்னர் வெளிநாட்டு தலைவர் ஒருவர் இலங்கையின் வடக்கிற்கு விஜயம் செய்த முதல் சந்தர்ப்பமாக அது அமைந்தது. பிரதமரின் தீர்மானம் காரணமாகவே ஊடகவியலாளர்களுக்கு அங்கு சென்று விடயங்களை வெளிப்படுத்த முடிந்ததுடன் காணாமல்போன மற்றும் இறந்துப்போன மக்களின் விடயங்களை சர்வதேசத்துக்கும் கொண்டு செல்லமுடிந்தது என்; சிரேஸ்ட அமைச்சர் பரோனெஸ் வர்ஷி சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தக் குற்றங்களை முன்வைக்கும் உரிமை பிரித்தானியாவுக்கு இல்லை-

இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றங்களை முன்வைக்கும் உரிமை பிரித்தானியாவுக்கு இல்லை என புதிய சமசமாஜ கட்சியின் பிரதான செயலாளர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன், இலங்கையின் யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தமை தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரன் பல மனித உரிமை மீறல்களை மேற்கொண்டிருந்தார். குறிப்பாக இங்கிலாந்தின் கல்விக்கான நலன் திட்டத்தை ரத்து செய்துள்ளார். அதேபோன்று லண்டனில் இடம்பெற்ற கழவரத்துக்கு அவரே பொறுப்பாளியாவார். இந்த சூழ்நிலையில் இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் உரிமை அவருக்கு இல்லை என விக்ரமபாகு கருணாரட்ன கூறியுள்ளார்.

மீனவர் தொடர்பில் பேசுவதற்கு இந்தியா தயார்-

இந்திய மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளை ஒழுங்கு செய்ய தயாராக இருப்பதாக, இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. தமிழ் நாட்டின் காங்கிரஸ் குழு தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையின் அடிப்படையில், இந்த பிரச்சினைகள் குறித்த பேச்சுவார்த்தைளுக்கு உதவியளிக்க மத்திய அரசாங்கம் தயாராக இருக்கின்றது. தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அனுப்பியிருந்த கடிதத்தில், எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் இந்திய, இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளை நடத்த ஏற்பாடு செய்யுமாறு கோரியிருந்தார். இதற்கு இந்திய அரசாங்கம் எந்த வேளையிலும் தயாராக இருப்பதாகவும், டிசம்பருக்கு முன் இந்த பேச்சுவார்த்தை நடத்த தமிழகம் கோரினாலும், அதற்கான ஏற்பாட்டினை செய்வதாகவும் பி.எஸ் ஞானதேசிகள் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையர் பலர் மலேசியாவில் கைது-

விசா நிபந்தனைகளை மீறிச் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் மலேசியாவில் கைதாகியுள்ள இலங்கையர்களுக்கு இலங்கையிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எந்தவிதத்திலும் பொறுப்புக்கூறாது என்று அப்பணியகம் இன்று அறிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் விசாவில் மலேசியாவுக்குச் சென்றுள்ள இலங்கையர்கள் பலர் அங்கு வேலைவாய்ப்புக்களைத் தேடி அழைந்து வந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களில் விடுதலையை தம்மால் உறுதி செய்ய முடியாது என்றும் அதற்காக பணியகம் ஒருபோதும் உதவப்போவதுமில்லை என்றும் பணியகத்தின் பிரதி முகாமையாளர் மங்க ளரந்தெனிய சுட்டிக்காட்டியுள்ளார்.

