இந்தியப் பிரதமர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய வாய்ப்பு-

இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன்சிங் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மத்திய நிதியமைச்சர் பா சிதம்பரம் இந்தத தகவலை வெளியிட்டுள்ளார் சென்னையில் நேற்று இலங்கை தமிழர் தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய சிதம்பரம், வடக்கு முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரனை சந்தித்து பேச்சு நடத்தும் நோக்கில் மன்மோகன்சிங்கின் யாழ்ப்பாண விஜயம் அமையும் என்று குறிப்பிட்டுள்ளார் கொழும்பு பொதுநலவாய நாடுகள் மாநாட்டை இந்தியா புறக்கணித்தமையானது அதிர்ச்சி வைத்தியமாகவே மேற்கொள்ளப்பட்டது. 13வது அரசியல் அமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில் இந்தியா உறுதியுடன் உள்ளது. போர்க்குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவேண்டும என்பதே இந்தியாவின் நிலைப்பாடாகும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாடுகளில் பணியாற்றுவோரின் குடும்பத்தினருக்கு அறிவுறுத்தல்-

வெளிநாடுகளில் பணியாற்றுபவர்களின் இலங்கை இல்லங்களுக்கு சென்று சிலர் ஏமாற்று நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் பணியாற்றுபவர்களின் உறவினர்களிட தாம் பல சலுகைகள் வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கும் இவர்கள், அப்பாவி உறவினர்களை ஏமாற்றி வருவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்தப் பணியகம் குறிப்பிட்டுள்ளது. இப்படியானவர்களிடம் அவதானமாக இருக்கும் படி வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.

மாணவர்களுக்கான அடையாள அட்டை ஏழாம் திகதி விநியோகம்-

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு எதிர்வரும் ஏழாம் திகதி விசேட ஒருநாள் சேவையின்கீழ் தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்க ஆட்பதிவு திணைக்களம் உத்தேசித்துள்ளது. எவ்வாறாயினும் அன்றையதினம் அடையாள அட்டைகளை பெறுவதற்காக மாணவர்கள் திணைக்களத்திற்கு வரவேண்டியதில்லை என ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ்.சரத் குமார தெரிவித்துள்ளார். இதற்கமைய உரிய ஆவணங்களுடன் பெற்றோர்களில் ஒருவர் ஆட்பதிவு திணைக்களத்திற்கு வருகைதந்து அதனைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாணவர்கள் சார்பில் ஆசிரியர்களும் தேசிய அடையாள ஆட்டைகளை பெற்றுக்கொள்ள முடியுமென்றும் ஆட்பதிவுத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

வாக்காளர் இடாப்பு குறித்து ஒரு இலட்சத்து 50 ஆயிரம் மேன்முறையீடுகள்-

2013ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு தொடர்பாக ஒரு இலட்சத்து 50 ஆயிரம் மேன்முறையீடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் இருந்தே அதிகளவிலான மேன்முறையீடுகள் கிடைத்துள்ளதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் கூறியுள்ளார். அந்த மேன்முறையீடுகள் தற்போது மாவட்ட செயலக மட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வாக்காளர் இடாப்பில் பெயர் உள்ளடக்கப்படாமை, விலாசம் உரிய முறையில் குறிப்பிடப்படாமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் மேன்முறையீடுகள் கிடைத்துள்ளதாகவும் பிரதி தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார் 2013 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பு எதிர்வரும் 31 ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

எந்தத் தேர்தலை முதலில் நடத்துவது என்பதில் குழப்பம்-

2014ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலையா அல்லது மேல்மாகாண சபைத் தேர்தலையா முதலில் நடத்துவது என்ற விடயத்தில் அரச கூட்டுக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மேல்மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்தினால் அது அரசுக்கு சாதகமாக அமையும் என அரசின் பங்காளிக் கட்சிகள் இரண்டு தமது தரப்பு ஆலோசனையை முன்வைத்துள்ளன. எனினும், இதற்குக் கூட்டணி அரசின் பிரதான பங்காளியான சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். மேல்மாகாண சபையை முதலில் கலைத்துவிட்டு, தேர்தல் பரப்புரையின் போது ஜனாதிபதித் தேர்தல் குறித்தான அறிவிப்பை விடுவதே சிறந்தது என்பதே அவர்களின் வாதமாகும். இதனால், இதுதொடர்பில் ஆராய்ந்து இறுதி முடிவொன்றை எடுப்பதற்காக சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் அகில இலங்கை மத்தியக்குழுக் கூட்டம் எதிர்வரும் 18 ஆம் திகதி கூடவுள்ளது. இதன்போது, ஜனாதிபதி மற்றும் மேல்மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இறுதி முடிவொன்றை அரச தரப்பு எடுக்கும் என நம்பப்படுகின்றது.

இலங்கைக் கடற்படைக்கு இந்தியாவில் பயிற்சி, ஜெயலலிதா கண்டனம்-

இலங்கை கடற்படையினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கும் முயற்சிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கையில் தமிழர்களுக்கு மறுவாழ்வு என்பது கேள்விக் குறியாக உள்ளது. தமிழக மீனவர்களும் இலங்கை படையால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். மீனவர்கள் மீதான தாக்குதல் தொடரும் நிலையில், இலங்கை கடற்படை வீரர்களுக்கு பயிற்சி தர இந்திய கடற்படை முடிவு செய்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது. ஏற்கனவே வெலிங்டனில் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி தருவதை கண்டித்து 4முறை கடிதம் எழுதியுள்ளேன். இந்நிலையில் இலங்கை வீரர்களுக்கு இந்தியாவில் பி.டெக் பயிற்சி அளிக்கபடும் முடிவை கடுமையாக எதிர்க்கின்றேன் என அவர் மேலும் கூறியுள்ளார்.

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் கொலை: ஒருவர் கைது-

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெஷிசன் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் நெடுந்தீவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினருமான டானியல் றெஷிசின் கடந்த 26 ஆம் திகதி புதன்கிழமை அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார். பிடரிப் பகுதியில் காயமிருந்தமையினால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பொழுது, அவரது தலையிலிருந்து துப்பாக்கி ரவை ஒன்று மீட்கப்பட்டது. தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் பிரதேச சபைத் தலைவர் இறப்பதற்கு முன்னர் பயணம் செய்த ஆட்டோவில் இருந்த நபர் தொடர்பில் விசாரணையினை முடக்கி விட்டிருந்தனர். இந்நிலையில், நெடுந்தீவினைச் சேர்ந்த நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் ஊர்காவற்றுறை பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.