றாகம சிறையிலிலிருந்து கைதிகள் தப்பியோட்டம்-

கம்பஹா மாவட்டத்தில அமைந்திருக்கும் மஹர சிறைச்சாலையிலிருந்து கைதிகள் மூவர் தப்பியோடியுள்ளனர். நேற்றுமாலை பெய்துகொண்டிருந்த பலத்த மழையின் போதே இம்மூவரும் தப்பியோடியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு தப்பியோடிய கைதிகள் மூவரும் பொலன்னறுவை, மாரவில மற்றும் தங்கொட்டுவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்களைக் கண்டுபிடித்து கைது செய்வதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொலீசார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

அரைவாசி பேர் நேர்மையான அகதிகளே-ஆஸி ஊடகங்கள்-

இலங்கையில் இருந்து படகுகள் மூலம் அவுஸ்திரேலியா செல்கின்றவர்களில் பாதி அளவானவர்கள் நேர்மையான அகதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களத்தின் புதிய ஆய்வினை அடிப்படையாக கொண்டு, அவுஸ்திரேலிய ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன. எனினும் நேர்மையான அகதிகளை கருத்தில் கொள்ளாமலேயே, அவர்களின் வருகை கட்டுப்படுத்துவதற்கு, இலங்கை அரசாங்கத்துக்கு உதவ முன்வந்துள்ளதாகவும், அந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 2 மில்லியன் டொலர்கள் பெறுமதியான இரண்டு கண்காணிப்பு படகுகளை இலங்கைக்கு வழங்குவதாக, அவுஸ்திரேலியாவின் பிரதமர் டொனி எபட் கடந்த வாரம் அறிவித்திருந்தார். Read more

வாதறவத்தை பாய்த் தொழிற்சாலையை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்-

யாழ்ப்பாணம் புத்தூர் வாதறவத்தை கிராமத்திற்கு இன்றுமாலை விஜயம் செய்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் வலிதெற்கு பிரதேசசபை உறுப்பினர் நவலோகராஜா(லோகன்) ஆகியோர் அப்பகுதிகளைப் பார்வையிட்டதுடன், வாதறவத்தை பகுதியில் பாய்த் தொழிற்சாலை அமைந்திருந்த பகுதிக்கும் விஜயம் செய்து தொழிற்சாலையையும் பார்வையிட்டுள்ளனர். சுமார் முப்பது முதல் நாற்பது பெண்கள் வரையில் பணியாற்றி வந்த இந்த பாய்த் தொழிற்சாலை இன்று முழுமையாக அழிக்கப்பட்ட நிலையில் உள்ளது. இந்த தொழிற்சாலையை மீளவும் ஆரம்பிப்பது தொடர்பாகவும், கிராம மக்களின் தேவைகள் குறித்தும் வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், பிரதேச சபை உறுப்பினர் நவலோகராஜா அவர்களும் பிரதேச மக்களுடன் விரிவாக கலந்துரையாடியுள்ளனர். இதனையடுத்து வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் நவலோகராஜா ஆகியோர் வாதறவத்தை விக்னேஸ்வரா சனசமூக நிலையத்திற்கு விஜயம் செய்து சனசமூக நிலையத்திற்கான வீதிப் பிரச்சினைகள், முன்பள்ளிக்கான கட்டிடத் தேவைகள் என்பன தொடர்பாக விரிவாக கலந்துரையாடியுள்ளனர். விக்னேஸ்வரா சனசமூக நிலைய செயலாளர் ரவி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலின்போது பிரதேச இளைஞர்களும், பெண்களும் என பெருமளவிலானோர் கலந்துகொண்டிருந்தனர்.

ஊடக அடக்குமுறைக்கு எதிராக மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் போராட்டம்-

131123144501_lanka_candlelight_vigil_624x351_amilagamage 131123145047_lanka_candlelight_vigil_624x351_amilagamage 131123150628_lanka_candlelight_vigil_624x351_amilagamage 131123151330_lanka_candlelight_vigil_624x351_amilagamageசர்வதேச தண்டனை நிறைவு நாள் இன்று அனுஸ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு ஊடகத்துறைக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் நேற்று மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் போராட்டம் இடம்பெற்றது. இலங்கை இதழியல் கல்லூரி பழைய மாணவர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. இளம் ஊடகவியலாளர்களை ஒரு குடையின்கீழ் ஒன்று திரட்டுவது இதன் இன்னுமொரு நோக்கமாகும். இலங்கை மற்றும் உலகில் ஊடகத்துறை மற்றும் கலைத்துறைக்கு சேவையாற்றி உயிர் நீத்தவர்கள் இதன்போது நினைவு கூறப்பட்டு, அவர்களுக்கு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இதன்போது கருத்து வெளியிட்ட இலங்கை இதழியல் கல்லூரியின் பழைய மாணவர் சங்க செயற்குழு உறுப்பினர் பழனி விஜயகுமார், இலங்கையில் ஊடக சுதந்திரத்திற்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். கருத்து வெளியிடும் சுதந்திரற்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

 

கிளிநொச்சியில் 50 தமிழ் குடும்ப பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை-

D210330340

கிளிநொச்சியில் மூன்று கிராமங்களைச் சேர்ந்த 50 தமிழ்க் குடும்ப பெண்களுக்கு போஷாக்கு இன்மையை காரணம் காட்டி கட்டாயக் கருத்தடை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே கட்டாய கருத்தடை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உரிய விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என யாழ். சிவில் சமுகப் பிரதிநிதிகளும் ஊடகவியலாளர்களும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒரவரான முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஆர்.ஆனந்தராஜாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சிவில் சமுகப் பிரதிநிதிகளுடன் நேற்று யாழ்.கிறின் கிராஸ் ஹோட்டலில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.இச்சந்திப்பில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் பொலிஸ் நிலையங்களில் இடம்பெறும் மொழி உரிமை மீறப்படும் சம்பவங்கள், மீள்குடியேற்றம் தடைப்படுவதற்கான காரணங்கள், இராணுவத்தினரின் அடக்குமுறைகள், சமூகவிரோத சம்பவங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. மேலும் கிளிநொச்சியில் மூன்று கிராமங்களைச் சேர்ந்த 50 தமிழ்க் குடும்ப பெண்களுக்கு போஷாக்கு இன்மையை காரணம்காட்டி கட்டாயக்கருத்தடை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு உரிய விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதன்போது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்; ஆர்.ஆனந்தராஜா, தமது ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலம் முறைப்பாடு வழங்கப்படுமிடத்து உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார். வடக்கில் திட்டமிட்ட சமுகப்பிறழ்வை ஏற்படுத்தும் நோக்குடன் இந்தக்கட்டாய கருத்தடை மேற்கௌ;ளப்பட்டதா என்ற கேள்வி எழுவதோடு தமிழரின் விகிதாசாரத்தை குறைக்க கருத்தடை மருந்தை பயன்படுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. அத்தோடு பெண்களின் உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் அமைப்புகளும் சிவில் சமுகப் பிரதிநிதிகளும் இந்த கட்டாய கருத்தடையை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் போதுமானதாகயில்லை எனவும் இதன்போது குற்றம்சாட்டப்பட்டது.

இலங்கை அகதிகளை இலக்குவைத்தே அவுஸ்திரேலியா கொள்கை வகுப்பு-

படகுமூலம் வரும் சட்டவிரோத அகதிகளை உடனடியாக நாடு கடத்தும் அவுஸ்திரேலியாவின் கொள்கை, இலங்கை அகதிகளை மாத்திரமே இலக்கு வைத்து மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் தாதியாக கடமையாற்றும் ஒருவர், த கார்டியன் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளார். கிறிஸ்மஸ் தீவில் உள்ள அகதிகள் மிகவும் மோசமான நிலையில் வாழ்கின்றனர். அங்கு போதிய இடவசதிகள் இல்லை. இதற்கிடையில் புதிதாக வரும் அகதிகளை ஓரிரு வாரங்களுக்குள் மீண்டும் நாடுகடத்தும் கொள்கையை அவுஸ்திரேலிய அரசு கடைப்பிடிக்கிறது. எனினும் இது இலங்கை அகதிகளை மாத்திரமே இலக்கு வைத்து நடத்தப்படுகிறது என குறித்த தாதி கூறியுள்ளார். ஏனைய அகதிகள் யாரும் அவ்வாறு நாடுகடத்துலுக்கு உட்படுத்தப்படுவதில்லை. இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து 47 நாட்கள் பயணம் மேற்கொண்டு வருகின்ற தமிழ் அகதிகள், இவ்வாறு உடனடியாக திருப்பி அனுப்படுவது, நியாயமற்ற செயல் என்று மேற்படி தாதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அனந்தி சசிதரன் மனித உரிமைக்குழுவில் முறைப்பாடு-

தனது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்திருந்த பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரனின் வடபகுதிக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இதன்போது முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தின்போது பொலிஸாரால் தனது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அனந்தி சசிதரனின் முறைபாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் அனந்தி சசிதரன் முறைபாட்டினை செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த முறைபாடு தொடர்பான விசாரணைகளை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளதாக கலாநிதி பிரதிபா மஹாநாமஹேவா மேலும் கூறியுள்ளார்.

இலங்கையின் மறுசீரமைப்புக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு-

இலங்கையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் நீசா பீஸ்பால் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் அரசியல் அபிவிருத்தியுடன், எதிர்கால வேலைத்திட்டங்களுக்கும் அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கும் என்று துணை இராஜாங்கச் செயலாளர் நீசா பீஸ்பால் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கவிஞரும், நடிகருமான வீ.எஸ்.எஸ் ஜெயபாலன் கைது-

உள்நாட்டு வீசா சட்டமூலத்தை மீறியமைக்காக கவிஞரும், நடிகருமான வீ.எஸ்.எஸ். ஜெயபாலன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். சுற்றுலா வீசாவில் வந்து, வேறு பணிகளில் ஈடுபட்டமைக்காக அவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலீஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். ஜெயபாலன் வவுனியா மாங்குளம் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டார். வீ.எஸ்.எல் ஜெயபாலன் தற்போது நோர்வேயின் பிரஜா உரிமை கொண்டவர். அவர் தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வுதுறை அதிகாரிகள் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண மேலும் கூறியுள்ளார்.

பிரதியமைச்சர் சந்திரசேன, அமைச்சராக பதவியேற்பு-

பிரதி பொருளாதார அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். விசேட வேலைத்திட்டகள் அமைச்சராகவே அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் சிரேஷ்ட அமைச்சர்கள் அடங்களாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 57 பேரும், பிரதியமைச்சர்கள் 38 பேரும் செயற்றிட்ட அமைச்சர்கள் இருவரும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மாளிகையிலுள்ள மரத்திலேறி ஆர்ப்பாட்டம்-

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பதற்கு இடமளிக்கும் வரையில் தான் இறங்க மாட்டேன் என்று கூறி ஜனாதிபதி மாளிகையிலுள்ள மரத்திலேறி ஒருவர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார். நகர அபிவிருத்தி அதிகார சபையின் முன்னர் சிரேஷ்ட உதவியாளர் ஒருவரே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அநுராதபுரத்திலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இருக்கின்ற மரத்திலேயே ஏறி அவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். வட மத்திய மாகாண சபையின்கீழ் சாரதியாக சேவையாற்றிய அவர் ஒழுக்காற்று நடவடிக்கையின் பின்னர் 2007 ஆம் ஆண்டு சேவையிலிருந்து நீக்கியதாகவும் தனக்கு ஏற்பட்ட அசாதாரணத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவருவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காமையை அடுத்தே அவர் மரத்திலேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அநுராதபுரத்திலுள்ள மாளிகைக்கு இன்று சனிக்கிழமை வருகைதந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

போர்க் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்: ப.சிதம்பரம்-

மனித உரிமை மீறல் குற்றவாளிகளை இலங்கை அரசு விசாரணை நடத்தி தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் நேற்று நடைபெற்ற 2ஆவது தெற்காசிய டயஸ்பரா கன்வென்ஷன் மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம் சிறுபான்மை தமிழ்மக்கள் இன்னலுற்று வருகிற இலங்கையில் முதலீடுகள் செய்ய ஏன் அனுமதிக்க வேண்டும்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதலிளித்து பேசிய அவர், தனது சொந்த நாட்டு மக்களுக்கும், உலகமெங்கும் உள்ள மக்களுக்கும் பதில் அளிக்க வேண்டிய கடமை இலங்கை அரசுக்கு உண்டு. இந்த விடயத்தில் மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தி அதற்கு காரணமானவர்களை இலங்கை தண்டிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மனித உரிமை மீறல் பிரச்சினையைப் பொருத்தமட்டில் எந்த நாடு, எந்த மக்கள் என்ற எல்லைகள் கிடையாது. எனவே இதில் இலங்கை அரசுக்கு பொறுப்பு இருக்கிறது. மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க வேண்டும். அந்த சதிகாரர்களைப் பிடித்து நீதியின் முன் நிறுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

யுத்த குற்றங்கள் தொடர்பில் எந்தவொரு ஆதாரத்தையும் கொண்டு போக முடியாது: ராவணா பலய-

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறுப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் எந்தவொரு ஆதாரத்தினையும் யாரும் கொண்டுபோக முடியாது. எம் மீது விசாரணைகளை மேற்கொள்ள முன்னர் பிரித்தானியாமீது சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என நேற்றைய ஆர்ப்பாட்டத்தின்போது ராவணா பலய பௌத்த அமைப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர். பிரித்தானியா மீது விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென்ற மகஜரை கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரத்திடம் அவர்கள் நேற்று கையளித்தனர். பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனுக்கு எதிராகவும் பிரித்தானியாவிற்கு எதிரான மனித உரிமை மீறல் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் நேற்று ராவணா பலய பௌத்த அமைப்பினால் கொழும்பு பிரித்தானிய உயர் ஸ்தானிகரத்துக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் மற்றும் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் படங்களை பதித்த பதாதைகளை ஏந்தியும் கோசங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இலங்கையை கெமரூன் கையாண்ட முறை தவறு-இந்தியா-

பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் இலங்கையில் யுத்தக் குற்றத்தை கையாண்ட முறையை கேள்விக்கு உள்ளாக்கியதுடன் இவ்வாறான முறை தீங்கானது என இந்தியா கூறியுள்ளது. சாதாரண மக்கள்மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டை விசாரிக்க சுயாதீனமான ஒரு செயன்முறையை அமைக்க இலங்கைக்கு 4 மாத அவகாசம் வழங்கி இது நடைபெறாதுவிடின் இலங்கை ஐ.நா ஆதரவுடனான ஒரு சர்வதேச விசாரணைக்கு முகம்கொடுக்க வேண்டியிருக்குமென கெமரூன் கூறியிருந்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதற்கு பதிலளிக்கும் வகையில் ‘கண்னாடி வீட்டிலிருப்போர் கல்லெறியக் கூடாது’ எனவும் இலங்கை இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க தேவையெனக் கருதும் காலத்தை எடுக்கும் எனவும் கூறியிருந்தார். டெல்லியிலுள்ள இந்திய அரச வட்டாரங்கள் கெமரூனின் அணுகுமுறையை நிராகரித்துள்ளன. கெமரூன் மாதிரி நாம் நடந்துகொள்ள மாட்டோம் என அவர்கள் கூறியுள்ளனர். வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் பொதுநலவாய தலைவர்கள் உச்சிமாநாட்டுக்கு சென்றிருந்தமை இலங்கை பற்றிய இந்தியாவின் அக்கறையின் வெளிப்பாடாகும் எனவும் இந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஆஸியிலிருந்து 79பேர் திருப்பி அனுப்பிவைப்பு-

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் சென்றவர்களில் 79பேர் பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். கடந்த 10ஆம் திகதி அவுஸ்திரேலியா சென்றடைந்த குழுவொன்றே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் கூறியுள்ளது. ஆஸி அரசாங்கத்தின் புதிய கொள்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, நீங்கள் படகு மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா வந்தால் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவீர்கள் எனும் கடுமையான செய்தியையும் அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலிய அரசின் குடிவரவுக் கொள்கை முன்னொருபோதும் இல்லாதவாறு கடுமையாக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த 2012 ஒக்டோபர் மாதத்திலிருந்து படகுமூலம் அவுஸ்திரேலியா சென்ற 1,100க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். கடத்தல்காரர்களுக்கு பணம் செலுத்துவோர் தமது உயிரை ஆபத்துக்கு உள்ளாக்குவதுடன் பணத்தையும் வீணடிக்கின்றனர். இங்கு அவர்களுக்கு விஸா கிடையாது. இவர்கள் எதற்காக பணம் கொடுத்தார்களோ அது அவர்களுக்கு கிடைக்காது. அதனால் இவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவர். அவுஸ்திரேலிய அரசாங்கம் படகு மூலம் வருவோரை திருப்பி அனுப்புவதை தொடர்ந்து முன்னெடுக்கும் என்று அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் செய்தியில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஈரான் கடற்படையின் நீர்மூழ்கி கப்பல்கள் இலங்கையில்-

ஈரானின் 28ஆவது கடற்படையணியின் ஒரு தொகை போர்க்கப்பல்கள் மற்றும் (நீர்மூழ்கிக் கப்பல்கள்) தரீக் சப்மரீன்கள் மும்பை மற்றும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று அந்நாட்டின் பஃர்ஸ் செய்திச்சேவை தெரிவித்துள்ளது. தங்களது போர்க் கப்பல்கள் தெற்காசியாவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பதாக ஈரான் கடற்படையின் செயற்பாட்டுப் பிரிவின் கட்டளை அதிகாரி லெப்டினன் கமாண்டர் ஷியாவஸ் ஜரா கூறியுள்ளார். இந்த கப்பல்கள் மற்றும் சப்மரீன்கள் கொழும்பு மற்றும் மும்பாய் துறைமுகங்களை அடையும் என்றும் ஷியாவஸ் குறிப்பிட்டுள்ளார். இந்த போர்க்கப்பல்களின் நோக்கம் இதுவரையில் தெளிவுபடுத்தப்படாத போதிலும் ஈரான் கடற்படையின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு இதுவொரு அனுபவமாக அமையும் என பஃர்ஸ் செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள் நடா, ரவிவர்மா ஆகியோரின் நினைவுக் கூட்டம்-

வீரகேசரி பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் செல்லையா நடராஜா (நடா) மற்றும் தினக்குரல் ஊடகவியலாளர் பரமகுட்டி மகேந்திரராஜா (ரவிவர்மன்) ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் இன்றுமாலை 6மணியளவில் கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் விநோதன் மண்டபத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது. இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத் தலைவர் அனந்த பாலகிட்டனர் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தினக்குரல் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் வி.தனபாலசிங்கம் அமரர் நடராஜாவுடன் பணியாற்றிய அனுபவங்கள் தொடர்பாகவும், ரவிவர்மாவின் ஊடகப்பணி குறித்தும் உரையாற்றினார். இதனையடுத்து ஊடக ஆசிரியர்கள் உள்ளிட்ட ஊடகத்துறையினர் நடா மற்றும் ரவிவர்மன் ஆகியோரின் ஊடகப் பணிகள் தொடர்பாக உரையாற்றினர். இதன்போது சிவராஜா, தேவகௌரி, அன்னலட்சுமி ராஜதுரை ஆகியோரும் சட்டத்தரணி தர்மராஜ் அவர்களும் உரையாற்றினார்கள். இதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர் நிக்சன் அவர்கள் நடா மற்றும் ரவிவர்மனின் ஊடகப் பணிகள் தொடர்பாக உரையாற்றியதுடன், நன்றியுரையாற்றி நிகழ்வினை நிறைவுசெய்தார். இதன்போது அமரர் ரவிவர்மனின் குடும்பத்தினருக்கு உதவித் தொகையும் வழங்கப்பட்டது. இந்த நினைவுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், பா.அரியநேந்திரன் ஆகியோரும், வேலணை வேணியன் மற்றும் ஊடகத்துறையினரும், அரசியல் பிரமுகர்களும், பொதுமக்களும் பங்கேற்றிருந்தனர்.

சர்வதேசத்துக்கு செவி சாய்க்க வேண்டும்-அலிஸ்டயார் பர்ட்-

சர்வதேச நாடுகள் வலியுறுத்துகின்ற விடயங்களுக்கு இலங்கை அரசாங்கம் முதலில் செவி சாய்க்க வேண்டும் என பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சின் துணை செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினருமான அலிஸ்டயார் பர்ட் தெரிவித்துள்ளார். இந்த விடயங்களுக்கு செவி சாய்த்ததன் பின்னர், அதனுடன் இணங்கி நடப்பதா? எதிர்ப்பதா? என்பது தொடர்பில் தீர்மானிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது புலொக் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றில் இந்த விடயத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரித்தானிய பிரதமர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்க தீர்மானிக்கப்பட்ட கடுமையானது. எனினும் அதுவே சரியான தீர்மானம். இதன்விளைவாகவே இலங்கையின் வடமாகாணத்துக்கு முதன் முதலாக வெளிநாட்டு அரச தலைவர் ஒருவரால் விஜயம்செய்ய முடிந்தது. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமுலாக்குவது தொடர்பில், சாதகமான பதில் ஒன்றையே இலங்கை அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே இலங்கை அரசாங்கத்தின் எதிர்கால மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்றதாக அமையும் என்றும் அலிஸ்டயார் பர்ட் கூறியுள்ளார். மாறாக சர்வதேச நாடுகளின் ஆலோசனைகளை புறக்கணிப்பதால், எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுநலவாயத்தில் இந்தியா பங்கேற்றதற்கு எதிராக வழக்கு-

இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகளின் உச்சிமாநாட்டில் கலந்துகொண்டமைக்கு எதிராக இந்திய மத்திய அரசின்மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது என்றும், அதனால் இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டை இந்திய அரசு புறக்கணிக்க வேண்டும் என்றும் தமிழக சட்டசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.. பல்வேறு தமிழ் அமைப்புகளும் இந்த கோரிக்கையை வலியுறுத்தியிருந்தன. ஆனால், இந்திய அரசு சார்பில் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் அதிகாரிகள் இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொண்டிருந்தனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், இப்போது இந்திய உச்சநீதிமன்றத்திலும் மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆர்ப்பாட்டக் காரர்களுக்கு எச்சரிக்கை-

இலங்கை தொடர்பாக தமிழ் நாட்டில் ஆர்ப்பாட்டங்களை நடத்தும்போது, தொடரூந்துகளில் ஏறி இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டாம் என மத்திய அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசாங்கத்தின் தகவல் அறிவிப்பு சபை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தொடரூந்துகளில் ஏறி போராட்டம் நடத்துவதால், மின்சார தாக்கம் மற்றும் தவறி விழும் அபாயம் போன்ற பாதிப்புகள் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இவ்வாறு தொடரூந்துகளை மறித்து, அவற்றில் ஏறி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளை தத்தெடுக்க 8000 பேர் தயார் நிலையில்-

குழந்தைகளை தத்தெடுப்பதற்கு எண்ணாயிரத்திற்கும் அதிகமானவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு திணைக்களம் குறிப்பிடுகின்றது. மேல்மாகாணத்திற்கான பட்டியலில் மாத்திரம் 3000பேர் இருப்பதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் யமுனா பெரேரா கூறியுள்ளார். இதனைத்தவிர, 400க்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் குழந்தைகளை தத்தெடுப்பதற்கு பதிவுசெய்துள்ளதாக அவர் கூறியுள்;ளார். குழந்தைகளை தத்தெடுப்பதற்கு தகுதியானவர்களா என்பது தொடர்பில் மாகாண நன்னடத்தை திணைக்களத்தின் ஊடாக ஆராய்ந்ததன் பின்னர் பெற்றோரற்ற குழந்தைகளை அவர்களுக்கு தத்துக் கொடுக்கவுள்ளதாக யமுனா பெரேரா குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டவர்களுக்கு குழந்தைகளை தத்துக்கொடுத்தபின் அவர்கள் தொடர்பில் மேற்பார்வை செய்யவுள்ளதாகவும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

சீமெந்து ஆலையில் குடியமர மாட்டோம்;-மயிலிட்டி மக்கள்-

மயிலிட்டி மக்களை யாழ். மாவிட்டபுரம் சிமெந்து தொழிற்சாலைக் காணியில் குடியமர்த்துவதற்குத் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தால் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போதும் மக்கள் அதில் ஆர்வம் காட்டவில்லை. இது தொடர்பில் பதிவுகள் மேற்கொள்ள நலன்புரி நிலையங்களுக்குச் சென்ற கிராம சேவையாளர்களிடம் மக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததுடன் தமது சொந்த இடங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளனர். வலி.வடக்கில் தமிழ் மக்களின் 6ஆயிரத்து 384 ஏக்கர் சொந்தக் காணிகள், இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்குள் உள்ளடங்கும் 24 கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் தமது சொந்தக் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மயிலிட்டி வடக்கு (ஜே-246) பலாலி விமானத்தளம் அமைந்துள்ள பகுதியைச் சேர்ந்த மக்களை, கீரிமலை மாவிட்டபுரம் வீதியில் காங்சேன்துறை சிமெந்து ஆலைக்குச் சொந்தமான சிமெந்துக் காணியில் மீளக் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மயிலிட்டி வடக்கில் மீளக் குடியமர்வதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்திருந்த நிலையில், வேறிடத்தில் மீளக் குடியமர்த்தும் நடவடிக்கைக்காக 60 பேர் வரையிலேயே பதிவு செய்துள்ளனர். தமது சொந்த இடங்களே தமக்குத் தேவை என்ற நிலைப்பாட்டில் பெரும்பாலான மக்கள் சிமெந்து ஆலைக் காணியில் மீளக்குடியமர மறுப்புத் தெரிவித்து வருகின்றமை இங்கு குறிப்பிட்டத்தக்கது.

ஊடகவியலாளர்களான அமரர்கள் நடா, ரவிவர்மா ஆகியோரின் நினைவுக் கூட்டம்-

வீரகேசரி பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் நடா என்கிற செல்லையா நடராஜா, மற்றும் ரவிவர்மா என்கின்ற தினக்குரல் ஊடகவியலாளர் பரமகுட்டி மகேந்திரராஜா ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் நடைபெறவுள்ளது. நாளைமாலை 5.30மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் விநோதன் மண்டபத்தில் இந்த நினைவு அஞ்சலிக் கூட்டம் நடைபெறுவுள்ளது. ஊடகத்துறையினர் மற்றும் நண்பர்கள், உறவினர்கள் அனைவரையும் இதில் கலந்து கொள்ளுமாறு இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. ஒன்றியத்தின் தலைவர் அனந்த் பாலகிட்டனர் தலைமையில் இடம்பெறும் இக்கூட்டத்தில் தினக்குரல் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் வி.தனபாலசிங்கம் அமரர் நடராஜாவுடன் பணியாற்றிய அனுபவங்கள் தொடர்பாக பிரதான உரையாற்றவுள்ளார். இதனையடுத்து ஊடகத்துறை நண்பர்கள் ரவிவர்மனின் ஊடகப் பணிகள் தொடர்பாக உரையாற்றவுள்ளனர். நிகழ்வில் பங்கு கொள்ளுமாறு ஊடகத்துறையினர் உட்டப அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றார்கள்.